20 May, 2006
விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயற்படுவார்கள்.
சர்வதேச சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது சுயாதீனமாக செயற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நடவடிக்கையானது அமைதி முயற்சிகளில் எதிர்விளைவை உருவாக்கும். சர்வதேச சமூகத்தை புறக்கணித்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது சுயாதீனமாக இயங்க முடியும்.
எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் பொறுப்பாக்க முடியாது.
இந்தத் தடையால் நிதி திரட்டல் மற்றும் ஆயுதக் கொள்வனவுக்கு தடை ஏதும் இல்லை. வேறு வழிகளில் இத்தடைகள் எதிர்கொள்ளப்படும்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் அதனது நடவடிக்கைகள் தொடரவே செய்தன என்றார் அவர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கூடாது. ஆனால் பேச்சுக்களை நடத்துவதற்கான மேலதிக சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்துவிடுவதால் மட்டுமே வடக்கு கிழக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட போதும் இலங்கையில் புலிகள் செயற்பாடுகளுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத் தடைக்குப் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
யுத்த நிறுத்தம் மற்றும் இராணுவப் பிரச்சனைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. பேச்சு முறைகளில் மாற்றம் வேண்டும் என்றார் அவர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானத்தை ஜே.வி.பி. வரவேற்றுள்ளது.
ஐரோபிய ஒன்றிய நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாகத் தடை செயய் வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
நன்றி>புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"சர்வதேச சமூகமே!விடுதலைப் புலிகள் இனி சுயாதீனமாக செயல்படுவார்கள் என்பது நீங்கள் எடுக்கப்போகும் முடிவில் தான்."
அன்புடன்,
துபாய் ராஜா.
அதை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டதுபோல் தெரியவில்லையே, தம் தம் நாட்டு நலனைப்பொறுத்தே சத்தியம் வாழ்வதும், சாவதும்.
Post a Comment