02 March, 2006

பெரும் நிதிமோசடியில் சிறீலங்கா.

சர்வதேச நாடுகள் வழங்கும் நிதியுதவிகளில், மிக அதிகமான தொகையை சிறீலங்காவுக்கு வழங்கிவரும் ஜப்பான், பல மில்லியன் டொலர் நிதியுதவிகளை, எவ்வாறு பாவிப்பது என்பதில் இழுபறிகளையும் இழுத்தடிப்புக்களையும் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலம், கடும் நிதி மோசடிகள் நடைபெற்று, நிதி சூறையாடப்படுகிறது என்று பகிரங்கமாக சுட்டிக்காட்டியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சிறீலங்காவுக்கான ஜப்பான் தூதுவர் திரு.அக்கியோ சூடா, ஏற்கனவே ஜப்பான் வழங்கிய பாரிய நிதியுதவிகள் சரியான முறையில் பாவிக்கப்படாததுடன், மக்களின் நலன்கள் தொடர்பான எந்த விடயங்களுக்கும் இந்த நிதி சரியாகப் பயன்படுத்தப் படுவதை அரசு உறுதிசெய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தினார். இதுவரை வழங்கப்பட்ட பாரிய நிதியுதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அல்லது இதுவரை பயன்படுத்தப்படாத நிதி யாரிடம் எங்கே உள்ளது என்ற விபரங்களை சிறீலங்கா அரசு தெளிவாக வழங்கவேண்டிய தேவையுள்ளது. எதிர்கால நிதியுதவிகள் அனைத்தும், கடந்தகால சிறீலங்கா அரசுகளின் நிதிப்பாவனை தொடர்பான விபரங்களைக் கருத்தில்கொண்டே, முன்னெடுக்கப்படும் என்ற நிபந்தனையையும் சூடா தெளிவுபடுத்தினார். 1991ம் ஆண்டு, மின்சக்தி நிலையமொன்றை அமைப்பதற்கான பாரிய நிதியுதவி வழங்கப்பட்டபோதும், 14 ஆண்டுகளாக சிறீலங்கா அரசுகள் அந்தத் திட்டத்தை இழுத்தடித்துள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 2004ம் ஆண்டு சுனாமி அழிவுகளின்போது வழங்கப்பட்ட பாரிய நிதியுதவிகள் எதுவும் சரியான முறையில் திட்டமிட்டு பாவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்ட அக்கியோ சூடா, சுனாமிக்குப் பின்னர், உலக நாடுகள் வழங்க முன்வந்த 3.3 பில்லியன் டொலர் நிதியுதவிகூட, இதன்காரணமாக, முடங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டார். மின்சார சபையின் முன்மொழிதல்களைக் கருத்தில் எடுத்து, மின்சார உற்பத்தி தொடர்பான பாரிய திட்டமொன்றுக்கு ஜப்பான் உதவ முன்வந்திருந்த போதிலும், சிறீலங்கா ஆட்சியாளர்களின் மாற்றங்களின்போது ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளால் அவை முன்னெடுக்கப்படாது, காலவதியாகியதையும், சூடா சுட்டிக்காட்டினார். இனிவரும் காலங்களில், ஜப்பான் தொடர்ந்தும் சிறீலங்காவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தயாராக இருக்கின்ற போதிலும், முன்மொழியும் திட்டம், குறிப்பிட்ட காலத்திற்குள், முழுமையான நிதியைப் பயன்படுத்தி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்ற உறுதிமொழியை சிறீலங்கா அரசு தரும்பட்சத்தில் மட்டுமே அவை சாத்தியமாகும் என்றும் தெளிவாக விளக்கமளித்தார். அத்துடன், பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரு தரப்பினரும், நேர்மையாக நிரந்தர சமாதானத்திற்காக செயற்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நன்றி>புதினம்

0 comments: