20 June, 2006
புலம்பெயர் துணைஇராணுவக் குழுவினரை வெளியேற்றுவோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை என்பது அவர்கள் பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்து இருப்பதற்காகத்தான் என்று பல இராஜதந்திரிகள் இப்போது நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நெதர்லாந்து நாட்டின் தூதுவர் விடுதலைப் புலிகளைப் பட்டியலிலிட்டதானது அமெரிக்காவின் நடவடிக்கை போன்று காட்டமானது அல்ல என்றும் விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவே இப் பட்டியலிலிடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா பட்டியலிலிட்டதன் மூலம் விடுதலைப் புலிகளிற்கு "யுத்தத்திற்காக" நேரடியாக நிதி சேர்ப்பதைத் தடை செய்துள்ளதுடன், விடுதலைப் புலிகளுடன் இராஜதந்திரத் தொடர்பைப் பேணுவதில்லை என்பதுமாகவே இருக்கிறது.
அதனைத் தவிர அமெரிக்காவில் எந்தவித நடவடிக்கைகளிற்குமே தடை விதிக்கப்படவில்லை.
தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் மாவீரர் விழா நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுமே அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் நிர்வாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கான அன்பளிப்புக்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்டியலிலிடுதல் அமெரிக்காவைப் போன்று வலியது ஒன்றல்ல என்ற கூற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பான நிலைகளில் பெரிதான மாற்றங்கள் எதனையும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வரப்போவதில்லை என்பதே ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரின் வாய்வழி வந்த உண்மையாக இருக்கலாம்.
ஆனாலும் அந்நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் பயணம் செய்வதென்பது பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் நீக்கப்படும் வரை தடைப்பட்டதாக இருக்கும்.
கனடாவும் விடுதலைப் புலிகளைப் பட்டியலிட்ட போதும், இதற்குத் தான் விதிவிலக்கு என்று தெரிவிக்கும் விதமாக பேச்சுவார்த்தையை கனடாவில் நடத்த ஒத்துழைப்பதாகவும் இது தொடர்பிலான தமது விருப்பை நோர்வேயிடம் தெரிவித்துள்ளதாகவும் அது கூறியிருந்தது.
இந்நாடுகள் என்ன வியாக்கியானங்களைத் தெரிவித்தாலும் இப்பட்டியலிடுதல் என்பது ஒரு பக்கச்சார்பான நடவடிக்கையாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்நாடுகளின் குடியுரிமை பெற்ற மக்களாக வாழும் புலம்பெயர் தமிழ்மக்களான எமக்கு இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல என்பது அந்நாடுகளுக்கு விளக்கும் பணி இப்போது நடைபெறுகிறது.
அதனைக்கூட அந்நாடுகளின் அரசுகளுடன், இராஜதந்திரிகளுடன் நட்பான பாங்குடன் நயமாகவே எமது மக்கள் விளக்கி வருகிறார்கள். இப்பட்டியலிடுதல் என்கிற சாட்டை வைத்து தமிழர்களை அவர்கள் வாழும் நாடுகளில் ஆட்சியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தலாம் என்கிற எதிரியின் ஆசையைத் தவிடு பொடியாக்கும் அளவிற்கு அரசு மற்றும் உயரதிகாரிகளுடனான நட்பான தொடர்பையே புலம்பெயர் சமூகம் தற்போது பேணி வருகிறது.
இதற்கு மேலாக பல மேற்குலகப் பிரமுகர்களே இத்தடை தேவையற்ற, ஓரு பக்கச்சார்பான நடவடிக்கையென்றும், இருதரப்பினர் மீதும் அழுத்தம் கொடுப்பதே யதார்த்தம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இவையெல்லாம் ஒரு புறமாக இருந்த போதும், தற்போதைய முறுகல் நிலைக்கான பூரண காரணகர்த்தாக்கள் துணை இராணுவக் குழுக்களே. அவைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்கு-கிழக்கில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று புரிந்துணர்வு ஒப்பந்த விதிக்கு முரணான இந்தத் துணை ஆயுதக்குழுக்களின் கொலை வெறியாட்டச் செயல்களே இன்றைய இந்நிலைக்கான காரணமாகும்.
இந்நிலையில் மீண்டும் சமாதான முயற்சிகள் துளிர்க்க வேண்டும் என்றால் துணை இராணுவக் குழுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேற்குலகு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய சூழ்நிலையைப் புலம்பெயர் தமிழர்கள் மேலும் அதிகரிக்க வேண்டும்.
மேற்குலக நாடுகள் மனிதாபிமானத்தை பெரிய அளவில் மதிப்பவர்கள். அதற்காக எப்போதுமே உரத்துக் குரல் கொடுப்பவர்கள் என்ற காரணத்தை முன்வைத்தே, "பயங்கரவாதப்" போர்வையில் அவர்கள் மீதான சேறுபூசலை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்தது.
இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட அரசானது தனது படைகளினூடாகவும், துணை இராணுவக் குழுக்களினூடாகவும் மிகவும் மிலேச்சத்தனமான மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது.
சிறிலங்கா அரசாங்கப் படைகள் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நடவடிக்கைகள் தற்சமயம் சர்வதேசத்தின் அவதானத்திற்கு பூரணமாக உள்ளாகிவிட்டன.
இக்கொடூரச் செயல்களுக்குக் காரணகர்த்தாக்கள் என்று சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல சர்வதேச அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் இத்தகைய கொடூரச் செயல்களை மேற்கொள்கிற சிறிலங்கா அரசாங்கப் படை மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களின் நபர்கள் மேற்குலகுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மீது பாராமுகமாக இருக்கும் அல்லது இந்த விடயத்தை பாரதூரமாக எடுத்துக் கொள்ளாத மேற்குலக நாடுகளுக்கு நாங்கள் இப்போது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பயணத்திற்கே அனுமதிக்காத நாடுகளுக்கு அல்லைப்பிட்டியில் ஒன்பது பேர் உட்பட பல அப்பாவிகளின் படுகொலைகளில் நேரடியாக தொடர்புடைய ஈ.பி.டி.பி. துணைக்குழுவானது சிறிலங்கா அரசின் தயவில் பயணம் மேற்கொள்வதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளின் மீதான இப்போதைய தடைகளுக்கு முன்னேற்பாடாக வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளால் தமிழ் மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்ற கோதாவில் அறிக்கை தயாரித்து வெளியிட்ட மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பிற்கு இராணுவத் துணைக்குழுவின் பிரதிநிதிகளே உதவினார்கள் என்பதையும் வெளிக்கொணர வேண்டும்.
அந்த அறிக்கை தயாரிப்பிற்கான இங்கிலாந்தின் நெருங்கிய தொடர்பாளராக அடையாளப்படுத்தப்பட்டவரான ராமராஐன் என்பவர் ஒரு மோசமான குற்றவாளியாக சுவிசில் சிறைவாசம் அனுபவிப்பதையும், கனடாவில் தொடர்பாளரான டேவிட்சன், டென்சில் ஆகியோர் ஈ.பி.டி.பியின் முக்கிய பிரமுகர்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து அந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்க வேண்டும்.
இது போன்றே மற்றைய ஐரோப்பிய நாடுகளிலும் அந்த அமைப்பால் பயன்படுத்தப்பட்ட நபர்கள் குற்றங்களின் குறிப்புக்களாக, தமிழ்ச் சமூகத்திலிருந்து விடுபட்டு அந்நியப்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள் என்பதையும், துணை இராணுவக் குழுவின் பிரதிநிதிகள் என்பதையும் ஆதாரப்படுத்த வேண்டும்.
சிறிலங்காவின் ஜனநாயகத்திற்குள் தாங்கள் இரண்டறக் கலந்து விட்டதாக அவர்கள் வெளிப்போக்கிற்குக் கூறினாலும், துணை இராணுவத்திற்கான சம்பளப்பட்டியலில் இருந்து கொண்டு சொந்த இனத்தையே அழிக்கின்றவர்கள் என்பதையும், படை முகாம்களிலேயே, படையினரின் பாதுகாப்புடனேயே அவர்கள் தங்கியிருக்கிறார்கள் என்பதையும் முக்கியப்படுத்த வேண்டும்.
அதேபோன்று இக்குழுக்களின் வெளிநாடுகளிலுள்ள பிரதிநிதிகள் தங்களை மனிதநேய அமைப்புக்களின் போர்வைக்குள் புகுத்த முயன்றாலும், அவர்கள் மீதான குற்றப்பட்டியல்களானது அவர்கள் கொடூர கொலைஞர்கள், பயங்கர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என்ற உண்மைகளைப் புடம் போட்டுக் காட்டிவிடும்.
எனவே சில உயிரற்றுப் போன அமைப்புக்களின் போர்வையில் விடுதலைப் புலிகள் மீதான காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யப் புறப்பட்டிருக்கும் இக் காலகட்டத்தில், இவர்கள் பற்றிய பயங்கரப் பக்கங்களை வெளிக்கொணர்ந்து இவர்களது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவை இரண்டுமே காலந்தாழ்த்தாது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளாகும். குறிப்பாக இங்கிலாந்திலும் கனடாவிலும் இந்நபர்கள் பற்றிய விடயங்களை அரசு மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், ஏனைய நாடுகளிலும் இவை படிப்படியாக மக்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
எமது இந்தப் பரப்புரை மூலமாக, மேற்குலகு இக்குழுக்களின் மீது எடுக்கும் நடவடிக்கையே சமாதானத்திற்கான சூழ்நிலையை, தடைப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் உயிர் பெறுவதற்கு வழியேற்படுத்துவோம்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்லதொரு ஆக்கம் வாழ்த்துக்கள்.
பேச்சுவார்த்தை மூலமே இறுதி தீர்வு எட்டும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை...
வணக்கம் அனானி, செந்தழல் ரவி,
நிட்சயமாக அது நடக்கவேண்டும், நல்லதொரு தீர்வி கிடைக்கவேண்டும்.
Post a Comment