09 September, 2006
வைகோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.
கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: காலப்போக்கில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம்.
கேள்வி: இடையில் இந்தியா தீர்வுத்திட்டம் ஒன்று கொடுத்ததாக வெளியான தகவல்; குறித்து?
பதில்: இறுதியில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தத்தீர்வு அமையும் என நினைக்கிறோம். அப்படி இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதைத் தவிர இவ்விடயம் குறித்து விசேடமாக மேற்கொண்டு கூறுவதற்கு ஒன்றுமில்லை.
கேள்வி: தமிழக முதல்வர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் உட்பட மற்றைய தமிழகத் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா?
பதில்: இரண்டொரு நாட்களில் தமிழகத் தலைவர்கள் அனைவரையும் சந்திப்போம். அதேநேரம் முதல்வரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க சம்பந்தன் மறுத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் தாம் இரண்டொரு நாட்களில் சந்திப்பு பேசவிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனுராவுக்கு வைகோ கண்டனம்
இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடக்கலாம்.
சிங்கள அரசின் இனவெறியும் தமிழர்களுக்கு எதிரான அராஜக மனப்பான்மையும் சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் வாக்குமூலத்தில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தனது இராஜிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயற்பட்டுள்ளார். அதற்காக அவரைக் குறை கூறிய விதம் கண்டனத்துக்குரிய என்றார்.
வைகோவுடனான சந்திப்பில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி சந்திப்பது என்றும் அதைத் தொடர்ந்து அன்று மாலையோ அல்லது 9 ஆம் திகதி காலையிலோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அத்திட்டத்தின் படி தமிழக முதல்வரைச் சந்திக்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
தமிழக முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாறுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வைகோ மூலமாக பிரதமரைச் சந்திக்கும் அவர்களது திட்டம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் அதிருப்தி அடைந்ததாகவம் இதன் விளைவாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தள்ளிப்போட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மதியம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.
வைகோ பிரதமரின் தனிச்செயலாளருடன் பேசி இச்சந்திப்புக்கு அனுமதி பெற்றுவிட்டதாகவும் 8 ஆம் திகதி மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டது.
ஆனால் மாகராஸ்டிரா குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கியூபா பயணம் குறித்த கடைசி நிமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பிரதமருடனான சந்திப்பு கைகழுவப்பட்டதாககத் தெரிகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் தாம் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழக முதல்வரைச் சந்திப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.
தமிழகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தேசிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆதாரம்: வீரகேசரி.
04 September, 2006
"தரகு" வேலைக்கு முஸ்லீம்கள்.
ஐ.தே.கவுக்கும் அரசுக்கும் இடையே "தரகு" வேலை பார்க்க ஹக்கீமுக்கு இந்தியா அறிவுரை .
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இந்தியா அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவை கடந்த சனிக்கிழமை ஹக்கீம் சந்தித்துப் பேசிய போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் ஏற்கனவே 10 முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதால் மற்றொரு முஸ்லிம் அமைச்சர் தேவைப்படவில்லை என்று ஹக்கீம் பதிலளித்துள்ளார்.
மேலும் ஹக்கீமின் அண்மைய புதுடில்லி பயணத்தின் போது தென்னிந்திய முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்தும் நிருபமா ராவிடம் இச்சந்திப்பில் விளக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
03 September, 2006
பருத்தித்துறை கடற்சமரில் நடந்தது என்ன?-இக்பால் அத்தாஸ.
பருத்தித்துறை கடற்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 போராளிகள் உயிரிழந்ததாக சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுவது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் கடற்சமர் குறித்து எழுதிய கட்டுரையில் இதனை இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை கடற்சமர் குறித்து அக்கட்டுரையில் இக்பால் அத்தாஸ் மேலும் கூறியதாவது:
- சிறிலங்கா கடற்படை மீது அல்லது கடற்படைக் கப்பல் மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தவறிவிட்டதா?
- திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு கடற்பிரதேசம் வழியாகத்தான் இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கான விநியோகப்பாதை அமைந்துள்ளது வெளிப்படையான ஒன்று. அப்படியான நிலையில் இந்த விநியோகப்பாதையை விடுதலைப் புலிகள் எந்த விலை கொடுத்தேனும் சீர்குலைக்க நினைத்தால் யாழ். குடாநாட்டில் உள்ள 40 ஆயிரம் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிலை என்ன?
- கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய கடற்சமர் ஒரு திசை திருப்பும் நடவடிக்கையா? ஆயுதங்களை நடுக்கடலில் இறக்கினரா?
- சிறிலங்கா கடற்படையினரது எதிர்தாக்குதல் வலிமையை சோதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையா அது?
- விடுதலைப் புலிகளின் படகுகள் யாழ். குடாவில் ஏதேனும் ஒரு பகுதியில் போராளிகளை தாக்குதல் நடவடிக்கைக்காக இறக்கிவிட்டனவா? என்று அதில் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நன்றி>புதினம்.
பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை -சிறீலங்கா
விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
நாராயணனுடனான பசில் ராஜபக்ஸவின் சந்திப்பு மிகவும் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் இடம்பெற்றதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்தவையென தான் கருதும் குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெளிவுபடுத்த விரும்பியதாக டில்லியிலும் கொழும்பிலுமுள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்தி வெளியிட்டிருக்கிறது.
இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தானியத் தூதுவர் பசீர் வலி முகமத் கடந்த ஆகஸ்ட் 14 இல் கொழும்பில் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியிருந்தார். அதன் பின்னர் கொழும்புக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான இராணுவ ரீதியிலான பிணைப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. அதேசமயம் வட, கிழக்கில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்போது விமானப் படையின் ஜெற் விமானங்களில் பாகிஸ்தான் விமானிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் உண்மை இல்லையென ராஜபக்ஸ கூறியுள்ளார்.
அத்துடன், சம்பூரைக் கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமெனவும் ஏனெனில், அந்தப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது இலங்கையின் பாரிய கடற்படைத்தளமான திருமலைத் தளத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இராணுவ வரைபடத்தைக்காட்டி விளக்கமளித்துள்ள ராஜபக்ஸ, சம்பூரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கொழும்புக்கு மிக முக்கியமானதென்றும் விபரித்திருக்கிறார். இந்த நடவடிக்கை பூர்த்தியடைந்தால் புலிகள் விரும்பினால் அவர்களுடன் பேசுவதற்கு இலங்கை தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பூர் பிராந்தியத்தில் உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் பசில் ராஜபக்ஸவின் டில்லிப் பயணம் இடம்பெற்றிருக்கிறது.
இந்த மோதல்களில் இரு தரப்பிற்கும் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் பிரதானமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
2005 டிசம்பர் தொடக்கம் ஜூலை 2006 வரை 169 பாதுகாப்புப் படையினரை புலிகள் கொன்றுள்ளதாகவும் பாரிய மோதல்கள் வெடித்தபின் புலிகளுக்கு எதிரான மோதலில் 100 படையினர் வரை இறந்துள்ளதாகவும் ராஜபகஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
பகிரங்க யுத்தத்திலும் பார்க்க முன்னர் புலிகள் கையாண்ட முறைமையினால் இரண்டு, மூன்று, நான்கு என்று படைவீரர்களின் இறப்பு அதிகளவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கொழும்புக்கு இந்தியா மற்றும் ஏனைய நாடுகளினால் கூறப்பட்டதென்றும் ஆனால், இதே ஆலோசனை புலிகளுக்கு ஒருபோதும் சொல்லப்படவில்லையெனவும் ராஜபக்ஸ புகார் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய மோதலானது முழு அளவிலான யுத்தத்துக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து இருப்பது குறித்து பசில் ராஜபக்ஸவும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் முக்கியஸ்தராக இருக்கும் மற்றொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ஸவும் மிகத்தெளிவாக இருக்கின்றனரென்று இந்திய அதிகாரிகள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சம்பூரில் தமது கட்டுப்பாட்டை இழக்கும்போது விடுதலைப் புலிகள் திரும்பத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருதுவதாக தென்படுகிறது.
பசில் ராஜபக்ஸ தெரிவித்தவற்றை பொறுமையாக கேட்டு அறிந்து கொண்ட இந்திய அதிகாரிகள், அதேசமயம் யுத்தத்தின் மூலம் இலங்கை மோதலுக்கு இறுதித் தீர்வொன்றை ஒருபோதுமே காணமுடியாதென்பதை மிகப்பண்பட்ட முறையில் அவருக்கு கூறியுள்ளனர்.
அத்துடன், சம்பூரை கைப்பற்றுவதால் இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மோதல் மேலும் அதிகரிக்கும் என்றே சர்வதேச சமூகமும் அதிகளவு கவலை கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு கூறும் நியாயத்தை விடுதலைப் புலிகள் போலியான, ஏமாற்று நடவடிக்கையென வர்ணித்துள்ளனர்.
ஜூலையில் இலங்கை இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த பின் தாங்கள் சம்பூர் தளத்திலிருந்து திருமலைத் தளத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி>புதினம்.
02 September, 2006
புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடங்கியது
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சிறிலங்கா அரசாங்கம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் கொழும்பில் உள்ள வங்கிகளுக்கு புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சென்ற போதுதான் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.
சிறிலங்காவின் மத்திய வங்கியின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக நிர்வாக இயக்குநர லோறன்ஸ் திலகர் இதனை உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரை பணத்தை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லோறன்ஸ் திலகர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்த எதுவித முன் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் லோறன்ஸ் திலகர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கையால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பணிகளும் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் பாதிக்கப்படும் என்றும் லோறன்ஸ் திலகர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 20 மில்லியன் தொகை இருருந்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் வங்கிகளுக்குச் சென்று அரசாங்கத்தின் உத்தரவு குறித்தும் தங்களது காசோலைகளை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற போது இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரலிடம் விளக்கம் கேட்க தமிழர் புனர்வாழ்வுக் கழக சட்ட ஆலோசகர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நன்றி>புதினம்.
வைகோ பேசியது சரியா தவறா?- க.சுப்பு
புலிகளை தீவிரவாதிகள் என்கிற காங்கிரஸ் கட்சி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா?
தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க. சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் க. சுப்பு கூறியுள்ளதாவது:
அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ வெளிப்படுத்திய உணர்வில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் கண்மூடித்தனமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தப் பொறுப்பான நடவடிக்கையும் இதுவரை இல்லை.
ஆனால் அங்கு வாழ்கிற கடைசித்தமிழன் வரை கொன்று குவிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் தாண்டவமாடுகிறது. இந்தக் கொடுமைகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் வைகோ உள்பட எம் போன்றவர்களின் கருத்து. இதில் என்ன தவறு?
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரே ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள்தான் என்பது வைகோவின் கருத்து. எனவே அதற்கு தார்மீக ஆதரவு தருகிறார். விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பினர் என்கின்றனர் காங்கிரஸ்காரர்கள்.
ஆனால் அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினால், இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்கிறார்கள். கைது செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.
எதிரிகளைக் கொல்ல ஏ.கே. 47 துப்பாக்கியையும் ஏந்துவோம் என்று ஒருவர் பேசினால் உடனே ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு அவர் சுட்டுத் தள்ளப் போகிறார் என்பது அர்த்தம் அல்ல. நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வலிமை சேர்க்கும் வார்த்தைகளாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய தீவிரவாதத்தை தூக்கிப் பிடிப்பதாகக் கருதக் கூடாது.
பகுத்தறிவுப் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது பாரதிதாசன் பாடினார்,
சீரங்க நாதரையும
தில்லை நடராஜனையும
பீரங்கி வைத்து
பிளந்தெறிவது எந்தக் காலம்?
இந்த வரிகளை கருணாநிதி உள்பட எல்லோரும் அன்று தெருத்தெருவாகச் சொல்லி அலைந்தார்கள், யாரும் பாரதிதாசனைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும் என்றார் க. சுப்பு.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட வெண்டும்- சிங்கள மக்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே ஒழிய யாரையும் மிரட்டுகிற பாணியிலோ, சவால் விடும் பாணியிலோ பேசுவது பிரச்சனையைத் திரிக்க உதவாது என்பதே மக்கள் கருத்து கூறியுள்ளார்.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காங்கிரஸ் கட்சியின் விமர்சன நிலைப்பாட்டையும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.
01 September, 2006
சிறிதுநேரத்தில் சென்னையில் ஆரம்பம்.
ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது.
இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது.
தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும்.
அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார்.
இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னணியினரும், கழக தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
நோர்வேக்கு, சிறீலங்கா எச்சரிக்கை.
சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது.
விலகிச் செல்லும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன், நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌர் ஆகியோர் தமது பணிகளை மறந்து அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், தேசிய பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து கடும் விசனத்தை வெளிப்படுத்தினர்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"அண்மைக்காலமாக நோர்வே அதன் போக்கை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகவே நாம் அந்த நாட்டை அழைத்திருந்தோம். தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் நோர்வேயின் அனுசரணையை தொடர இடமளித்தது. இன்று நோர்வே எல்லை மீறிச் செயற்படத் தொடங்கியுள்ளது. இறைமை கொண்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் தோரணையில் அதிகாரம் செலுத்த நோர்வே முயற்சித்து வருகின்றது.
இதேவேளை, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன் தமது பதவியிலிருந்து விலகிச் செல்லும் நேரத்தில் அரசு மீது சேறு பூசி விட்டுச் செல்லும் முயற்சியொன்றில் ஈடுபட்டிருக்கின்றார். மூதூரில் மனிதாபிமானப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைகளுக்கு அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்படுகொலைகள் தொடர்பாக மரண விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில் எத்தகைய ஆதாரத்தை வைத்துக் கொண்டு அரசு மீது பழிசுமத்துவதற்கு ஹென்றிக்சன் முன்வந்தார் எனக் கேட்கின்றோம். அவரின் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஹென்றிக்சன் மிக மோசமான விதத்திலும் பொறுப்பற்ற ரீதியிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நாம் காண்கின்றோம்.
இராணுவத் தளபதி மீதான படுகொலை முயற்சி, மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க படுகொலை, வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் படுகொலை செய்யப்பட்டமை, கெப்பிற்றிகொல்லாவ படுகொலைகள் என்பவை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு மாதங்கள் காலமெடுத்தன. ஆனால், நிவாரணப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக விசாரணை ஆரம்பித்து 20 நாட்கள் கூட நிறைவடையவில்லை. முழுமையான விபரங்கள் எதனையும் அறிந்து கொள்ளாமல் அரசு மீது இப்படியானதொரு பழியைச் சுமத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மாவிலாறு சம்பவம், மூதூர், தோப்பூர் சம்பவங்கள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கண்டுகொள்ளாமலிருப்பது வியப்புக்குரியதாகவே உள்ளது."
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
"நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயம் பற்றிய தகவல் புதுமையான ஒன்றாகவே தெரிகிறது. ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே லண்டன் சென்றுள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் உட்பட அரச உயர்மட்டத்தினரைச் சந்திப்பார். இதனை நாம் மறுக்கவில்லை. இது வழமையாக நடக்கக் கூடிய விடயமாகும்.
ஆனால், பிரிட்டிஷ் பிரதமரிடம் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தரக் கோரவிருப்பதாக தெரிவித்திருப்பதுதான் வியப்பானதாக உள்ளது. ஜனாதிபதி தமது லண்டன் விஜயம் பற்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இது உத்தியோகபூர்வ விஜயமல்ல. அவரது தனிப்பட்ட பயணமே ஆகும். பௌர் சோதிடம் கூறுவதிலும் வல்லவர் என்பது இப்போது தான் தெரிகிறது.
நோர்வே நடவடிக்கைகளில் இன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால், அரசாங்கம் காத்திரமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். இது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வரகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த விடயங்கள் குறித்து முடிவொன்று எடுக்கப்படலாம்.
நன்றி>புதினம்.
கீழ்த்தரமான இராஜதந்திரத்தை மேற்கொள்ளுகிறது இந்தியா.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கீழ்த்தரமான இராஜதந்திர செயற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது.
கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது:
தற்போதைய சமரில் நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய யாழ். முற்றுகையின் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமது இராணுவத்தினரை மீட்கவோ யுத்த நிறுத்தத்தை உருவாக்கவோ முன்வரவில்லை.
சிறிலங்கா நட்பு சக்திகளோடு இராணுவ உறவை முன்னெடுத்து பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றார் அவர்.
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது:
தற்போது யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. இவ்வளவு கீழ்த்தரமான இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வது ஆச்சரியமளிக்கிறது.
பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கேட்டுக்கொள்வது எமக்கு ஆச்சரியமளிக்கிறது.
பல அரச சார்பற்ற நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை குறித்து ஊக்கப்படுத்துகின்றன. அப்படியான வலுவுடன் விடுதலைப் புலிகள் இருப்பார்களேயானால் மாவிலாறு மோதலுக்குப் பின்னர் ஒரு இஞ்ச் நிலத்தை கூட அவர்களால் ஏன் பிடிக்க முடியவில்லை.?
மூதூர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவம்தான் காரணம் என்று பணி விலகிச் சென்று உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகள் மீது நாம் சந்தேகம் கொள்கிறோம். யுத்த நிறுத்த கண்காணிப்பு குறித்து அடிப்படையை அவர்கள் அறிந்துதான் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறர்களா? அவர்களது அனுபவமற்ற தொழிற்முறையானது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார் அத்துரலிய ரத்ன தேரர்.
நன்றி>புதினம்.
Subscribe to:
Posts (Atom)