16 June, 2006

ஈழத்தமிழருக்காக தமிழகத்தில் எழுச்சி ஆர்ப்பாட்டம்.

இந்திய நாடாளுமன்றக் குழுவை ஈழத்துக்கு அனுப்ப வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பேரெழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் . ஆர்ப்பாட்ட நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் பேசியதாவது: ஈழத் தமிழரைப் பாதுகாக்கிற- தன்னுடைய கடமையை ஆற்ற தமிழ்நாடு இன்று கிளர்ந்து எழுந்துள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டுமே 200-க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் மிகக் கொடூரமாக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். இணையத்தளங்களிலே வெளியாகியுள்ள அந்தப் படங்களை பார்க்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமாகக் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இணையத் தளங்களிலே அந்த படங்கள் வெளியாகி உள்ளபோதும் கூட இங்கே உள்ள ஊடகங்கள் அவற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டன. இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசு ஒருசார்பாக நிலைப்பாடு எடுத்துவிட முடியாது. உண்மை நிலையை அறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு உதவாமல் சிங்கள அரசை இந்திய அரசாங்கம் ஆதரிப்பது என்பது இந்தியக் கட்டமைப்பிலே தமிழ்நாடு ஒரு தேசிய இனமாக உள்ளது. இந்தியக் கட்டமைப்பின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாக வாழ்கின்ற இந்தத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போராட்டம். ஈழத் தமிழர்களே! தமிழகத்தில் உள்ள தமிழர்கள் கட்சிகளை-இயகங்களை கடந்து இன்று உங்களுக்காக இணைந்து நிற்கிறோம் என்றார் விடுதலை இராசேந்திரன். இங்குள்ள தமிழக அரசும் பொறுப்பில்லை என்று சும்மா இருந்துவிட முடியாது. இந்தக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும் வலியுறுத்த வேண்டும் என்றார் ரவிக்குமார். இடையே எழுப்பப்பட்ட முழக்கங்கள்: ஈழத் தமிழர் துயர்துடைக்க இன்று நடக்கும் ஆர்ப்பாட்டம் வெல்கவே!வெல்கவே! வெல்கவே! வெல்கவே! வெல்லட்டும் வெல்லட்டும் ஈழத் தமிழர் வெல்லட்டும்! வீழட்டும் வீழட்டும் சிங்கள இனவெறி வீழட்டும் ஈழத் தமிழர் எங்கள் இரத்தம் ஈழத் தமிழர் எங்கள் சொந்தம் ஈழத் துயரயம் எங்கள் துயரம் ஈழத் துயரம் எங்கள் துயரம் சிங்களவன் போடுறான் வெறியாட்டம் செத்து மடியுது தமிழ்க் கூட்டம் செத்து மடியுது தமிழ்க் கூட்டம் வேடிக்கை பார்க்குது இந்திய அரசு இந்திய அரசே! இந்திய அரசே! தட்டிக் கேள் தட்டிக் கேள்! இலங்கை தமிழ் எம்பிக்கள் இந்திய பிரதமரை சந்திக்க அனுமதி இல்லையா அனுமதி இல்லையா சிங்களவரென்றால் இனிக்குதா? தமிழரென்றால் கசக்குதா? ஏமாளி தமிழனே இளிச்சவாய் தமிழனே இன்னுமா உறக்கம் இன்னுமா உறக்கம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா: ஈழத் தமிழர்கள் நாதியற்றவர்கள் அல்ல என்பதற்காக தமிழர் நலன் காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருதாமல் எங்கள் தொப்புள் கொடிக்குச் சொந்தக்காரர்கள் என்பதை மனதில் கொண்டு இந்திய அரசங்கம் செயற்பட வேண்டும். அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டால் தாய் தமிழகத்தினர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட இடங்களிலே வாழ்கின்றனர். 2 நாடுகளில்தான் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும்தான் தேசிய இனமாக உள்ளனர். எமது தேசிய இனத்துக்கு ஆபத்து ஏற்படுகிற போது தட்டிக்கேட்டால் நமக்கு ஊறு வரும் என்று இந்திய அரசு கருதுகிறத சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதைக் காட்டிலும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியப் பிரதமர் சந்திக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிற அரசாங்கம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் இருப்பது வேதனையான செய்தி. மொழி வேறு- மொழி பேசுகிற மக்கள் வேறு என்ற மனப்பான்மையில் தமிழகத் தலைவர்கள் உள்ளனர். இரண்டையும் ஒன்றாக வைத்துப் பார்த்து ஈழத்தமிழர் விடியலை உருவாக்க ஒருங்கிணைய வேண்டும். சிறிய தீவில் இருக்கிற சிங்கள ஆதிக்கவாதிகள் மிகக் கொடூரமாக நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீற்றம் கொண்டால்.... எரிமலை வெடிப்பதற்கு முன்னால் எச்சரிக்காது. எங்கள் கடலை பார்க்கிறபோது மீன் முத்து ஆகிய சொத்துகள் மட்டுமல்ல கடலுக்கு அப்பாலே உள்ள எங்கள் சொந்தங்களும் அவர்களின் கண்ணீரும்தான் நினைவுக்கு வரும். ஈழத் தமிழர் பிரச்சனையில் பாரபட்சமற்ற முறையில் செயற்பட தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். தமிழக நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களை அல்லது தமிழகத் தலைவர்களை ஈழத்துக்கு அனுப்பி நிலைமையை பார்க்கவேண்டும் என்றார் மல்லை சத்யா. இதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட முழக்கங்கள்: வெல்லட்டும் வெல்லட்டும் ஈழத் தமிழர் வெல்லட்டும் வீழட்டும் வீழட்டும் சிங்கள இனவெறி வீழட்டும் தடுத்து நிறுத்த நாதியில்லை வேடிக்கை பார்க்குது வெறியாட்சி கூலிகள் கொடுக்குது சிங்கள நரிக்க இந்தி பேசும் இனத்தாருக்கு இப்படி கொடுமை செய்திருந்தால் இப்படி கொடுமை நிகழ்ந்திருந்தால் இந்திய அரசு கொஞ்சுமா இந்திய அரசு கொஞ்சுமா சிங்களன் தலைதான் மிஞ்சுமா நேபாள நாட்டின் துயர் துடைக்க நீட்டுது டில்லி 1,000 கோடி யாழ்ப்பாண நாட்டின் துயர் துடைக்க என்னே செய்யதது இந்திய ஆட்சி ஈழத் தமிழரை இன்னும் கொல்ல சிங்கள சேனைக்கு ராடார் கருவி பலாலி விமானத்தளத்தை பழுது பார்க்க போர்முற இந்தியா செய்யுது இந்தியா செய்யுது ஏமாளித் தமிழா இளிச்ச வாய்த் தமிழா இன்னுமா உறக்கம் இன்னுமா உறக்கம் ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து: சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன யாப்பா என்பவர் சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மொத்தம் 5 ஆயிரம் முறைக்கு மேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறுகிறார். புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜயசிங்கவோ 72 முறை என்கிறார். சென்னையில் உள்ள துணைத் தூதுவரோ மூவாயிரம் முறை என்கிறார். ஆகையால் இதில் எதுவுமே உண்மை இல்லை என்று தெரிகிறது. இலங்கையின் அனுராதபுரத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நேற்று நடந்தது. அது சிறிலங்கா இராணுவத்தின் பகுதி. அங்கே எப்படி புலிகள் நுழைந்து தாக்கியிருக்க முடியும்? எல்லாமே பொய்யாகவே பரப்புகின்றனர் சிங்களவர். இந்த உண்மையை நம்நாட்டு ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன்: இலங்கைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுபினர்கள் அங்குள்ள நிலைமையை இந்தியத் தலைவர்களிடத்தில் விளக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் இங்கே வந்திருப்பதன் மூலம் ஈழத்திலே வன்முறைகள் எந்த அளவுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியலாம். 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் போது அணிதிரண்டு தாய் தமிழகத்தை நோக்கி கதறி அழுதவாறு வந்தது போல் இரண்டு மூன்று மாதங்களில் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் வந்துள்ளனர். சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு மறைமுகமாக பல்வேறு உதவிகளை வழங்குகிறது. இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்களில் கூட அது கூறப்பட்டது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக- ஈழத் தமிழர்களுக்கு எதிராக- சிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவாக- உறுதுணையாக இந்திய அரசு செயற்பட்டு வருகிறத இந்தப் போக்குகள் கைவிடப்பட்டு தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்- ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து கூறுகிற போது "இந்திய அரசின் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார். இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - சிங்கள அரசுக்கு ராடார் கருவி கொடுப்பத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - பலாலி விமானத் தளத்தை சீர்படுத்தித் தருவத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - சிங்களப் பேரினவாதத்துக்கு உறுதுணையாக இருப்பத இந்திய அரசின் நிலைப்பாடு என்ன? - ரணில் விக்கிரமசிங்க வந்தாலும்- ராஜபக்ச வந்தாலும் சந்திரிகா வந்தாலும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பத இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே! தமிழினத் தலைவர் அவர்களே! இந்த நிலைப்பாடுதான் உங்கள் நிலைப்பாடா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மகிந்த ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறீர்களா- சிங்களப் பேரினவாதிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கப் போகிறீர்களா? அல்லத தமிழர்களுக்கு குரல் கொடுக்கப் போகிறீர்களா? தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். எமது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் முதல்வர் தனது பதில் உரையில் இது பற்றி குறிப்பிடவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை கைதுசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்பு செய்தது. ஆனால் தி.மு.க.வோ ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இன்றும் நாங்கள் சுட்டிக்காட்டவும் கண்டனம் செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிற இந்திய அரசின் நிலைப்பாடுதான் உங்களின் நிலைப்பாடா? அகதிகளுக்கான ஐ.நா. ஆவணத்திலே இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. தமிழ்நாட்டின் 13 அமைச்சர்கள் மத்தியிலே உள்ளனர். அவர்களின் அமைச்சுப் பொறுப்புகளுக்கு நெருக்கடி கொடுக்கிற தமிழக முதல்வர், ஈழத் தமிழர்களுக்காக ஏன் அதைச் செய்யக் கூடாது? என்றார் திருமாவளவன். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவர் பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்பின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். நன்றி>புதினம்.

7 comments:

said...

ஆர்ப்பாட்டப்பேரணி குறித்த தகவல்களுக்கு நன்றி.

said...

வரவுக்கு நன்றி டிசே.

said...

இந்தியாவிலுள்ள தமிழர்கள் அனைவரின் குரலும் ஈழத்தமிழருக்காக ஒலிக்கட்டும்.

said...

விரிவான தகவல்களை இங்கு கண்டேன்.

said...

வணக்கம் மஞ்சூர்ராசா, சுந்தரவடிவேல் வரவுக்கு நன்றி,
தமிழர் ஒற்றுமையும் ஆதரவும் பெருகட்டும்.

said...

தமிழகத்தில் உள்ள தமிழருக்காகவே போராடவேண்டிய நிலை இன்று உள்ளது. சுயநலத்திற்காகவும் தமது குடும்பம் மற்றும் குடும்ப தொழிலை காக்கவுமே அரசியல் நடத்திக்கொண்டு இருப்பவர்களை நாம் தமிழினத்தலைவர் என்று கூறிக்கொண்டு உள்ளோம். சென்னையில் உள்ள கேபிள் TV இனைப்புகளை அரசுடைமை ஆக்கியதும் ஓடோடி சென்று தமிழக ஆளுநரை சந்தித்த கருணாநிதி இன்று நமது தமிழ்ச் சகோதரர்கள் ரத்தம் சிந்திக்கொண்டு இருக்கும் போது தமிழினத் தலைவர் வாயை திறக்க மறுக்கிறார்.

said...

என்ன செய்வது வாயை திறந்தால் பதவிக்கு ஆபத்து ஏற்கனவே அவர் அனுபவப்பட்டவர். இதற்காகவே பலர் காத்திருக்கிறார்கள். ஒன்றுமட்டும் நிட்சயம், பக்கத்து வீடுதானே தீப்பற்றி எரிகிறது என்றுபேசாதிருந்தால் எம்வீடு எரியும்போது யாரும்வரமாட்டார்கள்.