பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவவே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார். வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டு மண்ணிழந்து மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும். அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு ரஷ்சியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்? இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான் வரலாறு எனது வழிகாட்டி எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார். திருக்குறளில் குறிப்பிட்டது போல கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை அதாவது வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை கவச எதிர்ப்புப்படை என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள் கரும்புலிகள் வான்புலிகள் என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார். தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம். இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்ப்படை விமானப்படைத் தளங்களாலும் தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன். இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார். இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார். “பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார். எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரி எதிர்ப்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர். பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி. இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்டு இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது. இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது.
-யாரோ-
14 November, 2005
Subscribe to:
Posts (Atom)