26 June, 2006

சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுக்கே இடமில்லை!!!

சர்வதேச சமாதான அனுசரணையாளர்களைப் புறந்தள்ளி, சிறிலங்கா அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடாத்தும் எண்ணமெதுவும் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் தற்போது இல்லை என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். லண்டன் பிபிசி வானொலியின் சிங்கள சேவையான சந்தேசியவிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கையில், நோர்வே அனுசரணையை ஓரம்கட்டி விட்டு, நேரடிப் பேச்சுக்கு வரும்படி சிறிலங்கா அரசிடமிருந்து அழைப்பு வந்ததா என்று கேட்கப்பட்டபோது, அதை ஆமோதித்த புலித்தேவன், விடுதலைப் புலிகள் உடனடியாகவே அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டதை உறுதி செய்தார். அத்துடன், நோர்வே அனுசரணையாளர்களுக்கும் இது தொடர்பான விபரங்களை விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் நோர்வே அனுசரணையை விடுதலைப் புலிகள் விரும்புவதாகவும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறிலங்கா சமாதான முன்னெடுப்புக்களின் கடந்த கால வரலாறுகளின் படி, இருதரப்புகளும் ஒன்றையொன்று நம்புவதற்கான வாய்ப்புக்கள் முற்றாக இல்லாதிருப்பதைப் பார்க்க முடிகிறது என்று விளக்கமளித்த அவர், சிறிலங்கா ஊடகமொன்றுக்கு வெளியிட்ட தகவலின்படி, அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், மகிந்தவிற்கு சாதகமான பதிலை வழங்கியிருப்பதாக வெளியான செய்தியை மறுத்தார். எந்த சந்தர்ப்பத்திலும், நேரடிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து விடுதலைப் புலிகளிடமிருந்து சாதகமான பதில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன், நோர்வே அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு விடுதலைப் புலிகள் மிகுந்த விருப்புடன் உள்ளார்கள் என்பதை, அரச தலைவர் செயலகத்திற்கும், நோர்வே பிரதிநிதிகளுக்கும் நேரடியாக அறிவித்து விட்டதாகவும் கூறினார். நன்றி>புதினம்.

0 comments: