15 June, 2006

விமான குண்டு வீச்சுக்கு ஆழிப்பேரலை அகதிமுகாம் தப்பியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை மாலை சிறிலங்கா விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான நான்கு கிபீர் விமானங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அடங்கிய வன்னி வான்பரப்பில் இன்று மாலை 6.25 மணிக்கு மீண்டும் நுழைந்தன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மாலை 6.25 மணி முதல் 6.35 வரை நான்கு தடவை நான்கு குண்டுகளை வீசி விட்டுச் சென்றன. இக்குண்டு வீச்சுத் தாக்குதலை 10 நிமிட நேரம் தொடர்ச்சியாக நடத்தினர். அதன் பின்னர் மீண்டும் 6.45 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசிச் சென்றன. அதைத் தொடர்ந்து 6.55 மணிக்கு இரு கிபீர் விமானங்கள் மீளவும் குண்டுகளை வீசின. ஒவ்வொரு விமானமும் ஒவ்வொரு குண்டை வீசின. வானில் மிக உயரத்தில் பறந்தவாறு ஏவுகணை எதிர்ப்பு சாதனத்தை இயக்கியபடியே விமானங்கள் குண்டுகளை வீசின என்று கிளிநொச்சியிலிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். அதேபோல் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான தரவை மற்றும் புலிப்பாய்ந்தகல் பகுதிகளில் மாலை 3.15 மணியளவில் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் கூறியுள்ளார். மேலும் வவுணதீவு சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி மோர்ட்டார் எறிகணைகள் மூலம் இன்று காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முன்னதாக இன்று காலையில் முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின. இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு முல்லைத்தீவு வான்பரப்பில் நுழைந்து செல்வபுரம் வட்டுவாகல் மக்கள் குடியிருப்புகளையும் ஆழிப்பேரலை அகதிகள் முகாமையும் இலக்குவைத்து இரு குண்டுகளை வீசின. இதில் மக்கள் 5 பேர் காயமடைந்தனர். குடியிருப்புக்கள் சேதமாகின. மேலும் கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மீண்டும் முற்பகல் 11.57 மணிக்கு இரண்டாவது முறையாக கிபீர் விமானங்கள் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் 300 பேர் தங்கியிருந்த ஆழிப்பேரலை அகதிகள் முகாம் தப்பியது. இதையடுத்து அங்கிருந்து ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அகதிகள் வெளியேறியுள்ளனர். கடற்பரப்பிலிருந்து மூன்ற கடல்மைல் தொலைவில் சிறிலங்காவின் டோரா அதிவேகத் தாக்குதல் படகுகள் விமானக் குண்டு வீச்சை அவதானித்துள்ளன. ஆழிப்பேரலை அகதிகள் முகாம் அருகே ஆறு குண்டுகள் விழுந்துள்ளன. இரு குண்டுகள் வெடிக்க்கவில்லை. இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 10 நிமிட இடைவேளையில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் தற்போதும் திடீரென தொடர் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் நடத்தி வருகிறது. நன்றி>புதினம்

0 comments: