23 June, 2006
சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் ராஜபக்ச.
எந்த ஒரு பிரச்சனையிலும் சுயமாகத் தீர்மானிக்கக் கூடிய ஆளுமை ஏதுமற்றவர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு சாடியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
ராஜ்பக்சவின் கதிரை இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. யார் ராஜபக்சவை கதிரையில் உட்கார வைத்தார்களோ அவர்களே கதிரையை ஆட்டவும் தொடங்கிவிட்டனர்.
உண்மையான செயல்பூர்வ அர்த்தத்தில் ராஜபக்சவை கதிரையில் அமர்த்திய முதலாவது அணியினர் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இரண்டாவது அணியினர்தான் ஜே.வி.பி.யினர்.
ஜே.வி.பி.யினர் ராஜபக்சவோடு தோளோடு தோள் கை கோர்த்து நின்று கதிரைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் ராஜபக்சவை விடுதலைப் புலிகள் கதிரைக்கு அழைத்து வந்த விதமோ மிகவும் விநோதமனது. உண்மையிலேயே அவர்கள்தான் அதனை சாத்தியமாக்கியவர்கள் கூட.
ராஜபக்சவை கதிரையில் ஏற்றிய இருவருமே உண்மையில் அவரது பரம எதிரிகளாவர்.
ராஜபக்சவுடன் சேர்ந்து அவரை கவிழ்ப்பதற்காக கூட்டுச் சேர்ந்தவர்கள் ஜே.வி.பி.யினர். ராஜபக்சவுடன் சேர்ந்து அவருக்கு மேலாக வளர முற்பட்ட சக்தியினர்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்களது நோக்குநிலையும் தந்திரோபாயமும் வேறானதாக இருந்தது. மனதால் எதிரியாக இருந்தாலும் செயலால் ராஜபக்சவை கதிரையில் அவர்கள் அமர்த்தினர்.
இப்போது இந்த இரு எதிரிகளும் கதிரையை ஆட்டத் தொடங்கிவிட்டனர். அதாவது முற்பகுதியில் நண்பர்கள்- பிற்பகுதியில் எதிரிகள்.
நண்பர்களும் எதிரிகளுமாக இருந்த இரு அணியினரும் ராஜபக்சவின் கதிரையை உலுக்கத் தொடங்கியிருப்பதிலிருந்துதான் இலங்கையின் உள்நாட்டு அரசியலை எடைபோட வேண்டியுள்ளது.
கதிரையில் அமர்ந்திருக்கும் ராஜபக்சவின் சுயமான ஆளுமையானது கதிரையில் அவரை எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடித்திருக்க வைத்திருக்கும் என்பது ஒரு கேள்வி.
சிறிலங்காவில் சீர்கெட்டிருக்கும் அரசியல் பின்னணியில் ராஜபக்சவின் ஆளுமையானது எத்தகைய பாத்திரத்தை வகிக்க வல்லவது என்பதை எடைபோடுவது அவசியமாகும்.
ஏனெனில், அவருக்கு ஊடாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவரே அந்தக் கதிரையில் இருந்து தீர்மானங்களுக்கு பொறுப்பானவராக உள்ளார்.
தான் கதிரையில் அமர்வதற்கு செய்யக்கூடிய எல்லா உத்திகளையும் அவர் செய்யத் தொடங்கினார். அதில் ஒன்றுதான் அவரது மகிந்த சிந்தனை என்கிற தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
உண்மையில் மகிந்த சிந்தனை என்பது கால கட்டத் தேவைகளுக்கு சற்றுப் பொருத்தமில்லாத ஒன்று. அது வெற்று வேச கோசமாகும். அந்த வெற்று வேச கோசமானது செயல்பூர்வ அர்த்தத்தில் எத்தகைய பாத்திரத்தையும் வகிக்க முடியாது.
மகிந்த சிந்தனை என்கிற அதனடிப்படையில்தான் தான் கதிரையில் அமருவதற்கான அடித்தளத்தை சிங்கள மக்கள் மத்தியில் அவர் உருவாக்கினார்.
ராஜபக்ச பதவிக்கு வந்தபோது அவரது பிறந்தநாள் பரிசாக அரச தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த பிறந்தநாள் பரிசை உண்மையில் விடுதலைப் புலிகள்தான் கொடுத்தனர்.
ஆனால் இப்போது அந்த பிறந்தநாள் பரிசையும் இலகுவில் தட்டிப் பறிக்கக் கூடிய வித்தைகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர்.
இதுதான் வரலாற்றில் மிகவும் சுவராசியமான எதிர்முரணாகும்.
ஒரு அரசைப் பொறுத்தவரையில் அதிகாரப்பூர்வமான வார்த்தைகளில் பார்ப்பதானால்
அந்த நாட்டின் தலைவராக காணப்படுகிற அரச தலைவர் அல்லது தீர்க்கமான தலைவராகக் காணப்படுகிற பிரதமர் என்பவர்தான் முக்கியமானபாத்திரம் உள்ளவர்களாகக் காணப்படுவர்.
அரச தலைவரையும் பிரதமரையும் விட இராணுவத் தளபதிதான் அந்நாட்டின் பாதுகாப்புக்கும் பாதுகாப்பின் பேராலான மிடுக்குக்கும் பொறுப்பானவர்.
அரச தலைவர் பதவியேற்கும் போது முப்படை மற்றும் காவல்துறையினரால் அரணமைக்கப்பட்ட நிலையில்தான் பதவியேற்கிறார். அப்படியென்றால் ஆயுதப் படையினர் மிகவும் முக்கிய சக்தியானவர்கள்.
சிறிலங்காவில் மிகவும் பிரதானமாக இருப்பது இராணுவமாகும். அந்த இராணுவத் தளபதியினது மிடுக்கும் ஓர்மமும் அரசியலில் ஒரு காத்திரமன பாத்திரத்தை வகிக்க வல்லது.
இப்பின்னணியில்தான் அரச தலைவரும் தனது மிடுக்கை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
இப்போது அந்த தளபதியினது வீழ்ச்சியானது- தாக்குதல் மூலம் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியானது அரச தலைவரை ஓரளவு செயலற்ற நிலைக்கே தள்ளியுள்ளது.
அந்த இராணுவ தளபதியின் வீழ்ச்சியை குறியீட்டு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வோம்.
அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் தன்னுடன் உரையாடிய பலரிடமும் அரச தலைவர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.
முதலாவதாக பதவிக்கு வருவதுதான் பிரச்சனை என்றும்
பதவிக்கு வந்தால் தன்னால் பிரச்சனையைக் கையாள முடியும் என்றும்
நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.
ஒருவகையில் அவரிடம் கற்பனை இருக்கவே செய்தது.
பதவிக்கு வந்த பின்பு ஜே.வி.பி.யினரையும் விடுதலைப் புலிகளையும் தன்னால் இலகுவாகக் கையாண்டுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
ஆனால் யதார்த்தம் அதற்கு நேர் முரணாகவே இருக்கிறது.
ராஜபக்ச பதவிக்கு வந்தபோது இருந்த கற்பனை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காட்சியளிக்கிறது.
அவரது மகிந்த சிந்தனை என்பது எவ்விதமான திட்டமுமில்லாத முழு நீளமான கற்பனாவாதமாகக் காணப்படுகிறது. அவர் இப்போது எதுவித அரசியல் பொருளாதாரத் திட்டத்தை கொண்டிருக்கவில்லை. அதற்கான நடைமுறையையும் கொண்டிருக்கவுமில்லை. இப்படியான ஒரு தலைவன் நாட்டுக்கு இருக்க முடியாது.
ராஜபக்சவிடம் இலங்கைத் தீவு பற்றிய எதுவிதமான பார்வையும் இல்லை.
அவர் பதவிக்கு வந்தபோது அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் படர்ந்திருந்தது உண்மைதான். ஆனால் அந்த ஒளிவட்டம் மிக விரைவில் கரைந்து போய்விட்டது.
அவர் தன்னைச் சூழ்ந்திருக்கக் கூடிய ஒளிவட்டத்தைக் காப்பாற்றக் கூடிய திட்டத்தையும் ஆளுமையையும் அவர் கொண்டிருக்கவில்லை.
இனப்பிரச்சனைக்கான தீர்வு காண்பதில் தீர்க்கமான போக்குகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பதும் அவர் இயல்பில் சுயமாகத் தீர்மானம் எடுக்கக் கூடிய திறமையற்றவராகவே அவர் எப்போதும் காணப்பட்டிருக்கிறார்.
அவர் வாழ்நாளில் சுயமாகத் தீர்மானமெடுத்து அரசியல் ரீதியாக திட்டங்களை நிறைவேற்றியவராக இல்லை. இனியும் அவரால் சுயமாக ஒரு திட்டத்தைத் தீர்மானித்து சுயமாக நிறைவேற்ற முடியும் என்பது முடியாதது.
எதிர்காலப் பார்வை ஏதுமற்ற ஒரு தலைவனாகவே ராஜபக்ச எம்முன் காட்சியளிக்கிறார்.
எந்த ஒரு பிரச்சனையையும் கையாளக் கூடியவராக அவர் இல்லை என்பதை அவரைச் சூழ்ந்திருப்பவர்கள் கண்டுகொள்கிறார்கள். உண்மையிலே அவரின் அடிப்படை எதிரிகளாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் சந்திரிகா அணியினரும் ஜே.வி.பியினரும் கட்டங்களைப் பயன்படுத்தி தம்மை முன்நிறுத்தத் தொடங்கிவிட்டனர்.
ராஜபக்சவைப் பொறுத்தவரை நான்கு முனைகளிலும் அவருக்கு எதிரிகள் உள்ளன.
நண்பர்கள் எவரும் இல்லை.
ஒரு புறம் புலிகள்-
மாற்றுக் கருத்துக்கு இடமற்ற- விட்டுக்கொடுக்கப்பட முடியாத உரிமைகளின் பொருட்டு அவர்களின் நிலைப்பாடு உறுதியான தளத்தில் செயற்படத் தொடங்கியிருக்கிறது
மறுபக்கம் ஜே.வி.பியினர்
சூழலைப் பயன்படுத்தி பிரச்சனைகளைக் கிளறி அவற்றின் மூலம் தம்மை வளப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுகின்றனர்.
இந்தப் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் தீர்வுத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகளில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
மறுபக்கமாக அரசாங்கத்தின் மீதான தாக்குதலை புரிந்துள்ளனர்.
சுதந்திரக் கட்சியில் தலைமைக்காகப் போராடுவதற்காக பண்டாரநாயக்க குடும்பம் புறப்பட்டுவிட்டது. சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை சந்திரிகா இன்னமும் விட்டுவிடவில்லை. சந்திரிகா இப்போது ஒரு பதவியிலும் இல்லாமல் இருக்கலாம். அதாவது அரசியலில் தீர்மானம் எடுக்கக் கூடிய அமைச்சுப் பதவியோ நாடாளுமன்ரப் பதவியோ இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவரை இன்றும் சிங்கள மக்கள் தேசிய சின்னமாகக் கருதுகின்றனர்.
ராஜபக்சவின் செயற்பாடுகள் காத்திரமானதாக இல்லாதபோது- இலங்கைத் தீவு நெருக்கடிக்குள்ளாகிறபோது தங்கள் கட்சிக்குள் இன்னொரு காத்திரமான தலைவராகக் காணக்கூடிய சந்திரிகா தொடர்ந்தும் இருக்கிறார். அப்படியென்றால் ராஜபக்சவை பொறுத்தவரையில் முடிவடையாத உட்கட்சிப் போராட்டத்தில் இழுத்துவிடப்பட்டுள்ளார். உள்நாட்டு- வெளிநாட்டு சிக்கல்களுக்குள்ளும் மாட்டுப்பட்டுள்ளார்.
இப்பின்னணியில் இலங்கைத் தீவின் அரசியல் மேலும் மேலும் சீரழிந்து- குழப்பகரமானதாகவே இருக்கக் கூடியதாகவும் உள்ளது என்றார் திருநாவுக்கரசு.
´
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment