21 January, 2007
சிறார் படைச்சேர்ப்பில் துணை இராணுவக்குழுவினருடன் அரசு:
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் சிறார்களை தமது படையில் சேர்ப்பதனை ஊக்கிவிப்பதன் மூலம் சிறிலங்கா அரசு சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் கியூமன் றைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை சாடியுள்ளது.
இந்த அமைப்பு தனது 100 பக்கங்களை கொண்ட அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை (24.01.07) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்படும் சிறார்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்பவர்கள். அந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் இராணுவ மற்றும் காவல்துறையினரின் சோதனை நிலைகள், முகாம்கள் என்பன உள்ளன.
அரசின் உதவிகள் இல்லாது எந்த ஆயுதக்குழுக்களும் இவ்வளவு பெரும் தொகையான சிறார்களை கடத்தி நன்கு வடிவமைக்கப்பட்ட முகாம்களில் பயிற்சிகளை கொடுக்க முடியாது.
சிறிலங்கா அரசு இது தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. கடந்த வருடத்தில் மட்டும் 200 சிறார்கள் கருணா குழுவினரால் கிழக்கில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டதை விட மூன்று மடங்குகள் அதிகம் எனக் கூறப்படுகின்றது.
இணைந்த குற்றம்- கருணா குழுவின் கடத்தல் மற்றும் சிறார் படைச்சேர்ப்பில் அரசின் மறைமுக ஆதரவு என்னும் தலைப்பிலான இந்த அறிக்கையில் வடக்கு - கிழக்கில் பாதிக்கப்பட்ட பெற்றோரினதும், சிறார்களினதும் விரிவான நேர்காணல்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இருபது வருடப் போரில் விடுதலைப் புலிகளும் சிறார்களை படையில் சேர்த்துள்ளனர். ஆனால் தற்போது சிறிலங்கா அரசு தனது துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினருடன் சேர்ந்து சிறார் படைச்சேர்ப்பை மேற்கொள்கின்றது.
கடந்த வருடங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் சிறிலங்காப் படைகள் கருணா குழுவினருடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டு வருவது தெரியவந்துள்ளது.
சிறிலங்காவின் 23 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள வெலிகந்தைக்கு மேற்காக 10 கி.மீ தூரத்தில் 4 தொடக்கம் 5 முகாம்களை கருணா குழுவினர் அமைத்துள்ளனர். இந்த 23 ஆவது படைப்பிரிவுக்கு பிரிக்கேடியர் தயா ரட்னாயக்க கட்டளைத் தளபதியாக பணியாற்றி வருகின்றார்.
கடத்தப்படும் நூற்றுக்கணக்கான சிறார்களை அரசின் அனுமதியின்றி படையினரின் பெருமளவான சோதனைச் சாவடிகளும், முகாம்களும் உள்ள பகுதியால் கருணா குழுவினரால் கொண்டு செல்ல முடியாது. இதனை அரசும் கருணா குழுவினரும் மறுத்து வந்தாலும் அங்கு வாழும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அரச படைகளுடன் கருணா குழுவினர் இணைந்து செயற்படுவதை தாம் அவதானித்ததாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருணா குழுவினர் படையினருடன் இணைந்து அவர்களின் சோதனைச் சாவடியில் நின்று தமது அடையாள அட்டைகளை பரிசோதனை செய்வதுடன் அரச கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசு எவ்வாறு நடத்துகின்றது என கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் நாள் நாம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் வரை அரச செயலகம் அதற்குரிய பதிலை அனுப்பவில்லை.
கருணா குழுவினரும் விடுதலைப்புலிகளும் சிறார்களை படையில் சேர்ப்பதனை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளை கேட்டுள்ளோம்.
மேலும் கருணா குழுவினர் மூலம் சிறிலாங்கா அரசு மேற்கொள்ளும் கடத்தல்களையும், சிறார் படைச்சேர்ப்பையும் நிறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment