24 February, 2006

ஜெனிவாவில் அரசுக்கு நேர்ந்த அவலம்.

ஜெனீவாப் பேச்சுகளில் முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் தான் வைத்த வலையில் தானே விழும் அவலம் இலங்கை அரசுத் தரப்புக்கு நேர்ந்திருக்கின்றது. அரசுப் பிரதிநிதிகளோடு விடுதலைப் புலிகள் சரிக்குச் சரி சமதையாக - சம அந்தஸ்தில் - அமர்ந்திருந்து பேசுவதும், வாதிடுவதும் சிங்கள, பௌத்த பேரினவாத சக்திகளின் முன்னால் தனக்கு பேரிழுக்குத் தரும் விடயமென்றுகருதிய அரசுத்தரப்பு, அந்தப் பேச்சுகள் பற்றிய உள்வீட்டு விடயங்கள் அம்பலமாகாமல் அமுக்கி வாசிக்கச் செய்வதன் மூலம் விவரங்களை மூடிமறைத்து சமாளிக்கத் திட்ட மிட்டது. அதற்காக செய்தியாளர்களுக்கு முழுக் கதவடைப்பு நடவ டிக்கை வனையப்பட்டது. முன்னைய அமைதிப் பேச்சுகள் போலல் லாமல் இந்த அமைதிப்பேச்சுகள் பற்றிய விடயங்களை பேச்சு முடிவடையும் வரை ஊடகவியலாளர்களுக்கு வெளியிடுவதில்லை என்ற தீர்மானம் இந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், இந்தத் தீர்மானத்தை முதலில் மீறியதே இலங்கை அரசுத்தரப்புத்தான். பேச்சுகளில் கலந்துகொள்ள ஜெனீவா வந்திருந்த இருதரப்புப் பிரதிநிதிகள் குழுவும் ஊடகவியலாளர்கள் நெருங்கமுடியாதவாறு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள சாட்டோ டி பொய்ஸி அரண்மனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசுத் தரப்பு பிரதிநிதிகள் குழுவில் ஒருவரான அமைச்சர் ரோஹித போகொல்லாகம மட்டும், பேச்சு நடைபெறும் புதன்கிழமை தினத் துக்கு முதல்நாள் மாலை அந்த அரண்மனையிலிருந்து பிய்த்துக் கொண்டு ஜெனீவா நகருக்கு வந்தார். திடீரென ஊடகவியலாள ரைக் கூட்டி ஒரு செய்தியாளர் மாநாடு நடத்தினார். அப்போது, யுத்த நிறுத்த உடன்பாட்டை திருத்தியமைத்தல் பற்றியே அடுத்த நாள் ஆரம்பமாகும் பேச்சுகளின்போது கலந்துரையாடப்படும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டை திட்டவட்டமாகப் பகிரங்கப்படுத்திப் பிரகடனப்படுத்தவும் அவர் தவறவில்லை. செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்ற பொது உடன்பாட்டை அரசுத்தரப்பு மீறிய நிலையில் பேச்சுகள் புதனன்று தொடங்கின. அந்தத் தவறுக்கான விளைவை அரசுத் தரப்பு பேச்சின் ஆரம்பக் கட்டத்திலேயே வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியதாயிற்று. முதல் நாள் ஆரம்பப் பேச்சில் புலிகளின் பிரதிநிதிகள் சார்பில் அதன் பேச்சுக் குழுத்தலைவர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் நிகழ்த்திய அங்குரார்ப்பண உரையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்கள் சில கணங்களில் அதைப் பகிரங்கமாக உலாவரச் செய்துவிட்டனர். ஆழமான கருத்துகள் அடங்கியிருந்த அந்த உரை, யுத்தநிறுத்த ஒப்பந்தம் முழு அளவில் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படுவதே மாற்றமுடியாத ஒரே நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்பதைக் காரிய, காரணங்களோடு விளக்கமாக வற்புறுத்தியது. மதியுரைஞர் பாலாவின் அங்குரார்ப்பண உரை ஊடகங்களுக்குக் கிடைத்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட அரசுத் தரப்பு அதற்குப் பதில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டு தனக்குத் தானே குழிபறித்துக்கொண்டமைதான் வேடிக்கையான நிகழ்வு. பாலாவின் அங்குரார்ப்பண உரை வெளியானதால் அதற்குப் பதிலடியாக தனது தரப்பு பேச்சுக் குழுவின் தலைவர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அங்குரார்ப்பண உரையைப் பகிரங்கப்படுத்தத் தீர்மானித்தது அரசுத்தரப்பு. அந்த உரையின் உள்ளடக்கம், பேச்சுமேசையில் முதல் நாள் காலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை பற்றியெல்லாம் கருத்திலெடுக்காமல் பழிக்குப் பழி - அறிக்கைக்கு அறிக்கை- உரைக்கு உரை - என்ற அடிப்படையில் நடந்து தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டது அது. அப்படி என்னதான் இந்த அங்குரார்ப்பண உரை வெளியானதால் நேர்ந்துவிட்டது? அதை அறிவதற்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் அடிப்படை அம்சங்களை நாம் கவனிக்கவேண்டும். ""அரசும் புலிகளும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை அரசுத்தரப்பால் ஏற்றுக்கொள்ளமுடியாதது. அது இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது. இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கத்தக்கது. இலங்கையின் இறைமைக்கு ஆபத்தானது. ஆகவே, அந்த ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும்'' இதுதான் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அந்த உரையின் சாராம்சம். இதைப் பகிரங்கப்படுத்தித்தான் தனக்குத்தானே மண்வாரிக்கொண்டது இலங்கை அரசுத்தரப்பு. மேற்படி ஒப்பந்தம் அரசமைப்புக்கு உட்பட்டதே என்பதை, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பொதுக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் தான் வழங்கிய தீர்ப்பின் நடுவே இலங்கை உயர்நீதி மன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது. அரசமைப்பு ஏற்பாடுகள் குறித்து வியாக்கியானம் செய்து தீர்ப்பளிக்கும் ஏக அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கே உண்டு. அந்த நீதிமன்றம் மேற்படி அரசு - புலிகள் யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசமைப்புக்கு இணக்கமானதே என்று தனது தீர்ப்பில் கூறியிருக்க, அதற்கு முரண்பட்டு அந்த ஒப்பந்தம் அரசமைப்புக்கு மாறானது என்று அரசுப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அறிவித்திருக்கிறார். அது மட்டுமன்றி அதனை அரச சமாதானச் செயலகத்தின் இணையத்தளம் ஊடாகத் தனது உரையாகப் பகிரங்கப்படுத்தியும் இருக்கிறார். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக - மாறாக- இவ்வாறு பகிரங்கமாக விமர்சனம் முன்வைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் விடயமாகக் கொள்ளப்பட முடியாததா என்று ஆராய்வது ஒருபுறமிருக்க, இவ்வாறு கருத்து வெளியிட்டு, அதைப் பகிரங்கப்படுத்திய அரசுத்தரப்பு, கடைசியாக ஜெனீவாப் பேச்சில் என்ன செய்திருக்கிறது? தற்போதைய யுத்தநிறுத்த ஒப்பந்தம் தனது நாட்டின் அரசமைப்புக்கு முரணானது என்றும், தனது நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு, இறைமை, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு ஆபத்து விளைவிக்கத்தக்கது என்றும், முதல்நாள் பேச்சின் ஆரம்பத்திலேயே தான் வலியுறுத்தி, பின்னர் அதைப் பகிரங்கப்படுத்திவிட்டு, அடுத்த கணம் முதல் அந்த ஒப்பந்தத்தை வரிக்குவரி- ஷரத்துக்கு ஷரத்து அப்படியே செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து அமர்ந் திருந்து விரிவாகப் பேசவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக் கிறது. ஆக இப்போது, தனது நாட்டின் அரசமைப்புக்கு மாறாக தனது நாட்டின் ஐக்கியம், இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, தேசியப் பாதுகாப்பு என்பனவற்றிற்குப் பங்கம் விளைவிக்கும் - ஒரு நடவடிக் கையை அரசின் மூத்த அமைச்சர்கள் நால்வர், பொலீஸ்மா அதிபர், கடற்படைத் தளபதி ஆகியோர் உட்பட அரச உயர்மட்டத்தினர் அடங்கிய குழுவினர் ஜெனீவாப் பேச்சுகளில் மேற்கொண்டுள்ள னர் என்பதை அரசே ஒப்புக்கொள்ளவேண்டிய நிலைமை எழுந்திருக்கிறது. பாலாவின் அங்குரார்ப்பண உரை பகிரங்கப்படுத்தப்பட்டதற்குப் பதில் நடவடிக்கை என்று சீறி, தனது தரப்புப் பேச்சுக் குழுத்தலைவரின் ஆரம்ப உரையைப் பகிரங்கப்படுத்திய இலங்கை அர சுத்தரப்பு, அந்த உரையை அம்பலப்படுத்திவிட்டு, அதற்கு முரணான விதத்தில் ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்துப்பேச இணங்கி, தன்னைத்தானே சிறுமைப்படுத்திக்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஜெனீவாவில் அரசுக்கு நேர்ந்த அவலம் இது. நன்றி>உதயன்

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.