29 June, 2006

ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்: இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும். உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். "நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது" என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும். பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது. அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது. சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து வடக்கு - கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும். தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார். "தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்" என்று தெரிவித்திருந்தார். தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும். இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து- வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்-

0 comments: