22 February, 2006

ஜெனிவாவில் காத்திருக்கும் பொறி

- முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல், வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுவது எதைக்காட்டுகிறது? - முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். "உங்களுக்குச் சமாதானம் வேண்டுமானால் உங்களை அதற்கு ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று ஒரு லத்தீன் வாசகம் உண்டு. கொழும்பில் கடந்தசில வாரங்களாக நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை வைத்துப்பார்த்தால் ஒன்றில் அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக மிகவும் கத்துக்குட்டி நிலையில் உள்ளது என்ற முடிவுக்கு வரநேரிடும். அல்லது அரசாங்கம் சமாதானத்துக்கு விசுவாசமில்லை என்ற ஒரு முடிவிற்கும் வரலாம். அரசாங்கம் உண்மையாகவே பேச்சுவார்த்தைக்கு தன்னை விசுவாசமாக ஆயத்தப்படுத்திவருகிறது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் அதற்காக அவர்கள் தருவித்திருக்கும் நிபுணர்களால் எவ்வளவுதூரத்துக்கு அவர்களை ஆயத்தப்படுத்த முடியும்? இச்சிறு தீவில் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாகப் போராடிவரும் தமது சகஜீவிகளைப்பற்றி அதிகம் தெரியாத ஒரு நிலையிலேயே, அதாவது இது விஷயத்தில் வெளிநாட்டு நிபுணர்கள் வந்து வகுப்பு எடுக்கும் நிலையிலேயே அரசாங்கத்தின் மிக மூத்த அமைச்சர்கள் காணப்படுகிறார்கள் என்பது எதைக்காட்டுகிறது? பிரச்சினையில் ஆழ அகலத்தைப் புரிந்துகொள்வது என்றால் முதலில் அவர்கள் உள்ளுரிலேயே அணுகக்கூடிய ஆட்கள் இருக்கிறார்கள். முதலாவதாக அவர்களுடைய அமைச்சரவையிலேயே ஒரு உறுப்பினராக இருக்கும் டி. குணசேகரவிடம் வகுப்பு எடுக்கலாம். ஒற்றையாட்சி முறைக்குள் ஏன் பிரச்சினையைத் தீர்க்க முடியாதுஎன்பதை அவரிடம் கேட்டுத்தெளியலாம். அவரைத்தவிர பேராசிரியர் ஜெயதேவஉயாங்கொட இருக்கிறார். பேராசிரியர் சுசரித்த கமலத் இருக்கிறார். விக்ரர் ஐவன் இருக்கிறார். இவர்களைப் போன்ற உள்ளுர் நிபுணர்களை அழைத்து ஆலோசனை கேட்கலாம். ஜீ.எல்.பீரிஸோ அல்லது மிலிந்த மொறகொடவோ வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்கள் அல்லர். அவர்கள்செய்த சமாதானம் ஆறு சுற்றுப்பேச்சுக்களின் பின் இறுகிப்போய் நின்று விட்டதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். மற்றது நாராயண சுவாமியிடம் வகுப்பு எடுப்பது பற்றியது. நாராயண சுவாமி விடுதலைப் புலிகளின் உள் வட்டங்களுக்குள் தொடர்ச்சியாக பழகிய ஒருவரல்லர். றொகான் குணரட்ணவைப்போல அவரும் இரண்டாங்கை, மூன்றாங்கை தகவல்களை வைத்துக்கொண்டு எழுதுபவர்தான். அவரும் அவரையொத்த எல்லாருமே விடுதலைப் புலிகளை தமது நோக்கு நிலையிலிருந்து பார்ப்பவர்கள்தான். விடுதலைப் புலிகள் இயக்கத்தை, அதை அதுவாகப் பார்க்கத் தயாரில்லாத இவர்களுக்கு புலி மனம் எனப்படுவது எளிதில் பிடிபடாது வழுக்கிச் செல்லும் ஒன்றாகவே - 'இலூசிவ்' ஆகவே - தோன்றமுடியும். நாராயணசுவாமி மட்டுமல்ல றொகான் குணரட்ண மட்டுமல்ல புதுடில்லியில் இருந்துகொண்டு தமது பிராந்திய பேரரசு நலன்களுக்கூடாக தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் பார்க்கும் எவருக்குமே புலிகள் இலூசிவ் ஆகத்தான் இருப்பர். கொழும்பிலிருந்துகொண்டு புலிகளை தமது நோக்குநிலையில் இருந்து பார்க்கும் எல்லா அறிவுஜீவிகளும் ஊடகக்காரர்களும் என்றைக்குமே புலிமனத்தைக் கண்டுபிடிக்கப்போவதில்லை. யாரெல்லாம் புலிமனதை, அதை அதுவாகப் பார்க்க முடியாதிருக்கிறார்களோ, அல்லது அதை அதுவாகப் பார்க்க மறுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அது 'இலூசிவ்' ஆகத்தான் இருக்கும். புலிமனதை அதை அதுவாகப் புரிந்துகொள்வது என்பது தமிழர்களை தமிழர்களிற்கேயான பிரச்சினைகளுக்கூடாகப் புரிந்துகொள்வதுதான். தமிழர்களின் பிரச்சினைகளை அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கூடாக புரிந்துகொள்ளும் எவரும் அந்தப் பிரச்சினைகளின் தவிர்க்கவியலாத ஒரு விளைவே புலிகள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள். எனவே புலிமனதைக் கண்டுபிடிப்பது என்பது அதன் ஆழமான அர்த்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதுதான். இதற்கு ஹவார்ட்டில் படித்து பட்டம்பெற வேண்டியதுமில்லை நாராயண சுவாமியிடம் வகுப்பெடுக்க வேண்டும் என்றுமில்லை. பிரித்தானியக் கடற்படையின் புகழ்பெற்ற தளபதியாக இருந்தவர் நெல்சன். இவருக்கு ஒரு கண் இல்லை. தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சியடைந்திராத அந்நாட்களில் கடற்கரையிலிருந்து காட்டப்படும் சமிக்ஞைகளே சமர்களை வழிநடத்தின. தளபதி நெல்சன் சமர்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் போது கள யதார்த்தத்திற்கேற்ப முடிவுகளை எடுக்க விரும்பினால் கரையை நோக்கி பார்வையிழந்த தனதுகண்ணை வைத்துக்கொள்வாராம். இதன் மூலம் கரையில் காட்டப்படும் சமிக்ஞைகள் தனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு தன்முடிவுப்படி சண்டையை வழிநடத்துவாராம். நெல்சனின் சகோதரர்கள் இப்பொழுதும் புதுடில்லியிலும், கொழும்பிலும் இருக்கிறார்கள். அவர்கள் எதையாவது புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றால் அதைப்பார்க்காமலேயே விட்டுவிடுகிறார்கள். ஜெனிவாவுக்குப் போகவிருக்கும் அரச தரப்புப் பிரதிநிதிகளும் இப்படி நெல்சனின் கண்கொண்டே பிரச்சினைகளைப் பார்க்க விரும்புவது தெரிகிறது. மெய்யாகவே அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்களாயின் அவர்கள் ஆலோசனை பெற்றிருக்கவேண்டியது வேறு ஆட்களிடமே. எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள். அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது. ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். முன்பு ரணில் ஒஸ்லோவிலும், டோக்கியோவிலும் பொறிவைக்க முயன்றார். இப்பொழுது மஹிந்த ஜெனிவாவில் பொறி வைக்க முயல்கிறார். தமிழீழ விடுதலைப் போராட்டம் இது வரை எத்தனையோ பொறிகளைக் கண்டுவிட்டது. முதலாவது பொறி திம்புவில் வைக்கப்பட்டது. அங்கிருந்து தொடங்கி டோக்கியோ வரையிலும் விதம்விதமான பொறிகள் வைக்கப்பட்டன. சில பொறிகள் தர்மர்பொறிகள். சிலபொறிகள் வீமன்பொறிகள். சிலபொறிகள் தர்மர்பொறிபோல உருமறைக்கப்பட்ட வீமன்பொறிகள். இப்பொழுது ஒரு புதிய பொறி ஜெனிவாவில் காத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் எத்தனை பொறிகளைக் கடக்கவேண்டியிருக்கும்? -நிலாந்தன்- நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 19-022006 கணனித் தட்டச்சு: திருமகள் (தமிழீழம்) குறிப்பு: நிலாந்தன் அவர்கள் தமிழீழத்திலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் தொடர்ச்சியாக அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருவதுடன், புலிகளின் குரல்வானொலியிலும் தனது அரசியல் ஆய்வுகளை வழங்கிவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: