17 June, 2006

தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதிச்சபை கண்டனம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே. ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாளுகின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். வன்முறையை யார் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து உரிய விசாரணை நடத்திய அதற்குப் பொறுப்பான நபர்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்திவிட்ட பின்னர் அமைதிப் பேச்சுக்களை நடத்துவது என்பது கடினமானது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். ஏனெனில் இலங்கைத் தீவிலும் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழுகிற தமிழர்களுக்காக குரல் கொடுக்கிற பிரதான அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். நாம் நோர்வேயின் வழியைத்தான் பின்பற்றுவோம். ஐரோப்பிய ஒன்றியத்தை பின்பற்றமாட்டோம். நோர்ட்டிக் அமைதி குழுவின் அங்கமாகவே நாங்கள் உள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கிற முடிவுகளுக்கு அப்பால் அமைதிக்கான ஆதரவைத் தர வேண்டும். ஐரோப்பியத் தடைய அநாகரிகமானதாகவே நாம் பார்க்கிறோம். அமைதியை உருவாக்குவதில் ஸ்காண்டிநேவிய நாடுகள் நடுநிலையுடன் செயற்பட வேண்டியதை உலகுக்கு காட்ட வேண்டிய சூழ்நிலை இப்போது உள்ளது என்றார் அவர். நன்றி>புதினம்.

0 comments: