03 September, 2006

பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை -சிறீலங்கா

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். நாராயணனுடனான பசில் ராஜபக்ஸவின் சந்திப்பு மிகவும் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் இடம்பெற்றதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்தவையென தான் கருதும் குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெளிவுபடுத்த விரும்பியதாக டில்லியிலும் கொழும்பிலுமுள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்தி வெளியிட்டிருக்கிறது. இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தானியத் தூதுவர் பசீர் வலி முகமத் கடந்த ஆகஸ்ட் 14 இல் கொழும்பில் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியிருந்தார். அதன் பின்னர் கொழும்புக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான இராணுவ ரீதியிலான பிணைப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. அதேசமயம் வட, கிழக்கில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்போது விமானப் படையின் ஜெற் விமானங்களில் பாகிஸ்தான் விமானிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் உண்மை இல்லையென ராஜபக்ஸ கூறியுள்ளார். அத்துடன், சம்பூரைக் கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமெனவும் ஏனெனில், அந்தப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது இலங்கையின் பாரிய கடற்படைத்தளமான திருமலைத் தளத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இராணுவ வரைபடத்தைக்காட்டி விளக்கமளித்துள்ள ராஜபக்ஸ, சம்பூரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கொழும்புக்கு மிக முக்கியமானதென்றும் விபரித்திருக்கிறார். இந்த நடவடிக்கை பூர்த்தியடைந்தால் புலிகள் விரும்பினால் அவர்களுடன் பேசுவதற்கு இலங்கை தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பூர் பிராந்தியத்தில் உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் பசில் ராஜபக்ஸவின் டில்லிப் பயணம் இடம்பெற்றிருக்கிறது. இந்த மோதல்களில் இரு தரப்பிற்கும் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் பிரதானமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2005 டிசம்பர் தொடக்கம் ஜூலை 2006 வரை 169 பாதுகாப்புப் படையினரை புலிகள் கொன்றுள்ளதாகவும் பாரிய மோதல்கள் வெடித்தபின் புலிகளுக்கு எதிரான மோதலில் 100 படையினர் வரை இறந்துள்ளதாகவும் ராஜபகஸ சுட்டிக்காட்டியுள்ளார். பகிரங்க யுத்தத்திலும் பார்க்க முன்னர் புலிகள் கையாண்ட முறைமையினால் இரண்டு, மூன்று, நான்கு என்று படைவீரர்களின் இறப்பு அதிகளவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கொழும்புக்கு இந்தியா மற்றும் ஏனைய நாடுகளினால் கூறப்பட்டதென்றும் ஆனால், இதே ஆலோசனை புலிகளுக்கு ஒருபோதும் சொல்லப்படவில்லையெனவும் ராஜபக்ஸ புகார் தெரிவித்திருக்கிறார். தற்போதைய மோதலானது முழு அளவிலான யுத்தத்துக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து இருப்பது குறித்து பசில் ராஜபக்ஸவும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் முக்கியஸ்தராக இருக்கும் மற்றொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ஸவும் மிகத்தெளிவாக இருக்கின்றனரென்று இந்திய அதிகாரிகள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சம்பூரில் தமது கட்டுப்பாட்டை இழக்கும்போது விடுதலைப் புலிகள் திரும்பத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருதுவதாக தென்படுகிறது. பசில் ராஜபக்ஸ தெரிவித்தவற்றை பொறுமையாக கேட்டு அறிந்து கொண்ட இந்திய அதிகாரிகள், அதேசமயம் யுத்தத்தின் மூலம் இலங்கை மோதலுக்கு இறுதித் தீர்வொன்றை ஒருபோதுமே காணமுடியாதென்பதை மிகப்பண்பட்ட முறையில் அவருக்கு கூறியுள்ளனர். அத்துடன், சம்பூரை கைப்பற்றுவதால் இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மோதல் மேலும் அதிகரிக்கும் என்றே சர்வதேச சமூகமும் அதிகளவு கவலை கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு கூறும் நியாயத்தை விடுதலைப் புலிகள் போலியான, ஏமாற்று நடவடிக்கையென வர்ணித்துள்ளனர். ஜூலையில் இலங்கை இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த பின் தாங்கள் சம்பூர் தளத்திலிருந்து திருமலைத் தளத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். நன்றி>புதினம்.

1 comments:

said...

இலங்கை அரசின் கூற்று மட்டும் இதில் வெளியாகியுள்ளது.

இதுக்குறித்த விடுதலைபுலிகளின் எண்ணத்தையும் அறிய ஆவல்.