01 September, 2006

கீழ்த்தரமான இராஜதந்திரத்தை மேற்கொள்ளுகிறது இந்தியா.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கீழ்த்தரமான இராஜதந்திர செயற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது: தற்போதைய சமரில் நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய யாழ். முற்றுகையின் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமது இராணுவத்தினரை மீட்கவோ யுத்த நிறுத்தத்தை உருவாக்கவோ முன்வரவில்லை. சிறிலங்கா நட்பு சக்திகளோடு இராணுவ உறவை முன்னெடுத்து பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றார் அவர். ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது: தற்போது யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. இவ்வளவு கீழ்த்தரமான இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வது ஆச்சரியமளிக்கிறது. பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கேட்டுக்கொள்வது எமக்கு ஆச்சரியமளிக்கிறது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை குறித்து ஊக்கப்படுத்துகின்றன. அப்படியான வலுவுடன் விடுதலைப் புலிகள் இருப்பார்களேயானால் மாவிலாறு மோதலுக்குப் பின்னர் ஒரு இஞ்ச் நிலத்தை கூட அவர்களால் ஏன் பிடிக்க முடியவில்லை.? மூதூர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவம்தான் காரணம் என்று பணி விலகிச் சென்று உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகள் மீது நாம் சந்தேகம் கொள்கிறோம். யுத்த நிறுத்த கண்காணிப்பு குறித்து அடிப்படையை அவர்கள் அறிந்துதான் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறர்களா? அவர்களது அனுபவமற்ற தொழிற்முறையானது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார் அத்துரலிய ரத்ன தேரர். நன்றி>புதினம்.

0 comments: