31 May, 2006

சர்வதேசத்தின்மீது தமிழர்கள் அவநம்பிக்கை.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது விதித்துள்ள தடையுடன் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்பமாக சர்வதேச சமூகத்திடம் இருந்த நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது. இதனை வன்னிப் பெருநிலப் பரப்பில் வெகுசன ஒன்றியத்தினர் வெளியிட்ட அறிக்கையே வெளிக்காட்டி நிற்கின்றது. அவ்வறிக்கையில், "எமது மக்கள் கொல்லப்படும்போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும்போதுகூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது. இவற்றின் மூலம் ஒரே ஒரு முடிவிற்கு வருகின்றோம்.நாடற்றவர்கள் உலகில் வாழும் தகுதியற்றவர்கள். அவர்கள் விலங்குகளுக்கும் கீழான நிலையிலேயே கணிக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதியற்ற செயல் குறித்துத் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்கள் நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உலக நாடுகளின் அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளனர். ஏனெனில், நீண்ட போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்து எவருமே கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் நீதியான போராட்டத்திற்கு அவை என்றுமே ஒத்துழைத்ததில்லை. நீதியான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்காதுவிடினும், தமிழ் மக்களுக்கும் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சனநாயக உரிமைகள் உண்டு என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கத்தானும் அவை தயாராக இருந்ததில்லை. மாறாக, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆயுத முனையில் நசுக்க முற்படும் அரசிற்கே அவர்கள் ஆதரவு வழங்கி வந்துள்ளனர். ஒரு தரப்பினரால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான நியாயப்பாடு சர்வதேச மயப்படுத்தப்பட்டு சரியான முறையில் உலக நாடுகளிடம்எடுத்துச் செல்லப்படவில்லை எனக் கூறப்படுவதுண்டு. சரி அவ்வாறு தான் வைத்துக் கொண்டாலும், சர்வதேச சமூகமே கரிசனை செலுத்தியதாகக் கூறப்படும் சுனாமி அனர்த்த புனர்வாழ்வுப் பணிகளில் சிறிலங்கா தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியமை சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத தொன்றா? இதனைச் சர்வதேச சமூகம் தெரியாது எனக் கூறுமாயின் அதனைவிட மோசடித்தனமான விடயம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், ஐ.நா. செயலாளர் கொபி அனானில் இருந்து அமெரிக்காவின் முன்னாள்; சனாதிபதி பில் கிளிங்டன் வரையில் இவ்விடயத்தில் நேரடியாகக் கரிசனை காட்டியிருந்தனர். இலங்கையில் சுனாமியால் தமிழ் மக்களும் பேரழிவைச் சந்திருந்தனர் என்பதைத் தெரிந்திருந்தனர். ஆனால், அவர்களால் கூட தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதற்கு அவர்கள் இயலாது போய்விட்டது எனக் காரணம் கூறினால் அது நகைப் பிற்கிடமானதாகிவிடும். உரிமைக்காகப் போராடுகின்றார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும். இது தனியாக அரசுகள் இடத்தில் மட்டும் காணப்படும் போக்கல்ல. தம்மை உலகில் மனித நேய அமைப்புக்களாகவும், பாதிக்கப்படும் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் உதவி வழங்கும் அமைப்புக்களாகவும் கூறிக்கொள்ளும் அமைப்புக்களுக்கும் பொருத்தப்பாடானவையே. ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகள் குறித்து அக்கறை காட்டாத அவ் அமைப்புக்கள் ஒடுக்குமுறை அரசுகளின் நலன்கள் பாதிக்கப்படாது பார்த்துக்கொள்வதில் பெரும் கவனம் செலுத்துகின்றன. இதற்கு ஐ.நா. அமைப்புக்கள்கூட விதிவிலக்காக இல்லை. சரி, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் பல கொலைகளைப் புலிகள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் எதற்கும் ஆதாரம் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, ஐரோப்பிய ஒன்றியம் யுத்த நிறுத்த காலத்தில் இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் புலிகள் தான் காரணம் எனக் கருதுகின்றதா? அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அல்லைப்பிட்டிப் படுகொலை, விடுதலைப்புலிகளின்; மூத்த உறுப்பினர்கள், சிரேஸ்ட தளபதிகள் மற்றும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் நடந்த படுகொலைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர் கடத்தல் யாவற்றிற்கும் புலிகள்தான் காரணம் என்று கருதுகின்றதா? அவ்வாறு ஐரோப்பிய ஒன்றியம் கருதுமாக இருந்தால் அதனதுடன் பேசிப் பயனில்லை. அவ்வாறு இல்லை எனில், விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைவிட சிறிலங்கா இராணுவமும், அதன் ஏவுதலில் இயங்கும் ஒட்டுக்குழுக்களும் புரிந்த படுகொலைகள் அதிக அளவிலானதாகவும், ஆதாரபூர்வமானவையாக நிரூபிக்கத்தக்கவையாகவும் உள்ளன. ஆனால், இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்களுக்குத் தெரியாதுபோனது ஏன்? படுகொலைகள் புரிய அரசிற்கு அங்கீகாரம் உண்டு என்பதினாலா?அவ்வாறானால் தம்மைப் பாதுகாத்தல் தமிழருக்கு உரிமை இல்லையா? ஆனால், இவை எல்லாவற்றையும் கண்டு கொள்ளாது ஆட்சி அதிகாரம் அற்ற இனம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேசநாடுகள் மீதும், அமைப்புக்கள் மீதும் எவ்வாறு மக்கள் நம்பிக்கை கொள்ள முடியும். அவர்களை ஒடுக்குமுறையாளர்களின் அனுசரணையாளர்கள் என்று கூறாது, நீதியின் காவலர்கள் என எவ்வாறு கூறமுடியும்? நன்றி: ஈழநாதம்

5 comments:

Anonymous said...

நல்லதொரு கட்டுரை, சர்வதேசத்தை நம்பி ஒரு புண்ணியமும் இல்லை, எமது பாதுகாப்பை நாமே தீர்மானிக்கவேண்டியதுதான்.

Anonymous said...

எங்க புலித் தலைவரின்ர தடியள்,கொம்புகள்,படங்களெண்டு ஒண்டையும் காணன்?

வாலைச் சுருட்டிப் போட்டியோ பயலே?உன்கெல்லாம் ஒரு வீம்பு!தேவையா இது?

said...

வணக்கம் முதலாவது அனானி வரவுக்கு நன்றிகள். நம்பிக்கை இழந்தபின், கண்கானிப்பு குழுமீதும் நம்பிக்கை போய்விட்டது, தடை விதித்த பின் அவர்கள் மட்டும் எப்படி அங்கு இருக்கலாம், யேருக்கு உளவு பார்பதற்கு அங்கு இருக்கிறார்கள். அவர்களையும் வெளியேற்றவேண்டும். அல்லது தார்மீகமாக அவர்களே வெளியேற வேண்டும்.

said...

வணக்கம் இரண்டாவது அனானி வரவுக்கு நன்றி,

தடியள், கொம்புகள், படங்கள் போட்டால்தான் நேசிக்கிறேம் என்று அர்த்தமா? உண்மையான நேசம் உள்ளத்தில் இருக்கிறது, அது இடையில் அழிந்து விடாது, இந்த உடலும்,உயிரும் உள்ளவரைக்கு இருக்கும், இந்த உடலும் உயிரும் அழியும்போதுதான் அந்த நேசமும் அழியும்.

said...

மிகச் சரியான அறிக்கை. சர்வதேச நாடுகளின் கண்டிப்புக்களைக் கொண்டே நாம் நிரூபிக்கலாம் கொலைகள் அட்டுளியங்களை யார் புரிந்தது என்று.
இந்தக் கண்டன அறிக்கைகள் எல்லாம் எங்களுக்கு ஒரு காலத்தில் உதவக் கூடிய சாட்சிகள் தாம்.
// "எமது மக்கள் கொல்லப்படும் போது தனது கண்களை இறுகப் பொத்திக் கொள்ளும் சர்வதேசம் சிங்களவர்களின் தலைமயிர் உதிரும் போது கூடக் கண் விழித்துக் கொண்டு உரத்த குரல் எடுக்கின்றது //

இரண்டாம் கதைக்கு இடமில்லை