21 May, 2006
தமிழ்தேசியத்தை மீண்டும் ஆதரித்த உள்ளூராட்சி தேர்தல்.
தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட சிறிலங்காவின் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியடைந்துள்ளதன் மூலம் தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழ் மக்களின் பற்றுதல் மீண்டும் ஒருமுறை சர்வதேச அரங்கத்தின் முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழீழத்தில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
அம்பாறையில் மொத்தம் 18 உள்ளுராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டன.
திருகோணமலையில் 13 உள்ளுராட்சி சபைகளுக்கு 12-க்கு தேர்தல் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 45 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், நாவிதன்வெளி, நிந்தாவூர் பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருகோணமலை நகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளை இரு மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ரியுள்ளது.
அம்பாறை நகர சபை, காரைத்தீவு, திருக்கோவில், ஆலையடி வேம்பு, சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.
திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபைகளைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருக்கோவில் பிரதேச சபையின் 9 இடங்களையும் புதிதாக உருவாக்கப்பட்ட காரைத்தீவு பிரதேச சபையின் 5 இடங்களில் 4 ஐயும் கைப்பற்றியுள்ளது.
திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் மொத்தம் 98.29 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
காரைத்தீவில் 67.05 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
வெருகல் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியின்றி கைப்பற்றியுள்ளது.
இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சிலம்பற்று அரச அதிபரின் பிரிவுக்குட்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ளது.
வெருகல் பிரதேச சபையின் தலைவராக சபாபதிப்பிள்ளை சௌந்திரராஜவும் வைரன் நாகேந்திரன் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 2 நகர சபைகள் மற்றும் 10 பிரதேச சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு 66 ஆண்டுகால பழமை வாய்ந்த திருகோணமலை நகரசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
மேலும் 12 இடங்களில் 10 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
தமிழீழத்தின் தலைநகரமான திருகோணமலை நகர சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75.06 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழர் தாயகம்தான் திருகோணமலை என்று நிரூபித்து சிங்களவர்களின் செவுளில் அறைந்துள்ளது.இதர 2 இடங்களை சுயேட்சைக் குழுவினர் வென்றுள்ளனர்.
திருகோணமலை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி. 4.10 விழுக்காடு. துணை இராணுவக் குழுவினரான ஈ.பி.டி.பி. 1.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்களில் சாகுல் ஹமீட் என்ற முஸ்லிம் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அடங்குவர்.
எஸ். கௌரிமுத்துநாதன், கே. செல்வராசா, கே. துரைராசா, ஜே. புலேந்திரராஜ், பி. முனியாண்டி, எஸ். அருட்செல்வம், டி. கரிகாலன், ஆர்.என்.வரதன், ஏ.எச். சாகுல் ஹமீட், ஆர். கண்மணி அம்மா ஆகியோர் திருகோணமலை நகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராவார்.
திருகோணமலையில் 1884 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியின் கீழ் உள்ளுராட்சி நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1933 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி சபை என்ற பெயரில் திருகோணமலை நிர்வகிக்கப்பட்டது.
1933 ஆம் ஆண்டு முதல் 1939 ஆம் ஆண்டு வரை உள்ளுராட்சி அபிவிருத்தி சபை என்று அது மாற்றப்பட்டது.
1940 ஆம் ஆண்டு சனவரி 1 முதல் நகரசபையாக அது உயர்த்தப்பட்டது. இருப்பினும் திருகோணமலை நகரசபையை மாநகர சபையாக மாற்ற வேண்டும் என்று அம்மக்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு திருகோணமலை நகரசபை தேர்தல் நடத்தப்பட்டபோதும் 1999 ஆம் ஆண்டு அது கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினாலே நேரடியாக திருமலை நகரசபை நிர்வகிக்கப்பட்டு வந்தது.
சிறிலங்கா அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்ததிற்கமைய மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 1998 ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு மாகாண சபையின் தலைநகராக திருகோணமலை இயங்கி வருகிறது.
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பறியுள்ளது. பிரதேச சபையின் 9 இடங்களில் 6 இடங்களைக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மொத்தம் 60.55 விழுக்காடு வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
இங்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 19.87, ஐக்கிய தேசியக் கட்சி 13.68, ஜே.வி.பி. 4.74, துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. 1.16 விழுக்காடு வாக்குகளையே பெற்றனர்.
மூதூர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். தௌபீக் தலைமையிலான குழு கைப்பற்றியது. 11 இடங்களில் 7 இடங்களை சுயேட்சைக் குழுவினரும் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றியுள்ளது.
மூதூரில் சுயேட்சைக் குழுவினர் 58.45 விழுக்காடு வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 41.35 விழுக்காடு வாக்குகளையும் ஈ.பி.டி.பி. 0.12 விழுக்காடு வாக்கினையும் பெற்றுள்ளன.
கிண்ணியா பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது.
இதில் ஒரு இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
குச்சவெளி பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பறிய போதும் 5 இடங்களில் 4 இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
குச்சவெளியில் ஐக்கிய தேசியக் கட்சி 38.73 விழுக்காடு வாக்குகளையும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 37.64 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஈ.பி.டி.பி. 0.57 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது.
சேருவில பிரதேச சபையில் 5 இடங்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஒரு இடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 2, ஜே.வி.பி. 1 இடங்களையும் பெற்றுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தற்போதும் போல் தமிழர் தாயகம் முழுமைக்கும் பாரிய வெற்றி பெற்று தமிழ்த் தேசியத்தின் மீதான தமிழர்களின் பற்றுதலை- தமிழீழத் தேசியத் தலைமையின் மீதான நம்பிக்கையை தமிழர்கள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment