
இலங்கையின் வடக்கில் யாழ் தீவகப்பிரதேசமாகிய அல்லைப்பிட்டியில் அண்மையில் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது சாட்சியமளித்த சாட்சி ஒருவர், தமது வீட்டின் மாடிப்பகுதிக்கு பெட்ரோமக்ஸ் விளக்கை கையில் கொண்டு வந்த கடற்படையினர் தன் கண்முன்னால் தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றதாகத் தெரிவித்துள்ளார். ரொபின்சன் வயலட் என்ற 28 வயதுடைய இப்பெண்ணின் தங்கை, கணவன், அவர்களின் பிள்ளைகள் இருவர் ஆகியோர் அந்த வீட்டின் கீழ் தளத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இதன்போது சாட்சியின் தந்தை காயமடைந்ததாகவும், வீட்டிற்கு வெளியில் வைத்து தமது உறவினர் ஒருவரும், தனது தந்தையுடன் கடற்றொழில் செய்யும் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது கணவனையும், தம்பியையும் சுட்டுக்கொன்றவர்களை அடையாளம் காட்ட முடியும் என்றும் அந்தச் சாட்சி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே உத்தரவிட்டபடி இந்த வழக்கு தொடர்பான அடையாள அணிவகுப்புக்கு புலனாய்வு பொலிசார் ஒழுங்கு செய்யாமைக்கும், புலனாய்வு தொடர்பான அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தவறியமைக்கும் ஊர்காவற்துறை நீதிபதி ஜெயராமன் புலனாய்வு பொலிசார் மீது அதிருப்தியைத் தெரிவித்ததுடன், நீண்டகால இடைவெளியில் அடுத்த தவணைக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு ஒழுங்கு செய்வதுடன், இந்தக் கொலைகள் தொடர்பான புலனாய்வு பொலிசாரின் அறிக்கையை அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புலனாய்வு பொலிசாருக்கு நீதிபதி உத்தரவிடடுள்ளார்.
இணைப்பு : newstamilnet.com
1 comments:
தமிழனுக்கு எதில்தான் நீதி கிடைத்தது இதில் கிடைப்பதற்ககு.
Post a Comment