10 June, 2006

ஈழத்தமிழர் குறித்து தமிழகத்தமிழர் கருத்து.

ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் சிக்கல் எப்போதோ தீர்வு கண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு எதிரான கிழக்கு வங்க மக்களின் எழுச்சிக்கு இந்திரா கண்ட தீர்வு இதற்கு முன்னுதாரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ராஜீவின் மரணம் என்ற ஒரே காரணத்தைச் சுட்டிக்காட்டி நம் தார்மீகக் கடமையை நிறைவேற்றாமல் கையைக் கட்டிக் கொண்டிருப்பதும் இதில் மேலை நாடுகளைத் தாராளமாக தலையிட அனுமதித்து பார்வையாளர்கள் நிலையில் இருந்து கொண்டு இருப்பதும், உலகின் மிகப் பெரிய சனநாயக நாடாகிய நமக்கு ஏற்புடையதன்று. சோம. நடராசன், கரூர். நீதியின் பக்கம் நிற்போம் "விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதித்தது ஐரோப்பியக் கூட்டமைப்பு" எனும் செய்தி (31.05.06) படித்தேன். ஈராக்கின் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அமெரிக்க மக்கள் உள்ளிட்ட உலக மக்களால் "ஆக்கிரமிப்பாளன்'' என வன்மையாகக் கண்டனம் செய்யப்படும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், இலங்கைத் தமிழர்களின் நியாயமான சுயாட்சிக் கோரிக்கைக்கு எவ்விதத்திலும் இணங்காத சிங்களப் பேரினவாதப் போர் வெறி ஆட்சியாளர்களும் இணைந்து மேற்கொண்ட செயலே இது என்பது தெளிவு. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான, கௌரவமான அமைதித் தீர்வு காண ஊறுசெய்யும் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேற்கொண்டுள்ள தடைகளை இந்திய அரசும் தமிழக அரசும் புறக்கணிக்க வேண்டும்; நீதியின் பக்கம் நாம் நிற்க வேண்டும். தி.க.சி., நெல்லை 6. நியாயமான கோரிக்கை ஈழத் தமிழர் பிரச்சினைகள், துன்ப - துயரங்களைப் பற்றி உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக, தக்கச் சான்றுகளுடன் - தீர்வுகளுடன் மறவன்புலவு க.சச்சிதானந்தன் எழுதி வருவதற்கு மேலும் ஒரு சான்று - அவர் எழுதிய "அகதிகளுக்குப் பாதுகாப்பு ஓடை'' (01.06.06) எனும் கட்டுரை. பேசாலை மீனவர்கள் பற்றிய குறிப்புகள் அரிய தகவலாகும். இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பிற்கு இந்திய எல்லைக்குள் "பாதுகாப்பு ஓடை" அமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை மிக நியாயமானது வரவேற்கின்றேன். அவருடைய இந்தத் தனிநபர் கோரிக்கை - தமிழர்களின் கோரிக்கையாக, தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இந்திய அரசிடம் வலியுறுத்தப்பட வேண்டியதாகும். பெ.சு. மணி, சென்னை 33. இலங்கைக்கு உதவக் கூடாது தன் சொந்த மண்ணைவிட்டு உயிர்பிழைக்க தமிழகம் வந்து சேரும் ஈழத் தமிழர்களை மனிதநேயத்தோடு அரவணைப்பதும் அவர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் படகுகளைத் திருப்பி அனுப்புவதும் மிகவும் அவசியமானது. இதுவரை சிங்கள அரசுகள் ஒப்புக்கொண்ட "உடன்பாட்டை" மதித்ததே இல்லை என்பதுதான் வரலாறு. ஆகவே இலங்கை அரசுக்குத் துணை போகக் கூடாது என தமிழக சட்டமன்றத் தீர்மானம் மூலம் இந்திய அரசுக்கு உணர்த்துவது அவசியம். மா.கோ. தேவராசன், சிதம்பரம். காக்கும் படை நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொன்று ஒரே குழியில் போட்டுப் புதைத்த இராணுவத்தையோ, யாழ். நூலகத்திலுள்ள புத்தகப் பொக்கிசங்களைத் தீயிட்டு அழித்த வக்கிர புத்திக்காரர்களைப் பற்றியோ, சிறைக்குள் நிராதவராக இருந்த குட்டிமணியையும் அவருடன் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர்களையும் கண்களைப் பிடுங்கி துடிக்கத் துடிக்கக் கொலை செய்த பாவிகளையோ நாம் மறந்து விடுகிறோம். ஆனால் "தமிழ் அகதிகளை" மிகச் சாதாரணமாக எண்ணி, போனால் போகிறதென்று ஆட்டு மந்தை போல தங்குவதற்கு இடமளிக்கிறோம்! என்ன கொடுமை! நாம் தந்த அன்பளிப்பு கச்சதீவு. அதை நாமே கேட்டுப் பெற வேண்டும் அல்லது பறித்துக் கொண்டு அதில் நமது இராணுவத்தை - தமிழ் அகதிகளை, மீனவர்களைக் காக்கும் படையாக நிறுத்த வேண்டும்! இரா. கல்யானசுந்தரம், அனுப்பானடி நாதியற்ற தமிழர்கள்! "புலம் பெயரும் தமிழர்கள்" - தலையங்கம் (31.05.06) கண்டேன். கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்ததை "இனப் படுகொலை' என அறிவித்து உலக நாடுகளுக்கெல்லாம் பறையறைந்த கையோடு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்காளதேசம் உருவாக முழுமூச்சாக ஈடுபட்டார் இந்திரா காந்தி. சிங்களக் காடையர்களால் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வெட்டிக் கொல்லப்பட்டபோது "இனப் படுகொலை" என்று கூற டில்லியில் யாருக்கும் மனம் வரவில்லை. நேரு - கொத்தலவாலா, சாஸ்திரி - சிரிமாவோ காலத்திலிருந்தே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையை அணுகிய போதெல்லாம் பேரிழப்புக்குள்ளாவோர் தமிழர்களே என்பதை மறந்துவிட முடியாது. யாசீர் அராபத்துக்குத் தூதரகம் அமைக்க அனுமதியும், ஐ.நா. சபையில் அங்கம் வகிக்க உரிமையும் பெற்றுத் தர முன்வந்த இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் இன உணர்வை மதிக்கத் தவறிவிட்டது. ஈழப் போராளிகள் தங்கள் இன விடுதலைக்காகப் போராடுவோர் என்ற அடிப்படை உண்மையைப் புறக்கணித்துவிட்டுச் சிங்கள அரசுடன் சமரசம் செய்து கொள்ளக் கச்சதீவைக் காணிக்கையாக அளித்த இழிவு, தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறித்து அன்றாடம் உயிரையும் பறித்துக் கொண்டிருக்கிறது. மைய அரசைப் பொறுத்த அளவில் ஈழத் தமிழரும் தமிழ்நாட்டுத் தமிழரும் ஒரே இனம் என்று கருத வேண்டிய தேவையின்றி, இங்கே குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்க ஈழத்தில் துப்பாக்கியும் பீரங்கிகளும் முழங்குகின்றன. வங்கதேச அகதிகள் இந்தியாவில் குவிந்தபோது அவர்களின் மறுவாழ்வுக்கென "அகதிகள் நிவாரண நிதி" என்னும் பெயரில் ஒவ்வோர் அஞ்சல் அட்டை, அஞ்சல் உறையில் ஐந்து காசு சிறப்புத் தபால் தலை ஒட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அகதிகளில் இன வேறுபாடு பார்க்கும் மைய அரசு, ஈழத் தமிழர்கள் திடீரென ஆயுதமேந்திய போராளிகளாக மாறிவிடவில்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயனற்றுப் போன நிலையில், ஈழத் தமிழினம் பூண்டற்றுப் போகாமல் தடுக்க ஆயுதமேந்திய போரே இறுதிவழி என்னும் தவிர்க்க இயலாத முடிவுக்கு வர நேர்ந்தது என்று தினமணி நாளேட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். நன்றி>புதினம்.

4 comments:

said...

தமிழகத் தமிழர்களின் (சிலரினாவது)அணுகுமுறை ஆதரவளிப்பதாக இருக்கிறது. இது மேலும் பரவ வேண்டும்.

said...

தமிழன் என்ற வகையில் இலங்கையில் தமிழர்கள் படும் துயரம் உள்ளத்தைத் தைக்கும் முள்ளாகத்தான் உள்ளது. இலங்கையில் தமிழர்கள் அமைதியும் ஆக்கமும் பெற்று வாழ உள்ளம் விரும்புகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது!

இந்தச் சூழ்நிலையில் நல்லதொரு முடிவெடுத்து அதைச் செயலாக்கம் செய்ய முனைவதில் தமிழக அரசுக்கு நிச்சயம் பொறுப்பு உண்டு என்பது மறுக்க இயலாது. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளின் நேர்மையற்ற தன்மையினால் அவர்களை எளிதில் வசைபாடி திசை திருப்பவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆண்டவா.....நீதான் கருணை காட்ட வேண்டும்.

said...

சுந்தரவடிவேல், ராகவன் உங்கள் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

said...

இன்னமும் என் நண்பர்களில் சிலர், விடுதலைப்புலிகள் செய்வது பயங்கரவாதச்செயல், பதிலுக்கு பதில் என்ற வாதத்தையெல்லாம் எடுத்துக்கொள்ள இயலாது என்றெல்லாம் சப்பைக்கட்டி வாதிடும் போது.. இராணுவத்தினர் செய்த அட்டகாசத்தை மட்டும் இவர்கள் கண்ணில் காட்டாமல் மூளைச்சலவை செய்யும் ஊடகங்களை நினைத்து கோபம்தான் எழுகின்றது..