14 June, 2006

கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு.

யதார்த்த நிலைமைக்கு புறம்பானவற்றைத்தான் மகிந்த சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்கிறார்: இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள யதார்த்த நிலைமைக்குப் புறம்பானவற்றைத்தான் ஊடகங்களிலும் சர்வதேச சமூகத்திடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருவதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளார். போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தால் இந்தத் தீவில் நாங்கள் தொடர்ந்து இயங்குவோம். இல்லையெனில் இயங்க மாட்டோம். போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இல்லாத நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் இல்லாமல் போகும். சிறிலங்கா அரசாங்கமும் அரச படையினரும் இணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் ஆணைகளுக்கு அரச படையினர் கீழ்படிந்து செயற்பட வேண்டிய காலம் இது. அண்மையில் உண்மைகளின் அடிப்படையிலான அறிக்கை கண்காணிப்புக் குழுவினரால் வெளியிடப்பட்டது. அதில் சில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். பொதுமக்கள் பகுதியில் நடைபெறும் படுகொலைகள் குறித்த அரசாங்கத்தின் விசாரணைகள் பாரபட்சமாக உள்ளன. வடக்கு - கிழக்கில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது மற்றும் குழந்தைகளினது எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழ்கின்றனர். முறையான விசாரணைகளை அரசாங்கம் நடத்தினால்தான் கொடூரப் படுகொலைகளை நிறுத்த முடியும். அரசாங்கம் இந்தப் படுகொலைகள் தொடர்பில் கண்ணை மூடிக்கொண்டு உள்ளது. எந்த ஒரு சம்பவங்களிலும் விசாரணைகள் கூட தொடங்கப்படவில்லை. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில்தான் இத்தகைய படுகொலைகள் நடைபெறுகின்றன. இதற்கான பொறுப்பு சிறிலங்கா காவல்துறையினரிடம் உள்ளபோதும் படுகொலைகள் தொடர்பான தரவுகளை கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்புவதில்லை. நிறைய வழக்குகளை நிலுவையில் வைத்துக் கொண்டு தரவுகளை அளிப்பதில் முடக்கத்தை சிறிலங்கா காவல்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வழக்குகள் அனைத்தும் விசாரணைக்குள்ளாக்கப்பட வேண்டியவை. அனைத்து வசதிகளும் மனித வளங்களும் உள்ள நிலையில் எதுவித காரணமும் கூற முடியாது. இந்தப் படுகொலைகள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு காணப்படும். அப்பாவி குழந்தைகள் நாளாந்தம் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதை சர்வதேச சமூகம் மறுக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக வட பகுதியில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பாக சிறிலங்கா காவல்துறை மா அதிபரினது முடிவை கண்காணிப்புக் குழு எதிர்பார்த்து உள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு குறித்து ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் மகிந்த ராஜபக்ச தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் யதார்த்த கள நிலைமைகளுக்கும் முரண் உள்ளது கடற்கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உறுதியான உத்திரவாதம் அளிக்கப்படாத வரையில் சிறிலங்கா கடற்படையினரின் கலங்களில் பயணிக்க மாட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தற்போது கண்காணிப்புக் குழுவில் இரு நாட்டுப் பிரதிநிதிகளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோர்வே மற்றும் ஐஸ்லாந்து பிரதிநிதிகளே உள்ளனர். நோர்வேத் தரப்பில் தங்களது பிரதிநிதிகளை அதிகரிப்பதாக இல்லை என்று தெரிவித்துவிட்டனர் என்றார் ஹென்றிக்சன். நன்றி> புதினம்.

0 comments: