12 March, 2006

யாழ்தமிழருக்கு சிங்களராணுவம் மிரட்டல்.

இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் (யாழ். அலுவலக நிருபர்) இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு. தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு. இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற தலைப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படியே நாம் செய்வோம். ஒற்றை ஆட்சிக்குள்ளும் ஒரு படைக்குக் கீழும் வாழ்வதாயின் இங்கு வாழும் உரிமையுண்டு. ஜெனிவாவில் பேசினாலும் நோர்வேயின் தலைமையினாலும் இந்தியாவின் உறவாலும் நாட்டைப் பிரித்து உங்களிடம் தரமுடியாது. யாழ்ப்பாணத்தில் இராணுவம் சொல்வதே தீர்ப்பு. சிங்கள மொழிதான் எல்லோருக்கும் தாய்மொழி. இங்கு வேறு எந்த மொழியும் இருக்க முடியாது. எல்லா மக்களையும் பாதுகாப்பது சிங்கள இராணுவம்தான். உங்களையும் நாங்கள்தான் பாதுகாப்போம். நோர்வே இராணுவமோ இந்திய இராணுவமோ உங்களை பாதுகாக்காது. புலிகளும் உங்களைப் பாதுகாக்கமாட்டார்கள். உங்களை எம்முடன் உறவு வைத்துக் கொள்ள சொல்கிறோம். உங்கள் பிள்ளைகள் எங்கள் படையில் சேர்ந்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். அமெரிக்கா எமக்கு காசு தரும். சிங்களத்தை படியுங்கள். உங்களுக்கு நல்ல காலம் உண்டு. புலிகளால் எங்களை வெல்ல முடியாது. யாழ்ப்பாணத்தை பிடிக்கமுடியாது. யாழ்ப்பாணம் பத்து வருடங்களாக எம்மிடமே இருக்கிறது. புலிகளில் கொஞ்சப்பேர்தான் இருக்கிறார்கள். எங்களிடம் இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் நாங்கள் சொல்வதுபோல நடவுங்கள். உங்களை நாங்கள் பாதுகாப்போம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>வீரகேசரி

0 comments: