01 September, 2006
நோர்வேக்கு, சிறீலங்கா எச்சரிக்கை.
சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது.
விலகிச் செல்லும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன், நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌர் ஆகியோர் தமது பணிகளை மறந்து அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், தேசிய பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து கடும் விசனத்தை வெளிப்படுத்தினர்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"அண்மைக்காலமாக நோர்வே அதன் போக்கை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகவே நாம் அந்த நாட்டை அழைத்திருந்தோம். தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் நோர்வேயின் அனுசரணையை தொடர இடமளித்தது. இன்று நோர்வே எல்லை மீறிச் செயற்படத் தொடங்கியுள்ளது. இறைமை கொண்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் தோரணையில் அதிகாரம் செலுத்த நோர்வே முயற்சித்து வருகின்றது.
இதேவேளை, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன் தமது பதவியிலிருந்து விலகிச் செல்லும் நேரத்தில் அரசு மீது சேறு பூசி விட்டுச் செல்லும் முயற்சியொன்றில் ஈடுபட்டிருக்கின்றார். மூதூரில் மனிதாபிமானப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைகளுக்கு அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்படுகொலைகள் தொடர்பாக மரண விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில் எத்தகைய ஆதாரத்தை வைத்துக் கொண்டு அரசு மீது பழிசுமத்துவதற்கு ஹென்றிக்சன் முன்வந்தார் எனக் கேட்கின்றோம். அவரின் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஹென்றிக்சன் மிக மோசமான விதத்திலும் பொறுப்பற்ற ரீதியிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நாம் காண்கின்றோம்.
இராணுவத் தளபதி மீதான படுகொலை முயற்சி, மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க படுகொலை, வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் படுகொலை செய்யப்பட்டமை, கெப்பிற்றிகொல்லாவ படுகொலைகள் என்பவை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு மாதங்கள் காலமெடுத்தன. ஆனால், நிவாரணப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக விசாரணை ஆரம்பித்து 20 நாட்கள் கூட நிறைவடையவில்லை. முழுமையான விபரங்கள் எதனையும் அறிந்து கொள்ளாமல் அரசு மீது இப்படியானதொரு பழியைச் சுமத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மாவிலாறு சம்பவம், மூதூர், தோப்பூர் சம்பவங்கள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கண்டுகொள்ளாமலிருப்பது வியப்புக்குரியதாகவே உள்ளது."
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயம் பற்றிய தகவல் புதுமையான ஒன்றாகவே தெரிகிறது. ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே லண்டன் சென்றுள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் உட்பட அரச உயர்மட்டத்தினரைச் சந்திப்பார். இதனை நாம் மறுக்கவில்லை. இது வழமையாக நடக்கக் கூடிய விடயமாகும்.
ஆனால், பிரிட்டிஷ் பிரதமரிடம் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தரக் கோரவிருப்பதாக தெரிவித்திருப்பதுதான் வியப்பானதாக உள்ளது. ஜனாதிபதி தமது லண்டன் விஜயம் பற்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இது உத்தியோகபூர்வ விஜயமல்ல. அவரது தனிப்பட்ட பயணமே ஆகும். பௌர் சோதிடம் கூறுவதிலும் வல்லவர் என்பது இப்போது தான் தெரிகிறது.
நோர்வே நடவடிக்கைகளில் இன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால், அரசாங்கம் காத்திரமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். இது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வரகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த விடயங்கள் குறித்து முடிவொன்று எடுக்கப்படலாம்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment