03 September, 2006

பருத்தித்துறை கடற்சமரில் நடந்தது என்ன?-இக்பால் அத்தாஸ.

பருத்தித்துறை கடற்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 போராளிகள் உயிரிழந்ததாக சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுவது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் கடற்சமர் குறித்து எழுதிய கட்டுரையில் இதனை இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை கடற்சமர் குறித்து அக்கட்டுரையில் இக்பால் அத்தாஸ் மேலும் கூறியதாவது: - சிறிலங்கா கடற்படை மீது அல்லது கடற்படைக் கப்பல் மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தவறிவிட்டதா? - திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு கடற்பிரதேசம் வழியாகத்தான் இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கான விநியோகப்பாதை அமைந்துள்ளது வெளிப்படையான ஒன்று. அப்படியான நிலையில் இந்த விநியோகப்பாதையை விடுதலைப் புலிகள் எந்த விலை கொடுத்தேனும் சீர்குலைக்க நினைத்தால் யாழ். குடாநாட்டில் உள்ள 40 ஆயிரம் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிலை என்ன? - கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய கடற்சமர் ஒரு திசை திருப்பும் நடவடிக்கையா? ஆயுதங்களை நடுக்கடலில் இறக்கினரா? - சிறிலங்கா கடற்படையினரது எதிர்தாக்குதல் வலிமையை சோதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையா அது? - விடுதலைப் புலிகளின் படகுகள் யாழ். குடாவில் ஏதேனும் ஒரு பகுதியில் போராளிகளை தாக்குதல் நடவடிக்கைக்காக இறக்கிவிட்டனவா? என்று அதில் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நன்றி>புதினம்.