13 July, 2006

தமிழர்களின் வங்கிக்கணக்குகளை முடக்க அரசாங்கம்முடிவு.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உரியவர்களால் பராமரிக்கப்படாமலிருக்கும் வங்கிக் கணக்குகளை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளை இலங்கை வங்கி ஆரம்பித்துள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த நடவடிக்கையை இலங்கை வங்கி ஆரம்பித்திருப்பதன் மூலம் குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் பல கோடி ரூபா வைப்பு அரசுடைமையாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் இதன் முதற்கட்டமாக அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காசநோய் ஆஸ்பத்திரி வளவிலுள்ள கோயிலின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு அரசுடைமையாக்கப் போவதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் பராமரிக்கப்படாதிருக்கும் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பு பெட்டகங்களிலிருக்கும் பணம் மற்றும் நகைகளையும் அரசுடைமையாக்கப் போவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாகவே மயிலிட்டி கோயில் கணக்குகளை முடக்கப் போவதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது. பதிவு.கொம்

12 July, 2006

பிரான்ஸ்வாழ் தமிழ்மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழ்மக்களல் மீதான படுகொலைகளை கண்டித்து பிரான்சில் நடாத்தப்பட்டு வரும் கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் 12-07-2006 புதன்கிழமை 24வது நாளாக காலை 10:00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலின் பின் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

ஜரோப்பியத் தலைமைக்கும், தாயகத்தில் எமது மக்களின் இன்றைய சூழ்நிலை பற்றியதுமான அஞ்சல் அட்டைகள் தமிழ் இளையோர் அமைப்பினரால் மக்களின் கையெழுத்து பெறப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றது. இதில் அஞ்சல் அட்டைகளை பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டவர்களும் பணம் கொடுத்துப் பெற்று நிரப்பிக் கொடுத்திருந்தனர்.

மாலை சரியாக 18:00 மணிக்கு குளிர்பாணம் வழங்கப்பட்டு கவனயீர்ப்பு உண்ணாவிரதம் இன்றைய நாள் நிறைவு பெற்றது இன்றைய நாளிலும் 90மேலான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

11 July, 2006

ஐ.நா. அமைதிப்படையின் பிரசன்னம் மேகுலகின் இறுதி ஆயுதமா?

1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள எரித்திய விடுதலை முன்னணிப் போராளிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான பல தகவல்கள் அவர்களிடம் இருப்பது பற்றி அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன். இந்தியத் தலையீடு பற்றியும், ஈழ தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல போராளிக் குழுக்கள் அதிகம் இந்தியா சார்ந்து, இருப்பது பற்றியும் அவர்களிடம் சில காத்திரமான விமர்சனங்கள் இருந்தன. எதியோப்பியாவுடன் அவர்களுக்கும் ஏற்பட்ட போரியல் அனுபவங்களை மிக ஆழமாக விபரித்தனர். அவர்களுடனான கருத்தாடல் குறித்து நினைவு கூற வேண்டிய நம் காலத்தின் தேவை கருதி சிலவற்றை உரசிப்பார்க்கலாம். ஆரம்பத்தில் எரித்திரிய தேச விடுதலைக்கு அனுசரணையாகவிருந்த ரஷ்ய தேசம், எதியோப்பியாவில், தம் நலன் சார்பான ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமது தேசவிடுதலை ஆதரவுப் போக்கினை மாற்றியமைத்தது. எரித்திரியா உள்ளடங்கலான முழு எதியோப்பியாவே தனது நீண்டகாலப் பிராந்திய நலனுக்கு அமைவாக இருக்குமென்கிற நோக்கோடு ரஷ்யா செயற்பட்டதன் பின்னணியிலேயே, எதியோப்பியாவிற்கான இராணுவ ரீதியிலான முழுமையான ஆதரவு அமைந்ததெனலாம். எரித்திரிய விடுதலைப் போரினைத் து}ண்டிவிடுவதன் ஊடாக எதியோப்பிய அரசினை தமது பிடிக்குள் கொண்டுவர எத்தனித்த ரஷ்ய தந்திரோபாயத்தினை தமிழீழ விடுதலைப் போரில் இந்தியாவின் அணுகுமுறையோடும் ஒப்பிடலாம். பல இயக்கங்கள் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்தாலும், விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க இந்தியாவால் முடியவில்லை. புலிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேசிய நலனுக்காக, ஈழ விடுதலைப் போரை அவர்கள் நடத்தவில்லை. இதேபோன்று, முன்பு ஆதரித்த சக்திகள் எதிர்மாறான நிலைப்பாட்டினை எடுக்கும்போது, எரித்திரிய போராளிகள் தமது போராட்ட முனைப்பினை தளர விடவில்லை. அங்கும் கெரில்லாப் போராட்ட வழிமுறைகளினு}டு பிரதேசங்களை மீட்பதும், இழப்பதுவுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருந்தன. தலைநகர் அஸ்மாராவிலுள்ள விமானப் படைத்தளங்களை எரித்திரிய விடுதலை அமைப்பினர் தாக்கி அழித்தனர். இந்நிகழ்வானது கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலை எமக்கு நினைவுபடுத்துகின்றது. 91 இல் நடந்த கடுஞ் சமரில் அஸ்மாராவில் நிலைகொண்டிருந்த ஒரு இலட்சம் படையினரும் கனரக வாகனங்களும், ஆட்டிலெறிகளும் போர் விமானங்களும் போராளிகளின் முற்றுகைக்குள்ளானது. இப்போரியல் நிகழ்வானது யாழ். மாவட்டத்திலும், திருமலை மாவட்டத்திலும் மறுபடியும் உயிர் பெறக்கூடிய நிகழ்வாக அமைய வாய்ப்பு உள்ளது. யாழ். மாவட்டமானது கடல், தரை வழி முற்றுகைக்கு ஆட்படும்போது, 45 ஆயிரம் இராணுவம், பலாலி விமானத்தளமும், காரைநகர் கடற்படைத்தளமும் இவ்வாறான அஸ்மாரா நிலைக்குத் தள்ளப்படலாம். எரித்திரிய தேச விடுதலைப் போரில் வல்லரசின் ஆதரவும், அழித்தொழிப்பும் இருந்தது. அமெரிக்க ஆதரவு சக்திகளின் 'காலநீட்சி" பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இறுதியில் உறுதி தளராத போராளிகளின் முன் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் தனிமைப்படுத்தல்களும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 'சொந்த படை பலத்திலும், மக்கள் சக்தியிலும் தளராத நம்பிக்கையுடன் இறுதிவரை உறுதியாக இருப்பதுவே போராட்ட இலக்கை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லுமென்பதே அந்த எரித்திரிய போராளிகள் கூறிய கருத்து. பதினாறு ஆண்டுகளின் பின்னரும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் பின்புல நிகழ்வுகள் எம்மண்ணில் நடந்தேறி வருவதனை கடந்தகால, நிகழ்காலச் சம்பவங்களினு}டு பார்க்கலாம். தற்போது இந்த தேசிய விடுதலைப் போராட்டம் பாரிய தரநிலை மாற்றத்தினை வேண்டி நிற்கிறது. இவ்வளவு காலமும் தமிழ்ச் சமுதாயத்தினால் உள்வாங்கப்பட்ட சகல புறநிலைச் அழுத்தங்களும் புதியதொரு பாய்ச்சலிற்கான அகம் சார்ந்த தர நிலை மாற்றத்தினை வெளித்தள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. சுருங்கிக் கூறினால் தமிழ் மக்களின் வாழ்வாதார உணர்வுத் தளத்தில் வெடிப்பு நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்நிலை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திகள் அக்கறை கொள்ள வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்ளவில்லையென்று அங்கலாய்ப்பதை ஒருபுறம் ஒதுக்கிவைக்க வேண்டும். இவர்களைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள் பற்றி அரசு மீது கண்டனங்களைத் தொடுத்தால், அவ்வாறான கண்டனங்கள் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அரசியல் ரீதியாகப் பலமடையச் செய்யுமென்கிற ஒரு காரணத்திற்காகவே அல்லைப்பிட்டி, வங்காலைக் குரூரங்களை அவை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்திற்கு கொடுத்த பிரசார முக்கியத்துவத்தினை வங்காலைப் படுகொலைக்கு வழங்க சர்வதேசம் விரும்பாது இருப்பினும் தொடர்ச்சியாக இரு நாட்கள் நடந்த வன்னி, மட்டக்களப்பு பிரதேசங்கள் மீதான அரச விமானத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை, தமிழ்ச்செல்வனின் இறுதி எச்சரிக்கையால் ஏற்பட்ட பயப்பீதியே அவர்களுக்குக் கொடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கூறியதுபோல் அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்குமான அதிர்ச்சி வைத்தியத்தினை புலிகளின் காட்டமான அறிக்கைகளே செய்கின்றன. இருநாள் விமானக் குண்டு வீச்சின்போது, தாம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர். இப்படியானதொரு தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தால், பதிலடி மிக மோசமாக இருக்குமெனப் புலிகள் விடுத்த எச்சரிக்கையானது அரசிற்கு கொடுக்கப்பட்ட இன்னுமொரு அதிர்ச்சி வைத்தியம். மோசமான பதிலடியாக, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பாவிக்கப்படலாமென்கிற அச்சம் காரணமாகவே அரசு தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டதாக ஒரு சாராரும், புலிகளின் விமான எதிர்ப்பு நிலைகளை அறிந்து கொள்வதற்கான பரீட்சார்த்த தாக்குதல் இதுவென இன்னொரு சாராரும் கருதுவதாகத் தெரிகிறது. புலிகள் குறிப்பிட்ட மோசமான பின் விளைவுகளானது, இன்னுமொரு கட்டுநாயக்கா பாணியிலான முற்றுகைத் தாக்குதலாகவும் அமையலாம். தடைகள் அதிகரிக்கும் போதுதான் பின் விளைவுகளும் பெருக்கமடைகின்றன. மேற்குலகால் விதிக்கப்பட்ட இறுதித்தடையும் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து கேள்விப் பொறிக்குள் புலிகளைச் சிக்க வைக்கும் முயற்சியும் தோற்றுப் போகும். நோர்வேக்கு சாதகமான பதிலையே புலிகள் தெரிவிப்பார்கள். இரு சாராரிடமிருந்தும், பதில் கிடைத்தவுடன், மேலும் பல கேள்விகளையும், விளக்கவுரைகளையும் நோர்வே முன்வைக்கலாம். தொடர்பாடல்களின் நீட்சி கருதியும், தமது இருப்பிற்கான தேவை கருதியும் ஏதோவொரு வகையில் பேச்சுவார்த்தையை நோக்கி நோர்வே காய்களை நகர்த்தும். நோர்வேக்கு உடன்பாடான பதிலை அளிப்பதன் மூலம், மேலதிக அழுத்தங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். அதேவேளை யுத்த நிறுத்த மீறல்கள் பற்றியும் ஒட்டுப்படையின் செயற்பாடுகளை முடக்குவது பற்றியும் நோர்வே மீது அழுத்தங்களை புலிகள் சுமத்தலாம். ஆனால், நோர்வே அனுசரணையானது தொடக்கப் புள்ளியிலேயே திரும்பவும் வந்து நிற்கும், தம்மால் முடியாத காரியமென்று தெரிந்திருந்தும் மறுபடியும் முயற்சிக்கும் வேதாள நோர்வேயின் தளரா முயற்சியின் பின்னால் கால நீட்சி என்கிற தந்திரம் மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறது. இவை யாவும் சரிவராத நிலையில் இறுதிப்போர் ஆரம்பித்தால் இது தொடர்பாக மேற்குலக நாடுகள், இந்தியா போன்றவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தே பலர் அக்கறை கொண்டுள்ளார்கள். எளியோரைப் பிரித்தாளும், வலியோரின் தந்திரங்கள் பற்றியும், இந்தியாவானது புலிகளின் பரம எதிரி என்கிற தோற்றப்பாட்டை வலிந்து கூறியும், முழு உலகமுமே தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பப்பட்டு விட்டதான ஒரு மாயச் சூழலை உருவாக்கும் முயற்சியினையும் சில அறிவுஜீவிகள் தாம் விரும்பியவாறு கூறுகிறார்கள். பேச்சுவார்த்தைத் தளத்தில் தளம்பல் நிலை ஏற்படும்போது, அதிலீடுபடும் பிராந்திய நலன்சார் சக்திகள் தேடும் மாற்று வழிமுறைகளில், ஐ.நா. சபையின் படைப்பிரசன்னமும் ஒரு உத்தியாகப் பல நாடுகளில் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐ.நா. சபையின் அமைதிப்படைகள் உள்நுழைவதற்கான ஏது நிலையை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடும் சர்வதேச சமூகம் ஏற்படுத்துமா அல்லது அதற்கான புறச்சுூழலை தாம் விரும்பாமலே அரசு உருவாக்குமாவென்பதை யுத்தத்தின் தீவிரத் தன்மையே தீர்மானிக்கும். அரசு புலிகள் மீது மேலதிக அழுத்தங்களைத் திணிக்க, ஐ.நா. அமைதிப்படையென்ற இறுதி அஸ்திரத்தினை மேற்குலகம் பிரயோகிக்கலாம். தடைகளும், வெருட்டல்களும், தனிமைப்படுத்தல்களும் செயலிழந்த நிலையில் அவர்களுக்கு இருக்கும். ஒரே ஆயுதம் இதுவாகத்தான் இருக்க முடியும். யுத்த நிறுத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோரை தமிழ்மக்கள் கோமாளிகளாகக் கருதும் நிலையில், மறுபடியும், நோர்வேத் து}துவர் வன்னி வருகிறார், வரும்போது, பதுங்கு குழிகளை இலகுவாக வெட்டக்கூடிய நவீன இயந்திரங்களை கையோடு கொண்டு வந்தால், தமிழ் மக்கள் சற்று ஆறுதலடைவர். இவர்கள் கொண்டு வந்தது சாந்தியுமல்ல, சமாதானமுமல்ல. இருப்பினும் உறுதியான ஏகப் பிரதிநிதித்துவ தமிழ் தலைமையின் கீழ் அணிதிரள்வதே தமிழ் பேசும் மக்களிற்கான ஒரே வழி. எம்முடன் பேச வருபவர்களும், யுத்தம் புரிபவர்களும், சமாதானக் கானல் நீரை, காட்டாறு வெள்ளமாகக் காட்ட முயற்சிப்பதைக் கண்டு ஏமாறாமல் இருந்தாலே போதும். நன்றி: வீரகேசரி வார வெளியீடு (25.06.06)

இலங்கையில் நீதிபதிக்கே, நீதி இல்லை.

யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற இராணுவத்தினர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகே அதனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளனர். எனினும், பொதுமக்களின் முயற்சியால், ஏற்படவிருந்த பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டதுடன், நீதிவானின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும், கார்ச் சாரதியும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இராணுவத்தினரின் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கை காரணமாக திருநெல்வேலிப் பகுதியெங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. நீதிவானின் பிள்ளையை தனியார் கல்வி நிறுவனமொன்றிலிருந்து ஏற்றி வருவதற்காகச் சென்றபோதே காலை 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீதிவானின் கார் அவரது பாதுகாப்புப் பொலிஸார் ஒருவருடன் பலாலி வீதியூடாக கந்தர்மடம் சந்தியிலிருந்து பரமேஸ்வரா சந்தியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவ்வேளை, ஆட்டோ ஒன்றில் கனரக ஆயு தங்களுடன், சுடுவதற்குத் தயாரான நிலையில் இராணுவத்தினர் குறித்த காரை துரத்தி வந்துள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சுதாகரித்துக் கொண்டு அது நீதிவானின் கார் எனவும், சுட வேண்டாம் என்றும் கூக்குரலிட்டுள்ளனர். இந்த நிலையில், நீதிவானின் காரை நோக்கி இராணுவத்தினர் தாக்குதல் நடத்தப்போவதை அறிந்து கொண்ட வேறு வாகன சாரதி ஒருவர் வேகமாக நீதிவானின் காரை முந்திச் சென்று இராணுவத்தினர் சுடுவதற்காக துரத்தி வருகின்றனர் என நீதிவானின் கார்ச் சாரதியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிவானின் கார் அந்த இடத்திலேயே சடுதியாக நிறுத்தப்பட்டது. பின்னர் காரைத் துரத்தி வந்த இராணுவத்தினர் காரில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரன் அப்பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினரிடம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளார். பொறுப்பற்ற வகையில் அதற்குப் பதிலளித்த அந்த முகாம் பொறுப்பதிகாரி, அவசர காலச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு அனைத்து வாகனங்களையும் சோதனையிட அதிகாரமுண்டு. நாங்கள் நினைத்திருந்தால் அனைவரையும் சுட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கோரியிருக்க முடியும்" என எதேச்சதிகாரமாக பதிலளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக நீதிவான் இராணுவக் கட்டளை அதிகாரியான கேணல் பெரேராவிடமும், யாழ். பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, முன்னரும் ஒரு தடவை நீதிவானின் வாகனத்தை றக்கா வீதியில் வைத்து மறித்த இராணுவத்தினர் வாகனத்தை கடுமையாகச் சோதனையிட்டதுடன் சாரதியையும் அச்சுறுத்தியுள்ளனர். நீதிவானின் கணவரும் இதேபோன்று பல்வேறு தடவை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. நீதிபதி கடும் விசனம் இதேநேரம், சட்டம் ஒழுங்கு தெரியாதவர்களின் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்தால் அது சமூகத்திற்கு பாரிய சவாலாகவே அமையும் என யாழ். மேலதிக நீதிவான் ஷ்ரீநிதி நந்தசேகரன் விசனத்துடன் தெரிவித்தார். இராணுவத்தினர் பரமேஸ்வரா சந்தியில் நேற்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக கடும் கண்டனமும், அதிருப்தியும் வெளியிட்டுள்ள அவர், இராணுவத்தினரின் பொறுப்பற்ற செயற்பாடே இதுவெனவும் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொறுப்புள்ள வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஆனால், நேற்றைய சம்பவத்தின்போது அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர். மேலும், அவசரகாலச் சட்ட விதிகளின்படி சந்தேகம் என்றால் எவரையும் சுடுவோம் என இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால், அவசரகால சட்ட விதிகளின் பிரகாரம் அவ்வாறு எவரும் எதேச்சதிகாரமாக செயற்பட முடியாது. அதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இத்தகைய அடிப்படைச் சட்டங்கள் கூடத் தெரியாதவர்கள் எவ்வாறு சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். இத்தகைய அச்சுறுத்தல் இனிமேல் எவருக்கும் ஏற்படக்கூடாது எனக் கருதியே உடனடியாக இவ்விடயத்தை இராணுவ, பொலிஸ் உயர் பீடங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். நன்றி>தினக்குரல்.

10 July, 2006

ஹக்ரூப் ஹொக்லண்ட் மீண்டும் தலைவராக.

முன்னாள் தலைவரான நோர்வேயை சேர்ந்த ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்து நோர்வே ஆலோசித்து வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டின் செய்தி: யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளை செப்ரெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற்ற வேண்டும் என விடுதலைப் புலிகள் கோரியுள்ளதையடுத்து கண்காணிப்புக்குழுவில் எத்தகைய மாற்றங்களை செய்வது என்பது தொடர்பில் நோர்வே தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என்று இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் பேச்சாளர் எரிக் நேன்ஸ்பேர்க் தெரிவித்தார். கண்காணிப்புக்குழுவில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து குழுவில் அங்கம் வகிக்கும் நோர்டிக் நாடுகளுடன் நோர்வே கலந்துரையாடி வருகின்றது. கண்காணிப்புக்குழுவின் தலைவராக சுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்ப் ஹென்றிக்சன் பதவி வகிப்பதனால் அவரை மாற்றிவிட்டு குழுவின் முன்னாள் தலைவரான நோர்வேயை சேர்ந்த ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கண்காணிப்புக்குழுவின் தற்போதைய நிலை குறித்தும் புலிகளின் கால அவகாசம் தொடர்பாகவும் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து பேச்சாளர் மேலும் கூறியதாவது, கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பின்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என விடுதலைப் புலிகள் காலக்கெடு விதித்துள்ளனர். இதனால் குழுவில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் குறித்து நாம் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். கண்காணிப்புக்குழுவின் தற்போதைய தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் மற்றும் பிரதித்தலைவர் டொமி லக்ன் மயர் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய நாடான சுவீடனை சேர்ந்தவர்களாகவுள்ளனர். ஆகவே, ஐரோப்பிய ஒன்றிய க்காணிப்பாளர்களை வெளியேற்ற நோர்வேயும் இதர நோர்டிக் நாடுகளும் தீர்மானிக்குமானால் குழுத்தலைவர் ஹென்றிக்சனையும் மாற்ற வேண்டி ஏற்படும். அப்படியொரு நிலை உருவானால் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவராக பணியாற்றிய ஹக்ரூப் ஹொக்லண்டை மீண்டும் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகின்றது. நோர்வே நாட்டவரான இவருக்கு கண்காணிப்புக்குழுத் தலைவராக பணிபுரிந்த அனுபவம் உள்ளது. எனவே இவரை நியமிப்பது சிறந்தது என நோர்வே கருதலாம். இவை தொடர்பாக ஆலோசனைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றது. உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. செப்ரெம்பர் முதலாம் திகதி வரை எமக்கு கால அவகாசம் உள்ளமையால் மாற்றம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். ஹென்றிக்சன் வன்னி செல்வார் இதேவேளை கண்காணிப்புக்குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் இவ்வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 29 ஆம் திகதி நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெற்ற கண்காணிப்புக்குழு தொடர்பான நோர்டிக் நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பிய ஹென்றிக்சன் இவ்வாரம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்திப்பார். இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது என்று கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் ஓமர்சன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். இது இவ்வாறிருக்க தடைப்பட்டுள்ள சமாதான முயற்சி குறித்தும் கண்காணிப்புக்குழு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்தும் ஆராய்வதற்காக நோர்வேயின் சமாதானத் தூதுவர் ஜோன் ஹான்சன் பௌயர் இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார். நோர்வேயில் தங்கியுள்ள இலங்கைக்கான தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கரும் விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். நன்றி>புதினம்

09 July, 2006

போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா?:

போர் நிறுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா? என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினர் செப்ரெம்பர் 1 ஆம் நாளுக்கு முன்னதாக வெளியேற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு மூல காரணம் எதுவும் இல்லை. அவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள விரும்புகின்றனரா? விடுதலைப் புலிகளின் நிபந்தனையை இப்படியாகத்தான் அர்த்தம் கொள்ள வேண்டியதிருக்கிறது. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களது வாதம் காரணமற்றது. இது விடயத்தில் ஒருதரப்பும் மட்டும் முடிவெடுக்க முடியாது. இது இருதரப்பு ஒப்பந்தம். நீங்கள் இதனை கடைப்பிடிக்கலாம் அல்லது விலகலாம். விடுதலைப் புலிகளின் நிபந்தனை குறித்து எதிர்வரும் நாட்களில் மேலும் சில விளக்கங்கள் கோரப்படும். எதிர்கால செயற்திட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்குமே பதில் அளித்துவிட முடியாது. செப்ரம்பெர் 1 ஆம் நாளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை அளிக்காவிட்டால் அரசாங்கம் என்ன செய்யுமோ செய்வார்கள். செப்ரெம்பர் 1 க்குப் பின்னர் விடுதலைப் புலிகள் சினைப்பரை அனுப்புவார்கள் என்று நாம் அச்சம் கொள்ளவில்லை. பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. இருப்பினும் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் விவாதித்து வருகிறோம் என்றார் ஹென்றிக்சன். இதனிடையே போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைமை அதிகாரி டோமி லகென்மியரின் பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நிபந்தனையின் படி ஹென்றிக்சன் விலகிச் சென்றால் புதிதாக நியமிக்கப்பட உள்ள தலைமை அதிகாரியே கண்காணிப்புக் குழுவின் பதில் தலைமை அதிகாரியாக செயற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. நன்றீ>புதினம்.

08 July, 2006

"அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா

இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில், சிறிலங்கா அரசு, இந்தியப் படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும், இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம், சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கிப் பிடியால் அடிவாங்கியதில் இருந்து, 1990 ஆம் ஆண்டு வரையிலான விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் 1,165 இந்தியப் படையினர் கொல்லப்பட்டது மட்டுமன்றி 3,011 படையினர் அங்கவீனமுற்றிருந்தனர். இவை அனைத்திற்கும் மேலாக, பிரேமதாசா தலைமையிலான சிறிலங்கா அரசு, இந்தியப் படையினரை இலங்கை மண்ணில் இருந்து வெளியேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்த கசப்பான அனுபவங்களை இந்தியா மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தயாரில்லை. அதே நேரம், இலங்கையின் இனப்பிரச்சனைக்கு, இந்தியாவின் மாநில மற்றும் யூனியன் அலகுகளால் இந்தியாவின் அரசியல் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காவின் படைகளுக்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில், இலங்கையின் 23 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதாரம் முற்றாக சீரழியும் நிலையே ஏற்படும். அண்மைக் காலத்தில், இந்திய முதலீட்டாளார்கள் பெருமளவில் இலங்கையில் முதலீடு செய்திருப்பதனால், இன்னொரு யுத்தத்தினை இந்தியா விரும்பவில்லை என்றும் தெரியவருகின்றது. மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்காமல் இருக்க வேண்டுமெனில், சிறிலங்கா அரசியல்வாதிகள் ஒரு நாட்டின் பொறுப்பான தலைவர்களாக ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மீண்டும் ஒரு போரினை தடுக்க, நோர்வே, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் ஐப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து செயலாற்றவே இந்தியா விரும்புகின்றது. இந்தத் தகவலையே, இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் மூலம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சிறலலங்கா அரசிற்கு அண்மையில் தெரிவித்திருந்தார் எனவும் தெரியவருகின்றது. நன்றி>புதினம்.

07 July, 2006

மாணவர்களை கைது செய்தால் தாக்குதல் நடத்தப்படும்.

மாணவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தால் பாடசாலை சமூகத்தினரைத் திரட்டி படையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவர் ஒன்றியம். கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு மேற்படி ஒன்றியம் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பேச்சு என்றும் போலி நாடகமாடிய சிங்கள அரசு எம்மையும் எமது இனத்தையும் முழுமையாக அழிப்பதற்கு ஒட்டுக்குழு என் னும் துரோகிகளான ஈ.பி.டி.பி.யின் உதவியுடன் கங்கணம் கட்டி நிற்கிறது. சிங்கள அரசு ஜெனீவா பேச்சுக்குப் பின்னர் அல் லைப்பிட்டியில் 13 அப்பாவிப் பொதுமக் களையும் புத்தூரில் 5 இளைஞர்களையும் நெல்லியடியில் 7 அப்பாவித் தமிழ் இளை ஞர்களையும் வங்காலையில் இரு சிறுவர் கள் உட்பட ஒரு குடும்பத்தையும் கொடூர மாகக் குத்திக் கொலை செய்துள்ளது. இவை குறித்து மௌனம் சாதித்த ஜனாதிபதி கெப்பிட்டிக்கொல்லாவ கிளைமோரின் போது மட்டும் உணர்ச்சிமிக்கவராகத் தன்னைக் காட்டிக்கொண்டார். இந்நிலையில் எமது மக்கள், எமது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொலைகள், கற்பழிப்புகள், கைது செய்தல் என்பன உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஒரு சில தினங் களில் பாடசாலை மாணவர்கள் அனைத்து பாடசாலை மாணவர்களையும் ஒன்றி ணைத்து எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் ஒன்றிணைவர். அதன் பின்னர் சிங் கள வெறியர்கள் மீது தாக்குதல் நடத்துவோம். புனிதமான நாளான கரும்புலிகள் தினத் தன்று சிங்கள வெறியர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதுடன் எமது மக்கள் எமது மாணவர்கள் முழுமையாக போராட்டத்தில் இணைந்து சுதந்திரமான தமிழீழம் உருவாக வழிவகுப்போம். என்று அதில் உள்ளது. நன்றி>பதிவு.

06 July, 2006

புலம்பெயர் படைப்பாளிகளுக்கு தாயகத்தில் இருந்து அழைப்பு.

தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது. நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்ட இனங்கள் எல்லாமே இறுதியில் வெற்றி பெற்றிருப்பது எமக்கு ஆறுதலானது. எமக்கும் அந்த நிலைமையே ஏற்படும். நாங்கள் போர்ச் சூழலுக்குள் திரும்பவும் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கலாம். அதை எதிர்கொள்வதற்கு எங்களுடைய படைப்பாளிகள் பங்களிப்பைக் கேட்டு நிகழ்வு ஒன்றைச் செய்திருந்தோம். 1990 முதல் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை எங்களுடைய படைப்பாளிகள்தான் தர்மம்சார் எமது போராட்டத்தின் பக்கத்துணையாக இருந்து மக்களை இணைத்தவர்கள். உலகுக்குச் சொன்னவர்கள். இந்த அமைதிக்காலத்தில் நாங்கள் ஏன் கரைய வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்ப எமது பயணத்தை மீளத் தொடங்கியுள்ளோம். மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். எமது போராட்டம் வேறு ஒரு வடிவம் எடுத்தது. இராஜதந்திர நகர்வுகள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் ஈழத் தமிழனுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லையாம். அழுகைதான் பரிசாம். அடங்கிப் போவதுதான் விதி என்று சிறிலங்காத் தரப்பு எச்சரிக்கை வைத்திருக்கிறது. நாங்கள் அடங்கிப் போக முடியாது. இதுவரை போராட்டத்துக்கான பணிகளைச் செய்த எமது படைப்பாளிகள் இப்போது போருக்கான பணிகளைச் செய்கிறோம். புலத்தில் இருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் இரட்டைச் சுமை. 1995 ஆம் ஆண்டு காலம் முதல் 2000 ஆம் ஆண்டு காலம் வரை வன்னியிலே நாங்கள் வெற்றிகளைச் சந்தித்த போதும் அது சிறையாக இருந்தோம். எமது அழுகையின் குரல் பெரிதாக வெளிவரவில்லை. எமது கண்ணீர் பெரிதாக வெளியில் தெரியவில்லை. இன்று உலகம் முழுமைக்கும் நாம் அறிந்தவரையில் 40 ஊடகங்கள் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர பல்லாயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர். நாளை திரும்பவும் வன்னி என்ற வட்டத்துக்குள் அடக்கி- அடக்க முடியாது- ஒடுக்கி- ஒடுக்க முடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை நடத்தும் போது நாங்கள் எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க முடியாது. அந்தச் சுமையை உலகம் முழுமைக்கும் பரவிய உறவுகள் கூற வேண்டும். எமது அழுகையையும் கண்ணீரையும் நீங்கள் கூற வேண்டும். எங்களுடைய அழுகையை தாயகத்தின் மொழியில் உங்களால் சொல்ல முடியாது. அது பொய்யாக இருக்கும். புலம்பெயர் தமிழராக இருப்பவர் ஆர்ட்டிலறி அடிப்பது பற்றியோ செல் அடிப்பது பற்றியோ எழுத முடியாது. எங்களுடைய குரலை உங்களுடைய குரலினூடாக உலகத்துக்குச் சொல்லுங்கள். எங்களுக்குத் திருப்பிச் சொல்லாதீர்கள். நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதையே எங்களுக்குத் திருப்பிச் சொல்வதில் அர்த்தமில்லை. உலகுக்கு உங்கள் மொழியில் சொல்லுங்கள். வேற்று மொழிகளில் சொல்லுங்கள். அதை நாங்கள் செய்வது மிகக்குறைவு. பிரெஞ்ச், டொச் மொழியில் எழுதக் கூடிய தமிழர்கள் இன்று வந்துவிட்டார்கள். தமிழில் எழுதியாவது அதை வேற்று மொழிக்குக் கொண்டு செல்லுங்கள். ஈழத் தமிழினம் படுகிற துயரமும் கண்ணீரும் வதையும் வலியும் உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அது உலகுக்குத் தெரிந்திருந்தால் நமக்கு இடைஞ்சல் இல்லையே... ஆண்டுக்கு இருமுறை கூட்டம் கூடுவது அல்ல புலம்பெயர் தமிழரின் பணி. அதற்கு மேலாக தினசரி அதற்காக இயங்க வேண்டும். படைப்பாளிகள் இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும். தாயகத்து உறவுகளின் வலியை படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் மூலம் உலகத்துக்குச் சொல்ல வேண்டும். பாலஸ்தீன மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. இலத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் துயரமும் கண்ணீரும் அப்படித்தான் வெளியே வந்தது. வியட்நாமிய மக்களின் கண்ணீரும் துயரமும் அப்படித்தான் வந்தது. அதுபோல ஈழத் தமிழரின் கண்ணீரையும் துயரையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். அரசியல் ரீதியாக எப்படி ஒரு இராஜதந்திர நகர்வு மேற்கொள்ளப்படுகிறதோ அப்படி படைப்பு ரீதியாகவும் ஒரு நடவடிக்கை இயங்க வேண்டும். புலம்பெயர் தேசத்தில் கலைஞர்களும் படைப்பாளிகளும் அதிகம். ஒரு தாயின் கடமையைப் போல் செய்ய வேண்டும். இதை செவ்வனே செய்வதே புலம்பெயர் படைப்பாளிகள் ஆக வேண்டும். நாங்கள் போராடுவோம் என்பது உண்மை. இறுதி ஆள் இருக்கும் வரை போரிடுவோம். எந்தக் கொம்பன் வந்தாலும் நாம் போரிடுவோம். அது வேறு பிரச்சனை. ஆனால் அதை நமது நியாயப்பாடுகளை உலகத்துக்குச் சொல்வது யார்? புலம்பெயர் தமிழர்களுக்குள் இருக்கிற படைப்பாளிகளும் கலைஞர்களும்தான். அவர்கள் அதைச் செய்ய வேண்டும். சும்மா வெறுமனே அடித்தான்- கொத்தினான் என்று இல்லாமல் படைப்பாளியின் நெஞ்சுக்குள் ஆழப் பதிந்து இறங்குவதுபோல் சொல்ல வேண்டும். படைப்பின் மூலமே போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன. மார்க்ஸிம் கார்க்கிய, மாயவோஸ்கி, பாப்லோ நெரூடா என்றாலும் பாரதி என்றாலும் அவர்கள் போராட்டத்துக்கு பணி செய்தனர். ஆகவே எமது புலம்பெயர் உறவுகளே! அவர்களுக்குள் பூத்துக் கிடக்கும் படைப்பாளிகளே! இந்தப் பணிகளை அவர்கள் தங்கள் கைகளில் எடுக்கட்டும்! ஏனெனில் நாம் திரும்பவும் போரிடுவோம். திரும்பவும் அடைபடுவோம். எங்கள் அவலம் உங்களின் கண்களால் தெரியவேண்டும். உங்களுக்கு இரட்டை வேலை. நீங்களே வதை பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தாயகமும் வதைபட்டுக் கொண்டிருக்கிறது. உங்களது துன்பத்தை எமக்குத் தெரியப்படுத்துங்கள். எமது துன்பத்தை உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். என் பிரியத்துக்குரிய எமது புலம் பெயர் தமிழ் உறவுகளுக்குள்ளே பூத்துக் கிடக்கிற இளம் படைப்பாளிகளே! உங்களுக்கு இரட்டை வேலை இருக்கிறது. எங்களுக்கு ஒற்றைச் சுமை.. இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உங்களது பங்களிப்பு பெரிது என்பதை புரிந்து கொண்டு செயற்படுங்கள். இது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் குரல் அல்ல. உங்களுடைய தாயகத்தின் குரல். புலம்பெயர் வாழ் தமிழர்கள் இன்னமும் இந்தப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாதிருந்தால் அவர்களுக்கும் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. நாம் அவர்களைப் பிழையாகக் கருதவில்லை. புலம்பெயர் தமிழர்களுக்கு விடுதலையின் தாற்பரியத்தையும் எமது அழுகையையும் கண்ணீரையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமெனில் அவர்களுக்கும் சொல்லிக் காட்ட வேண்டும். எங்களுடைய புலம்பெயர் தமிழர்களில் கொஞ்சம் பேர் இன்னும் உறக்கத்தில்தான் இருப்பார்களாக இருந்தால் புலம்பெயர் படைப்பாளிகளுக்குப் பெரிய பணி இருக்கிறது. இதனுடன் சேர்த்து அவர்களுக்கு மூன்று பணியாகிறது. புலம்பெயர் படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் ஊடகத்தாருக்கும் நித்திரையில்லா பணி தங்களது காலடியிலே விழுந்து கிடக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த விடுதலைப் போராட்டத்தை ஏற்கவில்லை என்று கூறுகிற படைப்பாளிகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. விடுதலைப் புலிகள் என்பது வெறும் சொல் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் சொல்தான் விடுதலைப் புலிகள். அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கட்டும். நானில்லாமல் விடுதலைப் போராட்டமா? வெற்றி பெறுமா? என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள்- பழைய போராளிகள் என்ற போர்வையில். அவர்கள் இருக்கட்டும். நடுநிலைமைக்காரர்கள்தான் இப்போது பிரச்சனை. அது என்ன நடுநிலைமை? நீதிக்கும் அநீதிக்கும் இடையே "நடு" என்ற ஒரு வார்த்தை உண்டா? சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் இடையே "நடு" என்ற ஒருவார்த்தை உண்டோ? அளவான சுத்தம்- அளவான அசுத்தம் என்று உள்ளதோ? அது போக்கிரித்தனம். இந்தப் போராட்டத்தை எதிர்க்கிறவர்கள் நேர்மையானவர்கள். நடுநிலைமை என்பதற்கு தமிழிலே வார்த்தைகளே இல்லை. தன்னுடைய இயங்கும் தன்மையை வைத்துக்கொண்டே நடுநிலைமையாளன் உருவாகிறான். எவன் தனியே எழுதிக் கொண்டும் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் மட்டும்தான் இருப்பேன் என்பவர்கள்தான் நடுநிலை பற்றி பேசுவார்கள். காலாவதியான பொருட்களை கையில் எடுத்து வைத்திருப்பார்கள். அவர்கள் புதிதாகச் செய்வதே காலாவதியான பொருட்களை வைத்திருப்பதுதான். அப்படியான படைப்பாளிகள் எங்கும் இருப்பார்கள். நடுநிலைமை என்பது தப்பித்துக் கொள்ளுதல். நடுநிலைமையை மீறி பட்டுப்படாமல் செல்லும் போக்கும் உண்டு. பின்பக்கம் பார்த்தால் கிளிபோலும் முன்பக்கம் பார்த்தால் காகம் போலும் இருக்கும். அப்படியான படைப்பாளிகளும் இருக்கிறார்கள். குளத்தோடு கோபித்துக் கொண்டு என்னமோ செய்யக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு. இந்த விடுதலைப் போராட்டத்தைப் பற்றியான விமர்சனங்கள் உண்டு. இந்த விடுதலைப் போராட்டம் சரிக்கும் பிழைக்கும் இடையேதான் ஓடுகிறது. ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் தாயகத்திலே உட்கார்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கவில்லை. பூப்பறிக்கவில்லை. உயிரோடு விளையாடுகின்ற- சாவோடு விளையாடுகின்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும். சரியும் பிழையும் இருக்கலாம். விகிதாசாரத்தில் எது அதிகம் என்று பார்க்க வேண்டும். எல்லோருக்கும் சரியானதான ஒரு போராட்டத்தை- எல்லோரும் கூடி ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றால் "விடுதலைப் புலிகள்" என்ற பெயரைக் கூட தலைவர் இன்னமும் வைத்திருக்க முடியாது. கதைத்துக் கொண்டே இருந்திருப்போம். இந்த விடுதலை என்பது வேண்டுமா இல்லையா? நாய்க்கும் மரத்துக்கும் இருக்கிற விடுதலை ஈழத் தமிழனுக்கும் வேண்டும் அல்லவா? அந்த விடுதலைப் போராட்டம் இப்போது நடக்கிறது அல்லவா? அதன் பக்கம் நீங்கள் நிற்க வேண்டும் இல்லையா? அந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தப் படைப்பாளிகள் தொடங்க வேண்டும். அதைவிடுத்து அவர்கள் அப்படியாம்- இவர்கள் இப்படியாம் என்ற மனோபாவம் இருக்க இயலாது. முழுமையான விடுதலைக்கான எல்லைகளைத் தொட்டு நிற்கும் தூரத்தில் நிற்கிறோம் நாம். உங்களது விமர்சனங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். விடுதலைப் போராட்டத்தின் பக்கத்தில் எரிகின்ற நெருப்புக்குப் பக்கத்தில் தயவு செய்து தண்ணீர் ஊற்றிவிடாதீர்கள். தீக்குளித்துக் கொண்டிருக்கிற தேசத்திலிருந்து நாம் இதைக் கேட்கிறோம். எமது விடுதலை நாம் நிச்சயம் பெறுவோம். ஆயிரம் தடைகள் வரட்டும். உலகில் ஆயிரம் தடைகள் வந்தபின்னர்தான் மக்கள் வென்றிருக்கிறார்கள். நாடுகள் வென்றிருக்கின்றன. இப்போது எங்களுக்கும் வந்திருக்கிறது. நாங்கள் வெல்லுவோம். தமிழ் மக்களின் சக்தியோடு நாங்கள் இணைந்து நிற்கிறோம். மாலை 5 மணிக்கு வந்து பாருங்கள். ஊரெங்கும் அணிவகுப்புகள். நீங்கள் வந்து பார்த்தீர்கள் எனில் மெய்சிலிர்த்துப் போவீர்கள். ஆகையால் இந்த எரிகின்ற நெருப்புக்கு நீர் ஊற்றிவிடாதீர். எவனொருவனுக்கு விடுதலை உணர்வு வந்து நெஞ்சுக்குள் சிறகு முளைத்து பறக்காமல் இருக்கிறானோ அவன் படைப்பாளியே இல்லை ஐயா! அவன் கலைஞனே அல்ல- அவனுக்கு முதுகுகளில் இறக்கை முளைக்கும் போதுதான் படைப்புத் தளத்தை செய்ய வெளிக்கிடுகிறான். எனவே முதுகில் இறக்கை முளைத்த எனது உறவுப் படைப்பாளிகளே! சிறகுகளை அகல விரியுங்கள்! விடுதலையின் வானத்தை நோக்கியதாக அது இருக்கட்டும்! எல்லோரும் சேர்ந்து வாருங்கள் வடம் பிடிப்போம்! இழுத்து வந்து சரியான இடத்தில் நிறுத்துவோம்! உங்களிடமிருந்து நம் தேசம் வேண்டுகிறது- உங்கள் படைப்புளம் இன்னும் இன்னும் விரிய வேண்டும் என்று தாயகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்றார் புதுவை இரத்தினதுரை. நன்றி>புதினம்.

ஒட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த இந்தியா அழுத்தம்.

கருணா குழு உட்பட ஒட்டுப் படைகள் இயங்குகின்றன என்றும், அவற்றின் தொல்லைகள் தாங்க முடியாமல் இருக்கின்றன என்றும் தமிழர் தரப்பில் பரவலாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. எனவே, அவை போன்ற ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை அடக்குவதன் மூலம் அரசியல் இணக்கப்பாட்டுக்கான புறச்சூழலை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கையை இந்தியா கோரியிருக்கின்றது என யாழ் உதயன் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. அதில் மேலும்தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் ஒன்றரை நாள் விஜயமாக கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண், இத் தகைய செய்தியை இந்தியத் தரப்பிடமிருந்து எடுத்து வந்து இலங்கை அரசுக்குத் தெரிவித் தார் எனக் கூறப்படுகின்றது. கடந்த திங்களன்று காலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை ஷியாம் சரண் சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த செய்தியை அப்போது ஷியாம் சரண் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவிடம் தெரி வித்தார். அந்தச் செய்தியிலேயே கருணா குழு உட்பட ஏனைய ஒட்டுக்குழுக்கள் மற்றும் துணைப்படைகள் போன்றவற்றின் நடவடிக்கைகளை அடக்கி, அமைதித் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்தக்கோரும் வலி யுறுத்தல் அடங்கியிருந்ததாகத் தெரியவந்தது. ""ஏற்கனவே, ஒரு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் போதும். இன்னொரு புலிகள் அமைப்பை விருத்தி செய்வதற்கு வழி செய்து உபத்திரவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்'' என்ற சாரப்பட அன்புரிமையுடன் கூடிய ஆலோசனை இந்தியத் தரப்பினால் இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தப்பட்டதாம். ""புலிகளை மரபு ரீதியான யுத்தத்தில் தோற்கடித்து விடலாம் என்ற தயாரிப்பில் இலங்கை அரசுத் தலைமை முனைப்பாக இருக்கலாம். ஆனால், மீண்டும் போர் வெடித்தால் மரபு ரீதியான யுத்தத்துக்கு அப்பாற்பட்ட வழிகளையும் புலிகள் நாடலாம். அதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அதன் மூலம் இலங்கை அரசைப் புலிகள் கணிசமான அளவில் முடக்கவும் வாய்ப்புண்டு'' என்ற எச்சரிக்கையும் இந்தியத் தரப்பால் தெரிவிக்கப்பட்டதாம். ஈழத் தமிழர் விவகாரத்தில் தற்போது தமி ழகத்திலும், புதுடில்லியிலும், ஏனைய இந்தியப் பிரதேசங்களிலும் நிலவும் உணர்வு நிலைதான் எப்போதும் தொடரும் என எதிர் பார்க்க முடியாது. இலங்கையில் யுத்தம் வெடித்து, தமிழர்கள் பாதிக்கப்படும்போது இந்தியாவில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உணர்வு நிலை தலைகீழாக மாறி, எழுச்சி கொள்ளும் ஆபத்தும் உண்டு என்ற விடய மும், அத்தகைய நிலைமையின் விபரீதமும் கூட இலங்கை அரசுத் தலைமைக்குத் தற்போது விளக்கமாக இந்தியத் தரப்பால் எடுத்துக் கூறப் பட்டதாகத் தெரிகின்றது. இந்தியா மட்டுமல்ல, சர்வதேச உலகமுமே ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்கின்ற நிலைமை தான் இப்போதுள்ளது. எனவே, தனது திட்டத்தை வெளிப்படுத்தாமல் இலங்கை அரசு இனிமேலும் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது. சமஷ்டி அடிப்படையிலான அல்லது அதை ஒத்த ஒரு தீர்வு யோசனையை அரசுத் தரப்பு முன்னெடுப்பது இலங்கை அரசுக்கு சர்வதேச ஆதரவை அதிகரிக்கச் செய்யும் என்றும் இந்தியத் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டதாம். யுத்தம் தீர்வல்ல. அரசியல் இணக்கப் பாட்டுக்கு முயலுங்கள். நோர்வேயின் அனு சரணைப் பணியை முழு அளவில் பயன் படுத்த எத்தனியுங்கள். நோர்வேயை விட அனுசரணைப் பணிக்கு வேறு பொருத்தமான மாற்றுத் தரப்பு இல்லை. இப்படி இந்தியா மேலும் வலியுறுத்தியதாகவும் தெரிகின்றது. நன்றி<பதிவு.

ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு.

நடவாத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து எழுதி பணம்சம்பாதிப்பது ஒருவகை,அதில் இது எந்தவகை?
  • ஊடறு இணையத்தளம் தமிழ்பெண்களுக்கு செய்த ஊறு.
  • இப்போது என்ன செய்யப்போகிறது இந்த இணையத்தளம்? -ஈழபாரதி- சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய பெண் "கர்ப்பிணி" அல்ல: சந்திரா பெர்னாண்டோ சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் பெண் கர்ப்பிணி அல்ல என்று காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் சந்திரா பெர்னாண்டோ கூறியதாவது: கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதலுக்கான திட்டம் ரம்புக்கனை பகுதியில் திட்டமிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அனுராதரபும் குருணாகல் வீதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மஞ்சுளாதேவி என தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ரம்புக்கனை பகுதிக்கு அப்பெண் வந்துள்ளார். தற்கொலைப் பெண் ரம்புக்கனை, வெலிவேரிய பகுதிகளில் தங்கவைக்க வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்ய முச்சக்கர வாகனம் ஒன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு உதவியதாக ரம்புக்கனவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் ஒரு ஆண் ஆகிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தற்கொலைப் பெண் மஞ்சுளாதேவி (வயது 32) என்று தெரியவந்தது. தற்கொலைப் பெண்ணின் உடற்பாகங்களைச் சோதனைக்குட்படுத்தியபோது அவர் கர்ப்பிணி இல்லை என்பது தெரியவந்துள்ளது என்றார் சந்திரா பெர்னாண்டோ. நன்றி>புதினம்.

    புலிகள்மீது தாக்குதலைநடத்த சரியான நேரம் இது-சோமவன்சா.

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவத் தாக்குதலை நடத்த சரியான நேரம் இது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க யோசனை தெரிவித்துள்ளார். கொழும்பு நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் சிறப்பு மாநாட்டில் சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று பலமுறை எங்களுக்கு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இது விடயத்தில் எங்களுக்குச் சில கருத்துகள் உண்டு. தனது செயற்பாடுகளின் மூலம் மகிந்த ராஜபக்ச தன்னை நிரூபிக்க வேண்டும்.நாட்டினது தற்போதைய மோசமான பாதுகாப்பான சூழ்நிலை உட்பட அரசாங்கத்தை ஆதரிக்க போதுமான காரணங்கள் உள்ளன. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டுமெனில் எது பயங்கரவாதம் என்பதை மகிந்த ராஜபக்ச தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். யுத்தத்தின் அடிப்படையே தாக்குதலும் தற்காப்பும்தான். நம்மை தற்காத்துக் கொள்ளுவதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தைத் தோற்கடித்துவிட முடியாது. இப்போது இராணுவத் தாக்குதல்களுக்கு அரசாங்கம் மாற வேண்டிய அதி உச்ச நேரம் இது.இந்த நாட்டின் தலைவர் என்கிற வகையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மகிந்தவுக்கு உண்டு. அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகளும் தனிஈழத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர். சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்காவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளமை குறித்து சந்தேகங்கள் உள்ளன. சூடான், சோமாலியா நாடுகளின் நிலைமை வேறானவை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவை நாங்கள் பாதுகாப்போம். அவருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் ஒரு ஆட்சியாளர் இல்லாத தோல்வியடைந்த நாடாகத்தான் நிச்சயம் சிறிலங்கா உருவாகும். உள்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது. சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யாதிருப்பது முட்டாள்த்தனமானது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்படும் வரை பேச்சுக்களுக்கு அரசாங்கம் செல்லக் கூடாது. தற்போது அவர்கள் அமைதிப் பேச்சுக்கள் மூலமான தீர்வுக்கு தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் உள்ள சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிலிருந்து விலகினால் அவர்களுக்கு முறையான கல்வி மற்றும் வேலைக்கான உத்திரவாதத்தை அரசாங்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விலகிவந்தால் அந்த இளைஞர்களுக்காக எமது ஜே.வி.பி. உறுப்பினர்கள் தங்களது பணிகளை தியாகம் செய்வதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை என்றார் சோமவன்ச அமரசிங்க. இக்கூட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பான 5 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இனப்பிரச்சனையானது உள்நாட்டுப் பிரச்சனை- உள்நாட்டு விடயத்தில் சர்வதேச சக்திகள் தலையிட அழைக்கக் கூடாது- நாட்டினது இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ள சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அன்று அந்த தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நன்றி>பதிவு.

    05 July, 2006

    ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு றோ நிதியுதவி.

    தமிழ் மக்கள்,தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக் கலவரத்திற்கு தூபமிடுவதாக குற்றம்சாட்டியிருக்கும் `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்', ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்தியாவின் உளவுத்துறையான றோவுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், `றோ' ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் மேலும் தெரிவித்திருக்கிறது. நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நிப்போன் ஹேட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்வூடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவ்வியக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான நிர்மால் ரஞ்சித் கருத்து தெரிவித்தபோது; இலங்கையில் பயங்கரமானதோர் சூழ்நிலை உருவாகியிருப்பதாக கூறிக் கொண்டு தென்னிலங்கையில் உள்ள ஏனைய பல பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயலுகிறது. நாட்டு மக்களை பதற்றமான ஒரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 1983 இல் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மறந்து விட முடியாது. அதுபோன்ற வரலாற்றுத் தவறுகள் இனிமேல் நடைபெறக் கூடாது. தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டது. இன்று யுத்தத்தை ஆசீர்வதிக்கும் வீறாப்புப் பேச்சுகள் பேசப்படுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தை வழங்கப்போகிறோம் அல்லது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு என்னதான் வழி என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும் என்றார். அஜித் பெரக்கும் ஜயசிங்க ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினரின் போருக்கு ஆதரவான பிரசாரங்களால் முழு இலங்கையும் ஆபத்தான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பான `றோ' வுடன் இரகசிய தொடர்புகளை பேணி வருகிறார். இலங்கையில் ஜே.வி.பி. யின் செயற்பாடுகளுக்கு `றோ' பெருமளவில் நிதியுதவியளித்து வருகிறது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஷியாம் சரணின் இலங்கை விஜயம் உற்று நோக்கப்படுகிறது. அவர் இந்தியப் பிரதமரின் சிறப்பு செய்தியுடன் இங்கு வந்து ஜனாதிபதியைச் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையொத்த அதிகாரப் பரவலாக்கலையே இலங்கையில் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அனுசரணைப் பணியை மேற்கொள்ளும் நோர்வே அரசாங்கம் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் புலிகளை தடை செய்தமையானது இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் ஏற்பட வழியமைத்துள்ளது. என்லி பெரரோ தமிழ் மக்கள் தேசியப் பாதுகாப்புக்கு குந்தகமானவர்கள் என்ற தோற்றப்பாட்டை தென்னிலங்கையில் உருவாக்கி மற்றுமொரு இனக்கலவரத்திற்கு தூபமிட சிலர் முயலுகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீர்கொழும்பில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்கள் சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படுகிறார்கள். கைதுகளின் போது தமிழர்கள் மனிதாபிமானமாக நடத்தப்படுவதில்லை. நாட்டுப் பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவினர் உண்மையில் நாட்டுப்பற்றாளர்கள் அல்ல. அவர்கள் நாட்டினைப் பிரிப்பதற்கே துணை போகின்றனர் என்றார். அதேவேளை, `சுதந்திரத்திற்கான மக்கள் இயக்கம்' 1983 இல் நடைபெற்ற ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், அதேமாதிரியான ஒரு சம்பவம் இனிமேல் நடைபெறதிருப்பதை உறுதி செய்வதற்காகவும் எதிர்வரும் 24 ஆம் திகதி மாபெரும் பாத யாத்திரை ஒன்றை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதனுடன் இணைந்து அன்றைய தினம் விகாரமஹாதேவிப் பூங்காவில் கலாசார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், `முழு இலங்கையும் அபாயத்தில் நாம் செய்யக் கூடாதது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்குகளை நடத்த இவ்வியக்கம் திட்டமிட்டுள்ளது. நன்றி>பதிவு.

    இந்திய அரசு புலிகளை ஆதரிக்க வேண்டும்.

    கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் குமுதம் பத்திரிகைச் செவ்வியில் இலங்கைத் தமிழர் பிரச்னையில், நார்வே அரசின் சமாதான முயற்சிகளில் மிக முக்கிய பங்காற்றியவர் இலங்கைத் தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன். விடுதலைப்புலிகள், முஸ்லிம் தலைவர்கள், மிகவும் செல்வாக்கான சிங்கள அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்களுடன் ஜெயபாலனுக்கு நெருக்கமான நட்பு உண்டு. நார்வேயிலிருக்கும் அவர் கடந்த வாரம் சென்னை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்தோம். இப்போது ஏற்பட்டிருக்கும் அறிவிக்கப்படாத போருக்கு உண்மையில் யார் காரணம்? இலங்கை அரசாங்கம்தான். 2002இல் ஆஸ்ரோவிலும் 2006இல் ஜெனிவாவிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், உலக நாடுகளுக்கு முன்னால் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கு இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் துணை இராணுவக் குழுக்களை கலைத்து விடுவது, உயர்பாதுகாப்பு வளையம் என்கிற பெயரில் தமிழர்களை வெளியேற்றி கைப்பற்றி வைத்திருக்கிற இடங்களில் தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்துவது உட்பட அப்போது ஏற்றுக்கொண்ட எல்லாவற்றையுமே இலங்கை அரசு நிராகரித்து விட்டது. மட்டுமல்லாமல், கருணா குழுவினர் என்கிற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் அதிகரித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆயுதம் தாங்கிய ஒரு விடுதலை அமைப்பு, அச்சம் அடைவதும் எதிர்த்தாக்குதல்களை அதிகரிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றுதான். புலிகளின் வன்முறைகளை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது அவர்களின் எதிர்த்தாக்குதல் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் எதிர்தாக்குதல் போன்றதுதான். கருணா இப்போது எங்கே இருக்கிறார்? தாய்லாந்து, மட்டகளப்பு, கொழும்பு, இந்தியா என்று பல்வேறு விதமான தகவல்கள் உலாவுகின்றன. ஆனால், புலிகளுக்கு எதிரான வன்முறைகளை வெளிப்படையாகவே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆதரவு கருணாவுக்கு இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கவும் சிங்களர்கள் முயற்சிக்கிறார்கள். அது உண்மையல்ல. இப்போதுள்ள பதட்டமான சூழ்நிலைக்கு உடனடி தீர்வு என்ன? துணை இராணுவக் குழுக்களை அரசு கலைத்து விடுவதும் விடுதலைப்புலிகள் வன்முறையைக் கைவிடுவதும் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய உளவுத்துறையினரின் ஆதரவைப் பெறலாம் என்கிற தவறான ஆலோசனையின் அடிப்படையில்தான், நிழல்யுத்தத்தை இலங்கை அரசாங்கம் தொடங்கியது. இந்திய அரசாங்கம் அப்படியான ஆதரவு கிடைக்காது என்பதை புலப்படுத்தியிருக்கிறது. எனவே இப்போதைக்கு பின்வாங்கியிருக்கிறது. எனினும் இன்னும் தெளிவாக இந்தியா தன் நிலைப்பாட்டை புலப்படுத்தும்போது, நிழல்யுத்தத்தைக் கைவிட்டுவிட்டு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் திரும்பும். நேரடியான பேச்சுவார்த்தைக்கு வரும்படி இலங்கை ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறாரே? ராஜபக்சேவின் இந்த அழைப்பு தந்திரமானது. உலக நாடுகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் துணையுடன் நார்வே மேற்கொண்டிருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தையை முறியடிக்கவும், முடக்கவும், இப்போது நேரடியாகப் பேசுவோம் என்கிறார் அவர். இந்தியா என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? விடுதலைப்புலிகளும் இந்திய அரசும் நிறைய தவறுகளை செய்துவிட்டார்கள். ராஜீவ்காந்தி கொலை மிகவும் பிரதானமான தவறு. எனினும் இரண்டு தரப்பினரும், இருவரின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, தங்கள் தவறுகளை உணர்ந்து அவற்றைக் கடந்து வரலாற்றை வெற்றிகரமான பாதையில் நகர்த்திச் செல்லவேண்டும். புலிகள் தவறு செய்திருக்கிறார்களே ஒழிய, அவர்கள் இந்தியாவின் எதிரிகள் அல்ல. முரண்பட்ட தன் மகனை அரவணைத்துக் கொள்ளும் குடும்பத் தலைவனைப் போல இந்திய அரசு புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். கலைஞர் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறீர்களா? கலைஞர் எங்களுக்காக நிறைய செய்திருக்கிறார். குறிப்பாக அகதிகள் தொடர்பான அவரது பங்களிப்புகள் முக்கியமானவை. இலங்கை பிரச்னை காரணமாக ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நெருக்கடிகளையும் அவர் எதிர்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்கு தன் ஆட்சிக் காலத்திலேயே வழிசெய்து கொடுப்பார் என்கிற அச்சம் சிங்களர்கள் மத்தியில் இருக்கிறது. மேலும் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், புதிய தலைமுறை மார்க்சியவாதிகள் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார்கள். இது எங்களிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச உதவியில்லாமல் அகதிகள் பிரச்னையை தமிழகத்தால் மட்டும் தீர்க்க முடியாது. ஆனாலும், தங்களது பொருளாதார நிலையில் செய்யக்கூடியதை கலைஞர் அரசு செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நார்வே சமீபத்திய நிகழ்வுகளால் சோர்வடைந்திருப்பது போல் தெரிகிறது. அவர்கள் பேச்சுவார்த்தையிலி ருந்து வெளியேற வாய்ப்புள்ளதா? நார்வே சமாதான தூதுவர் எரிக் சோல்கைம் எனக்கு மிக நெருங்கிய நண்பர். ஐரோப்பிய யூனியன் தடை காரணமாக புலிகள் எடுத்த நிலைப்பாடு, உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறுவது போன்றவை நார்வேயைச் சோர்வடையச் செய்துள்ளது உண்மைதான். ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தையிலிருந்து நிச்சயம் வெளியேற மாட்டார்கள். பெரிய யுத்தம் வர வாய்ப்புள்ளதா? எதிர்த்தாக்குதலுக்கு புலிகளைத் தூண்டி அதன்முலம் பயங்கரவாதிகளாக அவர்களைக் காட்டுவதுதான், இலங்கை அரசின் நிழல்யுத்தத்துக்கான அடிப்படைக் காரணம். ஆனால், இது புலிகளுக்குத் தெரியும். எனவே அவர்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள். நிச்சயம் பெரிய யுத்தம் வராது. யுத்தம் தொடர்பான அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. யுத்தம் ஏற்பட்டால் மொத்த இலங்கையும் அழியும். சந்திப்பு : தளவாய் சுந்தரம் நன்றி> குமுதம்

    04 July, 2006

    சிவகாசி வீரனுக்கு எமது வீர வணக்கங்கள்.

    இன்று இவர்களது நினைவு நாட்கள், இவன் யாருக்காக தன்னை ஈந்தான், தமிழுக்காகவா? தமிழீழ மக்களுக்காகவா? எமது காவல் தெய்வத்துக்கு எமது வீர வணக்கங்கள்.

    சாவதற்காகப் போட்டி போடுபவர்கள்.

    கட்டில் சட்டத்தில் தலையை மோதி உயிரைத் துறந்த கரும்புலி வீரன்! *எதிர்வரும் 5 ஆம் திகதி கரும்புலிகள் தினம் மட்டக்களப்புமாவட்டத்தில் ஒரு படகிலிருந்து 28.06.1997அன்று கடற்புலிகளின் இரண்டு நடுத்தர விநியோகப் படகுகளும் அதற்குத் துணையாக ஒரு கரும்புலிப்படகும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு கடற்படைத்தளம் நோக்கிப் புறப்படுகின்றது. மெல்ல இருள் பரவத் தொடங்கும் அந்த நேரத்தில் குறித்த படகுகள் திருகோணமலைப் பகுதியின் பிரதான துறைமுகப்பகுதியை கடந்து செல்கையில் ஷ்ரீலங்கா கடற்படையால் வழிமறிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அச்சந்தர்ப்பத்தில் முக்கிய விநியோகம் நிமித்தம் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளில் ஒன்று மற்றைய படகில் தவறுதலாக இடிபடுகின்றது. அதில் ஒரு படகில் சேதமடையவே பணியில் ஈடுபடும் போராளிகளால் சேதமடைந்த படகிலிருந்த முக்கிய பொருட்களும் விரைவாக மற்றைய படகில் ஏற்றப்பட்டு ஒருபடகு விரைந்து பயணத்தைத் தொடர்கின்றது. இப்போது சேதமடைந்த படகானது கரும்புலிப் படகு மூலம் கட்டி இழுக்கப்பட்டு பயணித்துக்கொண்டிருக்கும்போது சேதமடைந்த படகில் கடல் நீர் உட்புகுவது அவதானிக்கப்படுகின்றது. அந்த நீரை வெளியகற்றும் பணியில் ஒரு போராளியும் ஒரு கரும்புலியும் விரைந்து செயற்படுகின்றனர். படகுகள் இப்பொது கும்புறுப்பிட்டிப் பகுதியை அண்டிய கடற்பகுதியில் செல்கின்றன. அந்த வேளைதான் கடற்படையினரின் தொடர்ந்த தாக்குதலினால் சேதமடைந்த விநியோகப்படகு இழுவைக்கயிறு அறுபட்டு தனிமை அடைகின்றது. மிகுந்த நெருக்கடிமிக்க சூழலில் குறித்த படகிலிருந்த கரும்புலி வீரன் கடலில் குதித்து கரை நோக்கி நீந்துகின்றான். கரையை அடைந்த அவன் தேசத்துரோகிகளின் காட்டிக்கொடுப்பால் கடற்படையினரிடம் பிடிபடவேண்டி ஏற்படுகின்றது. கடற்படையினர் அந்த கரும்புலி வீரனை கைகளுக்கு விலங்கிட்டு கூட்டிச் செல்கின்றனர். இயக்கத்தின் பல்வேறு முக்கிய இரகசியமான விடயங்களை அறிந்த அந்தக்கரும்புலி வீரனுக்குத் தெரியும் எப்படியும் அந்த இரகசியங்களை இராணுவம் பெற்றுக்கொள்வதற்காக தன்னை சொல்லொணா துன்புறுத்தலுக்கு உட்படுத்தும் என்று அப்போதைய கணத்தில் அவனுக்கு தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய எதுவித வசதியும் கைவசம் இல்லை. அப்போதுதான் தனது நாக்கு இருந்தால்தானே இவர்கள் என்னை பேசச் செய்து இரகசியத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வார்கள் என உணர்ந்து தனது நாவினை பற்களால் கடித்து துண்டாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றான். அதிக இரத்தப்போக்கு ஏற்படவே அந்த வீரன் மயக்கமடைகின்றான். அதைத் தொடர்ந்து படையினர் திருகோணமலை வைத்தியசாலையில் அவனை அனுமதிக்கின்றனர். இராணுவப் பாதுகாப்பும் அத்தோடு கட்டிலில் கூட விலங்கிட்ட நிலையிலும் அந்த வீரன் மயக்கநிலையில் கிடக்கின்றான. இப்பொழுது மயக்கம் தெளிந்து விட்டது. தான் படையினர் வசம் உள்ளேன் என்பதும் தப்பித்துக்கொள்வது கடினம் என்றும் அவனால் உணரப்படுகின்றது. அப்போதுதான் அவன் புலிகள் அமைப்பின் மீதும் தலைவர் மீதும் கொண்ட பற்றுறுதிக்குச் சான்றாக படுத்திருந்த கட்டில்சட்டத்திலேயே பலமாக தனது தலையை மோதிமோதியே தனது உயிரைப்போக்கிவிடுகின்றான். இது கதையல்ல. கண்முன் நடந்த கரும்புலி ஒருவனின் நிஜகாவியம். அந்தக் கரும்புலி வீரன் யார் தெரியுமா? அம்பாறையில் பிறந்து இனவாதப்படையினரின் இரக்கமற்ற செயலுக்கு தன் குடும்பத்தையே பறிகொடுத்து விட்டு பின்பு புலிகளுடன் இணைந்து கருப்புலியாக மாறிய கடற்கரும்புலி மேஜர் பாலன். அவனது இயற்பெயர் சோமசுந்தரம் திலீபன். ஒரு கரும்புலி வீரனின் உறுதிக்கும் வீரத்திற்கும் ஒப்பிடமுடியாத இனப்பற்றிற்கும் இதைவிட சான்றுவேண்டுமா? கரும்புலிகள் என்றால் அதன் அர்த்தந்தான் என்ன? தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகின்றார் கரும்புலிகள் என்ற பதத்தில் கருமையை உறுதிக்கும் மனோதிடத்திற்குமே குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்தம் பரிமாணத்தில் அது இருளையும் குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியமான செயற்பாட்டையும். தன்மையையும் அது குறித்து நிற்கின்றது. எனவே கரும்புலிகள் என்ற பதம் பல அர்த்தங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிடுகின்றார். கரும்புலிகள் ஒவ்வொருவருக்கும் பின்னால் மாபெரும் கதைகள் உண்டு. அவர்கள் தங்கள் உடலை வெடிக்கவைத்து உயிரை ஆயுதமாக பயன்படுத்தி இறக்கின்றார்கள். அந்தக் காரியத்தை தாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள். தனது சாவு மூலம் தனது இந்த உயரிய அர்ப்பணிப்பு மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஏதாவது ஒரு உயர்வு கிட்டிவிடுகின்றது என்பதை எண்ணி அவர்கள் மகிழ்ச்சி கொள்கின்றார்கள். ஒருதடவை ஒரு கரும்புலி வீரன் கூறினான். நாங்கள் சிறிய வயதில் வீட்டில் இருக்கும் போது அம்மா அப்பாவுடன் அடம்பிடித்து எமக்குப்பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை வாங்குவோம் அந்தப் பொருட்கள் எமக்குக் கிடைத்துவிட்டால் அந்த வயதில் அதைப்போல மகிழ்ச்சி வேறு எமக்குக் கிடையாது. இப்போது நாங்கள் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் தலைவருக்குப் பல தடவைகள் கடிதம் எழுதி கரும்புலியாகும் சந்தர்ப்பத்தை வாங்கியுள்ளோம். இப்போது இதைவிட மகிழ்ச்சி இல்லை என்று. தான் சாகப்போகிறேன் என்று தெரிந்தும் சாவு தனது கண்ணெதிரே நிற்கிறது எனத்தெரிந்தும் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த உணர்வின் உச்சங்களுடன் உலகில் எதைத்தான் ஒப்பிட முடியும் சாவதற்கு போட்டிபோடும் யாரையாவது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அது வேறு யாருமல்ல கரும்புலிகள் மட்டுமே. பல சந்தர்ப்பங்களில் புலிகளால் எதிரிகளின் இலக்குகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை துவம்சம் செய்வதற்கு தீர்மானிக்கப்படுகையில் கரும்புலிகள் நான் முந்தி நீ முந்தி என போட்டிபோடுவதுதான் அதிகம். அதனால் சீட்டுக் குலுக்கிப்போட்டு உரிய ஒரு கரும்புலியை தேர்வு செய்யும் முறையும் புலிகளிடம் உண்டு. தலைவர் பிரபாகரன் அவர்கள் இப்படிக்கூறுகிறார் மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள் என்று கூறுகின்றார். அண்மையில் அல்லைப்பிட்டியில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் கூட துப்பாக்கிகளால் இரக்கமற்று சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தமை உலகமே அறிந்ததுதான். இது போல தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்ட காட்சிகளை இன்று கரும்புலிகளாக மாறியவர்கள் நேராகக் கண்டவர்கள்தான். இப்டியான சம்பவங்கள் அவர்களின் ஆழ்மனங்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் கூட அவர்கள் இந்த அவலங்களை இல்லாமல் செய்வதற்கு கரும்புலியாக மாற தூண்டுதலாக இருந்தது என்றால் கூட மறுப்பதற்கு இல்லை. ெபாதுவாக இன்று சர்வதேச சமூகம் தற்கொலைத் தாக்குதல்களை வெறுக்கின்றது. கார்க்குண்டு வெடிப்புகளும் பிற முறைகளிலான தற்கொலைத் தாக்குதல்களும் உலகில் பல இடங்களில் பரவலாக இடம் பெறுகின்றது. உலகத்தின் பார்வையில் இந்தத் தாக்குதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் அதிகமாகக் கொல்லப்படுவது உணரப்படுகின்றது. இது தீவிரமாக பரிசீலிக்கப்படவேண்டிய விடயம். என்றாலும் சர்வதேசம் வெளியிடும் கருத்தில் உண்மையில்லை என்றும் கூறிவிட முடியாது. ஆனால் இந்தக் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது புலிகளின் கரும்புலிகள் அணி. புலிகளைத் தங்களின் நலன்களை மையமாக வைத்து உலகின் பல நாடுகள் தடைசெய்திருந்தாலும் உள்ளார்ந்த ரீதியாக இந்நாடுகள் புலிகளின் வீரம், ஒழுக்கம், இனப்பற்று, தந்திரோபாயம் என்பவற்றை மெச்சத் தவறவில்லை. அந்த வகையில்தான் கரும்புலிகள் அணியின் ஒழுக்கத்தையும் வீரத்தையும் உலகம் மதிப்பிடுகின்றது. தான் தெரிவு செய்த இலக்கைத்தவிர வேறு எதற்கும் தேவையற்ற இழப்புக்கள் சேதங்கள் வந்துவிடக் கூடாது என்பதில் கரும்புலிகள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அதற்காகக்கூட பல சந்தர்ப்பங்களில் அவர்கள் திட்டங்களை மாற்றியதோடு தாங்களே இழப்புக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். ஒரு சமயம் கடற்படைப் படகு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தச்சென்ற கரும்புலி வீரன் மீன்பிடித்துக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை குறித்த கடற்படைப்படகில் பிடித்து துப்பாக்கி முனையில் வைத்திருந்ததைக் கண்டதும் கடற்படைப்படகு மீது தாக்குதல் நடத்தாமல் தனியே தனது வெடி மருந்துப்படகை வெடிக்கவைத்து வீரச்சாவடைகின்றார். அன்று கடற்படைப் படகு மீது தாக்குதல் நடந்திருந்தால் கடற்படையோடு சேர்ந்து அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருப்பார்கள். இதுதான் கரும்புலிகள் கட்டிக்காக்கும் அதியுயர் ஒழுக்கம். சாகப்போகும் இறுதிக்கணத்திலும் கரும்புலிகள் எப்படியெல்லாம் சிந்திக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை வெறும் தற்கொலைத் தாக்குதலாளர்களாக பார்க்காமல் அதியுயர்ந்த ஒப்பற்ற பிறவிகளாக பார்க்க வேண்டிய நிலை யாவருக்கும் ஏற்படுகின்றது. கடற்கரும்புலி மேஜர் குமரவேல் அவர்களே இவ்வாறு வீரச்சாவடைந்தவர். புதுவை இரத்தினதுரை எழுதிய இந்தப்பாடல் வரிகளைப்பாருங்கள். முகம் தெரியாது - உங்கள் முகவரி தெரியாது இடமும் தெரியாது - உங்கள் படமும் கிடையாது மகனா மகளா அயலா உறவா எதுவும் தெரியாது எனினும் நீங்கள் எமக்காய்த் தானே வெடித்தீரென்பது தெரியும். யாரென்று எங்களால் அறிய முடியாமலிருக்கும் அந்த மறைமுக வீரர்களின் மனதைப் போல இந்த உலகில் யாருக்குத்தான் மனது இருக்கும். சாதனைகளை தமதாக்கி பேரெடுக்க விரும்பும் பேர்வழிகள் இந்த உலகில் எத்தனை எத்தனை. ஆனால் மாபெரும் சாதனைகளைப்புரிந்து உயிரையும் உவந்தளித்து யாரோ ஒரு சிலரால் மட்டும் உணரப்படும் உண்மைகளாக வாழும் இந்த பேர் தெரியாத கரும்புலிகள் செய்த சாதனைகளைப்போல் வேறு எந்த சாதனைகளை காண முடியும். வெடி குண்டு சுமந்து உடல் வெடித்த சத்தத்தையும் அந்த செய்தியையும்தானே அறியலாம். அவர் யார் எவர் என்று தெரியாது. அவர்களுக்குத்தானே நினைவுக்கற்களோ கல்லறைகளோ கட்டமுடியாதே. தமிழர் நெஞ்சில் அவர்கள் வாழ்வார்கள். அவர்களைப்பற்றி பொதுவாக பேச முடியுமே தவிர தனியான வரலாறு சிலருக்குத்தானே தெரியும். நெருப்பாறுகளுக்குள் அவர்கள் நீந்தியதும் நிலத்துக்குள் புதைந்து கிடந்ததும் இந்த விடுதலைக்கு என்பதை மறவாமல் இருப்போம். தமிழரின் விடுதலைப்போராட்டம் இன்று சர்வதேச ரீதியாகப் பேசப்படுவதற்கு உயிர்களைக் கொடுத்து உறங்கிக்கொண்டிருக்கும். கரும்புலிகள் மிக முக்கிய காரணகர்த்தாவாக திகழ்ந்தார்கள் என்பது உண்மையே. கட்டுநாயக்கா விமானப்படைத்தள தாக்குதலைத் தொடர்ந்து ஷ்ரீலங்கா அரசு சந்தித்த மிகப்பாரிய பொருளாதார நெருக்கடியும் புலிகளை தாம் வெல்ல முடியாது என திடமாக நம்பியமையும் தான் பேச்சுக்கு செல்லத்தூண்டியது என ஒரு தடவை முன்னாள் ஷ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அத்தோடு சர்வதேச அழுத்தமும் ஒரு காரணம் என அவர் கூறியது எந்தளவு ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பது கேள்விக்குறியே. இந்த மாபெரும் மாற்றங்களை செய்தது கரும்புலிகள் அன்றி வேறு யார்? இலங்கை சுதந்திரம் அடைந்தது என சொல்லப்படும் காலப்பகுதியிலிருந்து பார்த்தால் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலின் பின்பே இலங்கையின் மிகப்பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளால் எங்கும் எப்போதும் ஷ்ரீலங்காவில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை கரும்புலிகள் உணர்த்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் பணத்தையல்ல உயிர்களைக் கொடுத்தே நிரூபித்திருக்கிறார்கள். பலாலி விமானத்தளம் மீதான கரும்புலிகளின் தாக்குதல் இதற்கு நல்ல சான்று. அது போலவே 12.04.1996 அன்று கொழும்பு துறைமுகப்பகுதியில் ஊடுருவி கடற்படைக் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஒன்பது கரும்புலிகள் வீரச் சாவடைந்தமையையும் குறிப்பிடலாம். கரும்புலிகளைப்பற்றி ஆயிரமாயிரம் கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். உயிர்ப்பூ எனும் தமிழீழத் திரைப்படம் கரும்புலி ஏன் எப்படி உருவாகின்றான் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது. அந்தத் திரைப்படத்தில் அந்த மீனவக்குடும்பத்தில் வாழும் நகுலன் தொழிலுக்குச் செல்லும் வேளை ஒரு தடவை கடற்படையினர் மேற் கொள்ளும் தாக்குதலில் தனது தம்பி தன் கண் முன்னே கொல்லப்படுகின்ற காட்சியைக் காண்கின்றான். மீன்பிடிப்படகில் நின்றும் கைகளை உயர்த்தி சுடாதையுங்கோ சுடாதையுங்கோஎன தனது தம்பி கதறிய காட்சி அவனது மனதில் ஏற்படுத்திய செய்திகள் பல. நன்றி>thinakkural.com

    ராஜீவ்காந்தி பிரபாகரனுக்கிடையில் இரகசிய ஒப்பந்தம்?

    தினபூமி பொய் சொல்கிறதா?? -ஈழபாரதி- பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து திடுக்கிடும் தகவல் தினபூமி நாளேடு தெரிவிப்பு இலங்கையில் தமிழ் மக்கள் வாழு­ம் பகுதிகளில் விடுதலைப்புலிகளின் அரசு அமையவும் விடுதலை புலி­களின் நிதித்தேவைகளுக்காக மாதாந்தம் 50 லட்சம் ரூபா வழங்குவதெனவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்ததாக தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளேடான "தினபூமி' செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளதாக சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சி அலைவரிசை நேற்று முன்தினம் இரவு செய்தி வெளியிட்டுள்ளதாகவும் "தினபூமி' நாளேட்டில் சுட்டிக்காட்டப்­பட்டுள்ளது. ராஜீவ்காந்தி விடுதலைப் புலிகளின் விடயத்தில் நாளு­க்கு நாள் புதிய புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ்காந்தியை கொன்றதே நாங்கள் தான் என விடுதலைப் புலிகள் அமைப்பு சில தின­ங்களுக்கு முன்பு பகிரங்கமாக தெரிவித்தது. இக்கொலை­யை மன்னித்து இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புவதாக புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். பாலசிங்கத்தின் இந்த பேட்டி மிகுந்­த சர்ச்சையைத் ஏற்படுத்தியதையடுத்து விடுதலைப் புலிகளை மன்னிக்கமா­ட்டோம் அவர்களுக்கு ஆதரவும் அளிக்க மாட்டோம் என்று மத்திய அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து திடீரென ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லையென்று புலிகள் மறுத்தனர். பாலசிங்கத்தின் பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக புலிகள் விளக்கமளித்தனர். நடந்த சம்பவத்திற்கு அவர் வருத்தம்தான் தெரிவித்தாரே தவிர பொறுப்பேற்கவில்லை என புலிகளின் செய்­தி தொடர்பாளர் விளக்கமளித்தார். இந்நிலையிலேயே ராஜீவ்காந்திக்கும் பிரபாகரனுக்கும் இடையே இரகசிய உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்ததாக சி.என்.என்., ஐ.பி.என். தொலை­க்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பாலசிங்கத்தின் சுயசரிதையிலிருந்து அந்த தகவல்கள் தங்களுக்கு கிடைத்ததாகவும் அந்த சேனல் மேலும் விளக்கமளித்துள்ளதாக "தினபூமி' நாளேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒப்பந்தத்தின்படி இலங்கையில் தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசாங்கம் அமைய ராஜீவ்காந்தி புலிகளுக்கு உறுதியளித்திருந்தார். இதற்காக இலங்கை அரசுடன் பேசி அனுமதி பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் அரசாங்கத்தில் இலங்கை அரசின் தலையீடு இருக்கவே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிதிக்காக ராஜீவ்காந்தி மாதா மாதம் ரூ. 50 லட்சம் வழங்கியதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. 80 களின் இறுதியில் இலங்கையில் வடமராட்சி பகுதியில் சிங்கள இராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்கிய போது அதற்கு எதிர்­ப்பு தெரிவித்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்­காந்தி இலங்கை தமிழர்களுக்கு விமானம் மூலம் உணவு பொருட்களையும் நிவாரணப்பொருட்களையும் வழங்க உத்தரவிட்டார். உணவு பொட்டலங்களை போடுவதற்காக இந்திய விமானங்கள் இலங்கைக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்­ந்து தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ்காந்தி முன்வந்தார். அப்போது புலிகளின் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து பேச்சு நடத்தினார். தமிழர் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அரசு அமைய அவர் ஏற்பாடு செய்ததாக பாலசிங்கத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எத்தனையோ அரசியல் கொலைகளை புலிகள் செய்­திருந்தாலும், ராஜீவ்காந்தி படுகொலை புலிகள் தலையெழுத்தையே மாற்றிவிட்டதாக பாலசிங்கம் மிகவும் வேதனையுடன் தமது சுயசரிøதயில் மனம் விட்டு எழுதியிருப்பதாக மேற்படி தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. பாலசிங்கத்தின் இந்த பகீர் தகவல்கள் இந்தியாவில் புதிய புயலை கிளப்பும் என தெரிவிக்கப்படுகிறது. நன்றி>லங்காசிறீ

    இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழுஆதரவு.

    இலங்கையின் இணைப்பாட்சித் தீர்வுக்கு இந்தியா முழு ஆதரவு - சியாம் சரண் தொடரும் வன்முறைச் சூழலுக்கு முடிவு கட்டி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண சிறீலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என இந்திய வலியுறுத்தியுள்ளது. நேற்று சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளியுறவுச் செயலர் சியாம் சரண் தொடருந்தும் வன்முறைகளால் ஈழத்தமிழர்கள் புலம் பெயர்வது தமிழ் அரசியல் மட்டங்களிலிருந்து மத்திய அரசுக்கு நெருக்கடிகள் ஏற்படுவதாக சுட்டுக்காட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச இன நெருக்கடிகளுக்கு அரசியல் தீர்வைக் காண அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் எனினும் விடுதலைப் புலிகளை பேச்சுவார்தையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் வெளிநாடுகளும் காத்திரமான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் வலியுறுதியுள்ளார். சந்திப்பின் நிறைவாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கினுடைய சிறப்புச் செய்தி ஒன்றை கையளித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் இந்தியாவின் இணைப்பாட்சித் திட்டத்தை ஒத்த தீர்வை இலங்கை அரசு முன்மொழிந்தால் அதற்கு இந்திய அரசாங்கம் கொள்கை அளவிலான ஆதரவை வழங்கும் என உறுதியளித்திருக்கின்றார். நன்றி>புதினம்.

    03 July, 2006

    ஐரோப்பிய பிரதிநிதிகள் செப்.1 முன் வெளியேற வேண்டும்.

    போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் யாவரும் செப்ரெம்பர் முதலாம் திகதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் இருந்து வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு.

    ஐரோப்பியத் தடை தவறு, அயர்லாந்து தலைவர் மக்கன்ஸ்.

    தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது பாரிய தவறு என்று வட அயர்லாந்து விடுதலை அமைப்பின் முன்னாள் தலைவர் மக்கன்ஸ் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏயின் முன்னாள் தலைவரும் அதன் அரசியல் பிரிவான சின்பெய்ன் பிரதிநிதியுமான மார்ட்டின் மக்கன்னஸ் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார். கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப்பணிப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். இச்சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் மக்கன்ஸ் கூறியதாவது: நாம் அயர்லாந்திலிருந்து வந்திருக்கிறோம். உலகில் மிகவும் வெற்றிகரமான அமைதிப் பேச்சுவார்த்தையை நாம் நடத்தியிருக்கிறோம். எமது சின்பெய்ன் இயக்கத்தின் அனுபவங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது சிறிலங்காத் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம் எம்மீது பிரித்தானியா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதித்திருந்த நிலையில்தான் நாம் பேச்சுக்களை நடத்தினோம். அயர்லாந்து விடுதலை அமைப்பான ஐ.ஆர்.ஏ.வில் 1970 ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதில் மக்கன்ஸ் தன்னை இணைத்துக் கொண்டார். ஐ.ஆர்.ஏவின் இரண்டாம் நிலை தலைவராக 21 வயதில் பொறுப்பேற்றார். அயர்லாந்து விடுதலை அமைப்பான சின்பெய்ன் இயக்கத்தில் மூத்த தலைவராக உருவான மக்கன்ஸ் 1972 ஆம் ஆண்டு பிரித்தானியாவுடன் நடந்த பேச்சுக்களில் பங்கேற்றார். அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்து கொண்டார். புதிய வட அயர்லாந்து சபையின் கல்வி அமைச்சராக 1999 ஆம் ஆண்டு நவம்பரில் தெரிவு செய்யப்பட்டார். நன்றி>பதிவு

    சர்வதேச ரீதியில் மீண்டும் வலை விரிப்பும் வியூகமும்.

    இலங்கை இனப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட இரு பிரதான தரப்புகளாலும் அமைதி வழியில் சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வுகாணும் விடயத்தில் பலம் பொருந்திய நாடுகளின் தனிப்பட்ட புவியியல், கேந்திர, அரசியல் அபிலாஷைகளும், கொள்கை நிலைப்பாடுகளும், அதிகார வீச்சுகளும் அளவுக்கு அதிகமாக தலையீடு செய்யும் ஆபத்து இருப்பது குறித்து இப்பத்தியில் ஏற்கனவே பலதடவை சுட்டிக் காட்டி வந்துள்ளோம். ரணிலின் முன்னைய ஐ.தே.கட்சி அரசு, தமிழீழ விடு தலைப்புலிகளுடன் அமைதி முயற்சிகளை ஆரம்பித்த காலத்திலேயே இத்தகைய தலையீடுகள் இருந்து வந்தமையை அனைவரும் அறிவர். உலக நாடுகளின் திரள்வான சர்வதேச சமூகம், அப்போதே அந்த சமாதான முயற்சிகளின்போது தீர்வுக்கான வரம்புகளை வரையறைகளை தமது விருப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இயைவாகத் திணிக்கத்துணிந்தமை எமது வரலாற்றுப் பட்டறிவு. சர்வதேச சமூகத்தின் தலையீடு, நெருக்குவாரம் மூலம் புலிகளை அமுக்கிப் பிடிக்கும் தனது திட்டத்தையே ரணில் விக்கிரசிங்க தமது "சர்வதேச பாதுகாப்பு வலையப்பின்னல்' என்ற சதியாக விரிக்க முயன்றார். தமது உரிமைகளை மீளப் பெறுவதற்கான தேடலில் போராட்டத்தில் முறையற்ற அந்நியர் தலையீடு, தமது அரசியல் தகைமையையும் தலைவிதியையும் தாமே தீர்மானிக்கும் சுயாதீன உரிமையைப் பாதிக் கிறது பறிக்கிறது என்ற மெய்மை நிலையை உய்த்து ணர்ந்து கொண்ட தமிழர் தரப்பு விடுதலைப்புலிகள் இயக்கம் தமது தந்திரோபாயக் காய் நகர்த்தல்கள் மூலம் இந்தச் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு அவதியுறாமல் தம்மை சாமர்த்தியமாகத் தவிர்த்துக்கொண்டது. அது நடந்து முடிந்த கதை. இப்போது தென்னிலங்கையில் ஒரு குழப்பமான சிந்தனைத் தெளிவற்ற கொள்கை நிலைப்பாட்டில் ஒருங்கிசைவற்ற ஓர் ஆட்சிப்பீடம் அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அதனைத் தமது இசைவுக்கு ஏற்ப வழிநடத்த முடியாமல் திணறும் சர்வதேச சமூகம், தமிழர் தரப்பையாவது நெருக்குவாரப்படுத்தித் தனது வழிக்குக் கொண்டுவர எதிர்பார்த்துத் தோற்றுப்போய் நிற்கிறது. இந்தப் பின்னணியில் தமிழர் தரப்புக்கு எதிராக மற்றொரு சர்வதேச சதிவலைப் பின்னல் இழைக்கப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பை அம்பலப்படுத்துவதே இப்பத்தியின் இன்றைய நோக்கமாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்ட வீச்சை மடக்கு வதற்கான வியூகத்தை ஐ.நா.மட்டத்தில் வகுக்கும் எத்தனங்கள் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன எனத் தெரிகின்றது. அதன் ஒரு கட்டமாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சார்பில் அவரின் இரு தூதுவர்கள் விரைவில் கொழும்பு வருகின்றனர். யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர் பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி யாக இலங்கையைச் சேர்ந்தவரான ராதிகா குமாரசுவாமி அம்மையார் உள்ளார். அவரின் சார்பில் உயர்மட்ட ஐ.நா. தூதுவராக அலன் றொக் என்பவர் கொழும்புக்கு வந்து இலங்கையில் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி விரைவில் நேரடியாகக் கொழும்பு வரவிருக்கிறார் எனத் தெரிகின்றது. அவரும் இலங்கையில் யுத்தப்பிரதேசத்தில் மனித உரிமை மீறல்கள் பற்றிய நிலைவர அறிக்கை யொன்றைத் தயாரிப்பார் எனத் தெரிகின்றது. குறிப்பாக சட்டத்துக்கு முரணான முறையில் இடம்பெறும் கொலைகள், அச்சுறுத்தல்கள், அடாவடித்தனங்கள் போன்றவை குறித்து ஒரு மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது அவரது திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேவேளை, இலங்கையில் உள்ள யுனிசெவ் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலமும் அறிக்கை களைப் பெற்றுக் குவிக்கும் திட்டம் ஒன்றும் ஐ.நா. மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. இத்தகைய அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகளின் மதிப்பீட்டு அறிக்கைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை மையப்படுத்தி, அதன் வழியாக ஐ.நா.வின் தலையீட்டுக்கு கால்கோள் இடுவதற்கான திட்டங்கள் சில மட்டங்களில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என நம்பகரமாகத் தெரிகின்றது. இந்த வலைவிரிப்பு, வியூக வகுப்பு போன்றவை குறித்து முன்னெச்சரிக்கையாக இருந்து, ரணிலின் கால சர்வதேச வலை விரிப்பை முறியடித்தமைபோல இவற்றையும் செயலிழக்கச் செய்வதற்கான தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு இப்போதே ஆரம்பிப்பது அவசியமும், அவசரமுமாகின்றது. வெறும் அறிக்கைகள், பேச்சுகள், வெளியீடுகள், பிரகடனங்கள் மூலம் இந்த வலைவிரிப்பை முறியடிக்க முடியாது. இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக் கணைகளை களத்தில் எதிர்கொண்டு, செயல் நடத்தைத் திறம் மூலம் அவற்றை முறியடித்து, முன் நகர்வதே புத் திசாலித்தனம். அதற்கு நம்மை நாமே தயார் செய்யும் காலமாக இது அமையட்டும். நன்றி>உதயன்

    இந்தியாவின் சிறப்புப் தூதுவர் இலங்கை விரைவில் பயணம்.

    சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலையை அறிய இந்திய அரசாங்கம் சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் சியாம் சரணே இலங்கைக்கு வரவுள்ளார். இவர் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செய்தியுடன் இலங்கை வரவுள்ளார். சிறிலங்காவின் பாதுகாப்பு நிலைமைகள் மிகவும் சீர்கெட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார செயலாளர் சியாம் சரண் அவசரமாக பேச்சு நடத்த அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளார். சியாம் சரணின் சிறிலங்கா வருகை குறித்து உத்தியோகப்பூர்வமாக அரச செயலகம் அறிந்திருந்த போதிலும், இத்தகவலை இரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்து வருகிறது. இந்திய அரசின் அக்கறை குறித்து சிங்கள இனவாதிகள் அறிந்து கொண்டால், மகிந்தவுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தினால் சியாம் சரணின் வருகையை அரச செயலகம் மறைக்க முயற்சித்துள்ளது. வடக்கு - கிழக்கில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களினாலும் நடத்தப்பட்டு வரும் படுகொலைகள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அக்கறை கொண்டுள்ளதுடன், அது குறித்து விவரங்களை அறியவும் முயற்சியெடுத்து வருகிறது. நன்றி>பதிவு

    02 July, 2006

    தேசத்தின் தலைமகன் பிரபாகரன்.

    கதிரொளியை பார்க்க அழுத்தவும்.
  • தேசத்தின் தலைமகன் பிரபாகரன். தேசியத்தின் கதிரொளி.
  • இந்தியாவுக்கு புலிகள் சொல்ல நினைத்தது என்ன?

    -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- * இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்.... நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும் இருக்கும். கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோர்வே கூட்டத்தின் முக்கியத்துவத்தை இரண்டாந்தரத்திற்குத் தள்ளிவிட்டு பாலசிங்கத்தின் ராஜீவ் காந்தி கொலை பற்றிய நேர்காணல் ஊடகத் தலைப்புகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இது மிக முக்கியத்துவமுடைய ஒரு `பிரச்சினை' என்பதால் பத்திரிகைத் தலைப்புகள் வேறு பிரச்சினைக்கு தாவுவதற்கு முன்னர் அதுபற்றி சற்றே நோக்குவது பொறுத்தமானதாயிருக்கும். கடந்த வாரம் இந்தியத் தனியார் தொலைக்காட்சிசேவை ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கிய அன்டன் பாலசிங்கம், ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கோரியிருப்பதாக சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்திகளின்படி புலிகள் கொலையைத் தாமே செய்ததாக பொறுப்பேற்றிருப்பதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம், இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடகங்களும் ஆய்வாளர் பலரும் பேட்டியையோ அல்லது அது பற்றிய முழுமையான அறிக்கையையோ பாராது தலையங்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் பாலசிங்கத்தின் கருத்துகள் சரியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இத்தகைய பின்னணியில் தற்போது பாலசிங்கத்தின் பேட்டியில் கொலை புலிகளால் செய்யப்பட்டது என ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாக இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இது பாலசிங்கத்தின் பேட்டி தொடர்பில் மேலதிக சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதுடன் பேட்டியை முழுமையாக நோக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலசிங்கத்தின் இச்செவ்வி பற்றிய முழுமையான அறிக்கை ஒன்று தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் இருந்து புலப்படுவது என்னவெனில் செவ்வியில் நான்கு முக்கியமான விடயங்கள் கூறப்பட்டிருந்தன என்பதாகும். அவையாவன: (1) காந்தியின் கொலை தொடர்பில் புலிகள் வருந்துகின்றனர். (2) எச்சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற உத்தரவாதம், (3) சமாதான செயன்முறையிலான இந்தியாவின் மேலதிக தலையீட்டுக்கான கோரிக்கை, (4)இந்திய சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பம். இந்நான்கு விடயங்களையும் தனித்தனியாக நோக்குவதற்கு முன், தற்போது ஏற்பட்டுள்ள புலிகள் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனரா இல்லையா என்ற சர்ச்சையை நோக்குவது பொருத்தமானது. பாலசிங்கம் தனது செவ்வியில் ராஜீவ் காந்தியின் கொலையை நாமே செய்தோம் அல்லது புலிகளே செய்தனர் என்று எந்த இடத்திலும் கூறியிருக்கவில்லை. எனவே, தயா மாஸ்டர் கூறுவது போன்று கொலைக்கான பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது சரியாக இருக்கலாம். இருப்பினும், பாலசிங்கம் இக்கால வரலாற்று நிகழ்வுகளை அடுக்கி வந்த விதமும், கொலை ஒரு மாபெரும் தவறு என்று கூறிய விதமும், அதன் பின்னர் அந்நிகழ்விற்காக தாம் வருந்துவதாகக் கூறிய விதமும் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை. பேட்டியின் இறுதியில் கொலையின் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற முடிவிற்கு ஒருவர் வருவாராயின் அது பார்வையாளரின் தவறு எனக் கூறமுடியாது. எனவே, தாம் என்ன கூறிவருகின்றோம் என்பதை சரியாகவும் தெளிவாகவும் கூறவேண்டியது புலிகளின் பொறுப்பாகும். இனி மேற்கூறிய நான்கு விடயங்கள் பற்றி நோக்கலாம். முதலில் பாலசிங்கம் `மன்னிப்பு' என்ற வார்த்தையை உண்மையில் பயன்படுத்தியிருக்கவில்லை. மாறாக, `வருந்துகின்றோம்' என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம், ராஜீவ் காந்தியின் கொலை ஒரு `மாபெரும் வரலாற்று அவலம்' என்று கூறியுள்ளதன் மூலம் தனது கவலையை வெளிப்படுத்த பாலசிங்கம் முயற்சி செய்துள்ளார். இதை மட்டுமே வைத்துக் கொண்டு புலிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர் எனக் கூறுவது எவ்வளவு சரியானது என்பது நிச்சயமானதல்ல. புலிகளின் `மன்னிப்பை' நிராகரித்துள்ள இந்திய அரசாங்க பேச்சாளர் ஒருவர் மன்னிப்பு பாரதூரமான ஒரு முறையில் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் கோபத்தை தனிப்பதற்காகக் கூறப்பட்ட இன்னுமோர் விடயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக புலிகள் இயக்கம் செயற்பட மாட்டாது என்ற உத்தரவாதம் ஆகும். முதலில் கூறப்பட்டுள்ள விடயத்துடன் ஒப்பிடுகையில் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படுவதில்லை என்கின்ற உத்தரவாதம் கூடுதல் நம்பகத் தன்மை உடையதாக உள்ளது எனப்படலாம். ஏனெனில், அண்மைக் காலத்தில் புலிகளின் செயற்பாடுகள் எதுவும் இந்தியாவுக்கு எதிராக அமைந்திருந்தன எனக் கூறமுடியாது. அதேசமயம், இந்தியாவுடன் சுமுகமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உதாரணமாக 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலும் இதேவிதமான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததுடன் புதிய உறவுக்கான விருப்பமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தில் உத்தரவாதமும் வேண்டுகோளும் இந்தியாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் அதேவிதமான ஒரு ஆரம்ப வெளிப்பாடே தென்படுகின்ற போதும் உண்மையான எதிர் நடத்தை எவ்விதம் இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இந்தியா சமாதான செயன்முறையில் முக்கியமான ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்தியா இப்பொழுது கடைப்பிடிக்கின்ற நேரடியாகத் தலையிடாதிருக்கின்ற கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றதொனியில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா தனது பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்ட அதேசமயத்தில் புலிகளுடன் சிறந்ததொரு உறவு இல்லாது இந்தியா ஒரு மத்தியஸ்தராக செயற்பட முடியாது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார். இதன் கருத்து இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு முன்னர் புலிகளுடனான உறவு சீர்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அதேசமயம், புலிகளுக்கு எதிராக காணப்படுகின்ற தடை போன்றவற்றின் மத்தியில் உறவு சீர்செய்யப்படுவது சாத்தியமானது அன்று. எனவே, மத்தியஸ்தமும் சாத்தியமானதன்று. அதன் காரணமாகவே பாலசிங்கம் மோதல் தரப்பினர் மீது இந்தியா அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது எனக் கோரி உள்ளார். உண்மையில் பாலசிங்கத்தின் செவ்வியின் அடிப்படை நோக்கமே இந்தியா எதிர்காலத்தில் இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது என வலியுறுத்துவதே எனவும் கருதப்படலாம். பாலசிங்கத்தின் செவ்வியில் போதுமான கவனத்தைப் பெறாத ஆனால் சமாதான முயற்சிகளுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு விடயம் அவர் இந்திய சமஷ்டி பற்றிக் கூறியுள்ள கருத்து ஆகும். 1980 களில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம், அதாவது மாகாண சபை முறைமை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாய் அமைந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய சமஷ்டி போன்றதொரு திட்டம் முன்வைக்கப்பட்டிருக்குமாக இருப்பின் அதனைத் தாம் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்நிலைப்பாடு இன்றும் பொருந்துமா என்பது பற்றி எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. எனினும், இதனை அடிப்படையாகக் கொண்டு புலிகள் இந்திய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு தயாராக உள்ளனர் எனக் கூறப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டிற்கும் புலிகளின் நிலைப்பாட்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடலாம். எனினும் இந்திய முறைமை பூரணமான ஒரு சமஷ்டி அல்ல. அதிலும் ஒற்றையாட்சியில் பண்புகளே அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் யதார்த்தங்கள் காரணமாகவே அது ஒரு சமஷ்டி போன்று செயற்படுகின்றது என்பவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவற்றிற்குப் புறம்பாக பாலசிங்கத்தின் செவ்வி தொடர்பில் ஏற்படுகின்ற முக்கியமானதொரு கேள்வி, இவ்விடயங்கள் ஏன் தற்போது கூறப்பட்டுள்ளன என்பதாகும். ஏனெனில், அது ஒரு விசப்பரீட்சையே எனப்படலாம். குறிப்பாக தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் ராஜீவ்காந்தியின் கொலைக்கான பொறுப்பை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்வது அவ் ஆதரவு தளத்தை பலவீனப்படுத்தி விடக்கூடும். இனி சில அரசியல் தலைவர்கள் புலிகளை நேரடியாக ஆதரிக்க தயங்கக் கூடும். அத்துடன் இச் செய்தியின் காரணமாக மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரிதும் மாறிவிடும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை. எனவேதான், இச் செவ்வியின் உண்மையான நோக்கம். காந்தி கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அல்லது அதற்கு வருத்தம் தெரிவிப்பதோ அல்ல, மாறாக இந்தியா இராணுவ ரீதியாக இலங்கையில் தலையிடக் கூடாது என்று கேட்டுக்கொள்வதே ஆகும் எனக் கருத வேண்டியுள்ளது. இக் கோரிக்கை இந்த நேரத்தில் ஏன் முக்கியமானது? கடந்த தடவை புலிகள் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போது இந்தியாவின் இரகசிய தலையீட்டின் காரணமாகவே அது கைவிடப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது. எனவே, மீண்டுமொரு முறை இம் முயற்சி மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தடையாக இந்தியா அமைந்துவிடக் கூடாது என்ற பாரிய ஒரு கரிசனை புலிகளிடையே காணப்படக் கூடும். அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே தற்போது புலிகள் திடீரென இச் செய்தியை வெளியிட்டுள்ளனர் எனவும் கருதப்படலாம். உண்மையில் இது புலிகளால் முன்னெடுக்கப்படக் கூடிய பாரிய ஒரு நடவடிக்கையின் ஆயத்த செயற்பாடாக இருக்கக் கூடும். நன்றி>தினக்குரல்.

    கொலைகள் செய்வோம் மன்னிக்கமாட்டோம்.

    யாழ் மருத்துவமனைப் படுகொலை. பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்டது, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது. யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர். பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது. "ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை" என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார். இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார். நன்றி : முறிந்தபனை. ---------------------------------------------------------------------------- இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.

    01 July, 2006

    இலங்கைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்.

    அரசின் பொறுப்பற்ற போக்கால் மக்கள் அல்லல்படும் நிலைமை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விசனத்துடன் மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் அதிகரித்து வரும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொது மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோரை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்குட்படுத்துவதற்குத் தவறுவதும் சாதாரணமக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி அவர்களைப் பெரும் அல்லல்பட வைத்துள்ளது என்றும் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறது. லண்டனைத் தளமாகக்கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை கடந்த புதன் கிழமை இலங்கை நிலைவரம் தொடர்பாக விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விட யம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மன்னிப்புச் சபையின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இடம்பெயர்ந்து வாழுகின்ற ஆறு லட் சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வன்செயல் களின் தீவிரம் காரணமாக இலங்கையில் பெரும் கஷ்டங்களுக்கு, வேதனைகளுக்கும் முகம்கொடுத்து வருகிறார்கள் என்றும், அவர் களின் இந்த அவல வாழ்வுக்கு விடுதலைப் புலிகளும், அரசாங்கம் மற்றும் இதர ஆயுதக் குழுக்களுமே காரணம் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை லண்டனிலிருந்து வெளி யிட்டுள்ள பத்திரிகை அறிக்கையொன்றில் குற்றஞ்சாட்டியுள்ளது. வன்செயல்கள் தீவிரமடைந்ததன் காரண மாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதிக்குப் பின்னர், வடக்கு கிழக்கில் மட்டும் 40 ஆயிரம் பேர் இடம்பெயர நேர்ந்திருக்கிறது என்றும் அறிக்கையில் மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டி யிருக்கிறது. பெருகிவரும் வன்செயல்கள், இடம்பெய ரும் மக்கள் அலையைப் புதிதாகக் கிளப்பி யிருக்கிறது. மோதல்கள் காரணமாகவும், பேரலை அனர்த்தத்தாலும் ஏலவே இடம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான மக் கள் மத்தியில் பெரும் பயப்பீதியையும், பாது காப்பற்ற தன்மையையும் இது ஏற்படுத்தி வருகிறது. போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொதுமக் களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள் வோரைக் கண்டறிந்து சட்டத்தின் முன் அவர் களை நிறுத்தித் தண்டனைக்கு உள்ளாவதை உறுதிப்படுத்துவதற்கு அரசு தவறுவதும், மக் கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் பெரும் பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை சர்வதேச மன்னிப்புச் சபை யின் ஆசிய பசுபிக் பணிப் பாளரான பூர்ணா சென் என்பவரே கூறுகிறார். சமீப சில மாதங் களாக நடந்த பாரிய தாக்குதல்கள் ஒவ்வொன் றும், மக்கள் மத்தியில் பெரும் கிலியை உண்டு பண்ணி, வீடு வாசல்களையும், கிராமங்களை யும் விட்டு வெளியேறி வேறு இடங்களில் அபயம் தேடி ஓட வைத்துள்ளன. இவ்வாறு இடம்பெயர்ந்து, முகாம்களி லும் வேறு புகலிடங்களிலும் வாழ்வோர் கூட, வன்செயல்களுக்கு முகம்கொடுக்க வேண் டிய பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அத்தோடு, விடுதலைப் புலிகள் மற்றும் இதர ஆயுதக் குழுக்களினதும் ஏன் இலங்கை பாதுகாப்புப் படை உறுப்பினர்களினதும் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யவர்களாகவும் இருந்து வருகின்றனர். கடந்த ஜூன் 17 ஆம் திகதி, பேசாலையி லுள்ள தோவாலயம் ஒன்றுக்குள் கைக்குண்டு கள் வீசப்பட்ட பொழுது, அங்கு புகலிடம் தேடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். வேறு 44 பேர் காயமடைந்தனர். இந்த கைக் குண்டுத் தாக்குதலை பாதுகாப்புப் படை உறுப்பினரே மேற்கொண்டார். இதனை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருக்கிறார் கள். சாட்சியமும் கூறியிருக்கிறார்கள். ஒரு முறை இடம்பெயர்ந்தோர் மீண்டும் மீண்டும் இடம்பெயரும் சம்பவங்கள் தொடர் வதால், மக்கள் மத்தியில் பாதுகாப்பு இல்லா உணர்வு அதிகரித்து வருவதும் அவதானிக் கப்பட்டிருக்கிறது என்று சர்வதேச மன்னிப் புச் சபை பிறிதொரு அறிக்கையில் தெரிவித் திருக்கிறது. இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங் கத்தினுடையதாகும். ஐந்து லட்சத்துக்கு மேற் பட்ட மக்கள் இவ்வாறு உள்ளூரில் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். நாட்டின் பாது காப்பு நிலைமை மோசமடைந்து வருவ தால், இந்த மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடப்பாடும் அரசுக்கே இருக்கிறது என்று பூர்னா சென் மேலும் தெரிவித்திருக் கிறார் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. நன்றி>உதயன்

    பாலசிங்கத்தின் கூற்று குழப்பகரமாக உள்ளது - கருணாநிதி.

    முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மிகப் பாரியதொரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வு என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருக்கும் கருத்து குழப்பகரமானதாகவும் எதுவுமே தெளிவற்றதாகவும் இருப்பதாக தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கூறியிருக்கிறார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கலாநிதி பாலசிங்கம் தெரிவித்த கருத்துக் குறித்து கருணாநிதியிடம் `இந்து' பத்திரிகையின் செய்தியாளர் நேற்று வெள்ளிக்கிழமை அபிப்பிராயம் கேட்டபோது, பாலசிங்கம் கூறியிருப்பதை விடுதலைப் புலிகளே மறுதலித்திருக்கிறார்கள். அவரது கூற்று குழப்பகரமானது. எதுவுமே தெளிவில்லை என்று பதிலளித்துள்ளார். நன்றி>பதிவு.

    29 June, 2006

    றோவின் திட்டம் வெற்றிபெறுமா ?

    கடந்த இரண்டு நாட்களாக, கலாநிதி பாலசிங்கம் அவர்கள் மறைந்த இந்தியப் பிரதமர் குறித்து இந்திய ஊடகத்திற்கு வழங்கிய பேட்டி பலத்த சர்ச்சைகளை இந்திய - இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், விடுதலைப் புலிகளினால் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களால் ராஜீவ் கொலை தொடர்பாக தெரிவிக்கப்பட்ட அதே விடயங்களையே மீண்டும் பாலசிங்கம் அவர்கள் இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகத்திற்குத் தெரிவித்திருந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்திய ஊடகங்களினால் தமது முன்னாள் பிரதமர் குறித்து எழுப்பப்படாத கரிசனை, பாலசிங்கம் அவர்களின் புதிய பேட்டியினை அடுத்து எழுந்துள்ளமை ஆச்சரியத்தை தருகின்றது. இதற்கு மேலாக, திட்டமிட்ட முறையில் பரப்புரை செய்யப்பட்டுள்ள இந்த செய்தியின் மூலம் இந்திய உளவு நிறுவனமான றோ, தமிழ்த் தேசியத்தினை முடக்குவதற்கும், விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்பதே உண்மை. இனி றோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சதித் திட்டத்தினை சற்று உற்று நோக்குவோம். கடந்த வாரம் ரெகெல்கா இணையத் தளத்தில் வெளியாகிய செய்தியான “விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய உளவு நிறுவனம் றோ புதிய படை ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றது” என்ற செய்தி மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டமை கவனத்தில் கொள்ளப்படவேணடும். அடுத்து கவனிக்கப்பட வேண்டியது, இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது பெருகி வரும் ஆதரவு றோவுக்கு பெரும் சஞ்சலத்தை கொடுத்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு ராஜீவ் மரணத்தை மீண்டும் தூசி தட்டுவதைத் தவிர வேறுவழியில்லை எனவே தான் இந்தச் செய்தி விரைவுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. மேலும், ராஜீவ் காந்தியன் மனைவியின் தலைமையிலான ஆளும் கொங்கிரஸ் கட்சியும் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவுப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்துள்ளமை றோவுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளமை மறுக்கப்பட முடியாத உண்மை. இவ்வளவு காலமும் தமது திட்டத்திற்கு அமைய இடம்பெற்ற சகல நடவடிக்கைகளும் தமது ஆளுகைக்கு அப்பால் சென்றுகொண்டிருப்பதை பொறுக்க முடியாத றோவினர் தமது நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். இதன் முதல் வடிவம்தான் என்.டி.ரீ.வியின் ஜேர்மனிய நிருபர் மூலம் பாலசிங்கம் அவர்களைப் பேட்டிகான வைத்து, திட்டமிட்ட முறையில் - இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களிடையே விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்தினை பரப்பும் வகையிலான செய்தியை வெளியிட்டிருந்தனர். இந்தச் செய்தியை வெளியிட்டதன் மூலம் றோவினர் இந்திய அரசின் நிலைப்பாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்பவற்றினை கணித்து தமது சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தயாராகுகின்றனர். றோவின் திட்டம் என்ன? விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுபடுத்துவதற்கு நெடுங்காலமாக தமது முயற்சிகளை மேற்கொண்டுவரும் றோ பெரும் தோல்விகளையே கண்டுவந்துள்ளது. றோவினர் தமது கடந்த கால முயற்சிகளில், விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரராசாவினை ஈடுபடுத்தி தோல்வியடைந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பிரதேசவாதத்தைக் கிளப்பி முரளீதரனை ஈடுபடுத்தினர். இதிலும் தோல்வியையே றோவினர் சந்தித்தனர். எனவே இவர்களின் புதிய முயற்சியினைச் சற்று நோக்குவோம், • இனிவரும் காலங்களில் தமது ஊடகங்களின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவர். குறிப்பு: இதற்கு உறுதுணையாகச் செயற்படுவதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் பத்தி எழுத்தாளர் கடந்த பல வாரங்களாக புலி ஆதரவுப் பத்திகளை எழுத ஆரம்பித்துள்ளமை கவனிக்கத்தக்கது. • இந்தியா தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தரும். ஆனால், விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும். இந்தியா தமிழ் மக்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தரவள்ளது ஆனால் விடுதலைப்புலிகளின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்ற செய்தியை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட வைக்கலாம் என்பதே றோவின் புதிய திட்டம். • பாலசிங்கம் அவர்களின் பேட்டியினை தளமாக வைத்து செய்யப்படவுள்ள பரப்புரை… தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர்தான் தடையாகவுள்ளார் என்றும் மற்றவர்கள் தீர்விற்கு ஆதரவாகவுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளது என்ற தொனியிலான செய்திகள். எனவே இறுதியாக, தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஊடகங்கள் இவ்வாறான விடயங்களை மிகவும் புத்திசாலித்தனமாக கையாளவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். விழித்துக்கொள் தமிழா! இல்லையேல் விடிவு கிடைக்காது. உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பின்வரும் மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும். andrew.rasiah@gmail.com நன்றி>பதிவு.

    ஈழத்திற்கான அமெரிக்க நாளேட்டின் தீர்வு.

    ஈழத் தீவில் மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான சூழல் மேலோங்கி வருவதாக குறிப்பிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை வரைந்திருக்கும், (Boston Globe)பொஸ்ரன் குளோப் எனப்படும் அமெரிக்க நாளேடு, சிங்களவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் சிறீலங்கா அரசாங்கத்தின் பிடியில் இருந்து, வடக்குக் கிழக்குப் பிரதேச தமிழ் மக்கள் விடுதலை பெற்று, புதிய அரசியலமைப்பின் கீழ், தன்னாட்சியுரிமையுடன் வாழும் சூழலை ஏற்படுத்துவதன் மூலமே, இனநெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என சுட்டிக் காட்டியுள்ளது. சிங்கள தேசம் கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளின் வடுக்கள், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து நீங்காத நிலையில், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும், (Loose Confederation) லூஸ் கொன்பெடரேசன் எனப்படும் தளர்வான கூட்டு இணைப்பாட்சி மூலம் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், பொஸ்ரன் குளோப் நாளேடு அழைப்பு விடுத்துள்ளது. இவ்வாறான ஆட்சியமைப்பு, குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மத்திய அரசாங்கத்தையும், வலுவான அரசியல் அதிகாரங்களையும், தனியான ஆயுதப் படைகளையும் கொண்ட மாநில அரச அமைப்பையும் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

    ஈழத்தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

    இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களின் தன்னாட்சியுடன் வாழ்வதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்று அமெரிக்காவின் "போஸ்டன் குளோப்" ஏடு தெரிவித்துள்ளது. போஸ்டன் குளோப் ஏட்டின் தலையங்கம்: இலங்கை இனப்பிரச்சனையானது இங்கு சிறிது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் 1983 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்துக்கும் சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையேயான வன்முறைகளால் மொத்தல் 70ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிறிங்கா இராணுவத்தின் துணை தளபதி கடந்த திங்கட்கிழமை தற்கொலை குண்டுவெடிப்பினால் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரசாங்கத்துக்கும் போராளிகளான தமிழ்ப் புலிகளுக்கும் இடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு ஏற்கனவே முறிவடையும் நிலைமையை மேலும் சீர்குலைத்து மற்றொரு இரத்தகளரிக்கு இட்டுச் செல்லக் கூடும். உலக நாடுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கொபி அனான், இருதரப்பாரையும் நோர்வேயின் அனுசரணையின் கீழ் அமைதிப் பேச்சுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். "நல்ல சூழ்நிலைகளிலும் மோசமான சூழ்நிலைகளிலும் இலங்கை விடயத்தில் நோர்வே உறுதியாக இருந்துள்ளது" என்று நோர்வே அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் புலிகளின் தலைவர்கள் மீண்டும் போரைத் தொடங்காதவாறு தடுத்து பேச்சுக்கள் மூலம் தீர்வு காண்பதில் குறிப்பிட்ட அளவுக்கு சர்வதேச அனுசரணையாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் செயற்பட முடியும். பழையனவற்றை மறந்து அமைதியை உருவாக்குவதற்காக இருதரப்பினரும் சமரசங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. சிங்களப் பெரும்பான்மையினத்தவரின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு நியாயப்பூர்வமான முறைமைகளைக் கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள், படுகொலைகளால் அரச அதிகாரிகள், பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய தாக்குதல்களால் அது பயங்கரவாத வன்முறையாக்கப்பட்டு இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளானது புறக்கணிக்கப்படும் நிலை உருவானது. அரசியல் வழித் தீர்வு தேவையாக உள்ளது. சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள இலங்கை மத்திய அரசாங்கத்தின் கீழ்படிதலிலிருந்து வடக்கு - கிழக்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ வழிசெய்யக் கூடிய வகையிலான புதிய அரசியல் யாப்பை உள்ளடக்கியதாக இத்தீர்வு இருக்க வேண்டும். தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சர் அண்மையில் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இந்தத் தீர்வு பற்றி மேலோட்டமாகக் கூறியிருந்தார். "தமிழ் புலிகள் பயன்படுத்துகிற வழிமுறைகளை நாம் நிராகரித்த போதிலும், தமிழ் இன மக்களால் எழுப்பப்படுகிற கோரிக்கைகள் நியாயப்பூர்வமானவை. எவர் ஒருவருவரும் தங்களது சொந்த பிரதேசங்களை ஆளுகின்ற உரிமை, தங்களது தாயகத்தை நிர்வகித்தல் என்பவை நியாயப்பூர்வமான கோரிக்கையாகும்" என்று தெரிவித்திருந்தார். தமிழர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தன்னாட்சியுடன் வாழும் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளமையானது அமெரிக்காவின் கொள்கையில் வரவேற்கத்தக்க ஒரு பரிணாம வளர்ச்சியாகும். இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாத்து- வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கு அனுமதித்து செயற்படும் வகையிலான நெகிழ்வான ஒரு கூட்டமைப்பை உருவாக்க நோர்வேயின் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த சிறிலங்கா அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்-

    என்.டிவியின் செய்தி, ஒரு செய்தித்திரிப்பா?

    விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன் றுக்கு வழங்கிய பேட்டி சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றது. ""ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் ஒரு பெரிய வரலாற் றில் மறக்கமுடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று அன்ரன் பாலசிங்கம் கூற, அதற்கு வேறு அர்த்தத்தைக் கொடுத்து, அவ ரது கூற்றைத் திரிபுபடுத்தி போட்டடித்திருக்கிறது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம். பாலசிங்கம் கூறிய மேற்படி கருத்துக்களை வைத்துக்கொண்டு ராஜீவ் கொலைக்கான பொறுப்பை, இப்போது பதினைந்து ஆண்டு கள் கழித்து புலிகள் முதல் தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளனர், அதற்காகத் தங்களை மன்னிக்கும்படி இந்தியாவிடமும், இந்திய மக்களிடமும் புலிகள் மன்றாடுகின்றார்கள் என்றெல்லாம் சாரப் பட தனது கருத்தை மதியுரைஞர் பாலாவின் கருத்தாகக் குறிப் பிட்டு பிரசாரம் செய்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம். ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலா தெரி வித்த முக்கிய கருத்தை அந்த நிறுவனம் ஒளிபரப்பவில்லை. ""ராஜீவ் கொலையை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தை தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்.'' என்று பாலா குறிப்பிட்டதை அமுக்கிவிட்ட அந்த நிறுவனம், பாலா தெரி விக்காத கூற்றுக்கு பதில் கருத்துக்களை புலிகளுக்கு எதிரான பிரமுகர்களைத் தேடிப்பிடித்து அவர்கள் மூலம் வெளிப்படுத் தித் தனது திருகுதாள வேலையை கனகச்சிதமாக முன்னெடுத் திருக்கின்றது. ""கடந்த கால சம்பவங்களை மறந்து, விடயங்களைத் தாராள மனப்பான்மையோடு புதிய போக்கில் அணுகுமாறு இந்திய அரசையும், இந்திய மக்களையும் நாம் வேண்டுகின்றோம்.'' என்று ஈழத்தில் அல்லல்படும் தமிழர்களின் சார்பில், ஈழத் தமி ழர்களின் ஏக அதிகாரபூர்வ பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக நின்று மதியுரைஞர் பாலசிங்கம் அழைப்பு விடுக்க அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு புலிகள் மீது பகையுறவும், விரோதப் போக்கும் கொண்ட இந்தியப் பத்திரிகையாளர் ராம் மற்றும் புலனாய்வாளர் கார்த்திகேயன் போன்றோரைத் தேடிப் பிடித்து அந்த சமரச முயற்சிக்கு முளையிலேயே ஆப்பு வைக் கும் திருவிளையா டலை நிறைவேற்றியிருக்கிறது இந்தியத் தரப்பின் ஊதுகுழல் நிறுவனம். மதியுரைஞர் பாலா வழங்கிய சுமார் ஒரு மணி நேரப் பேட்டியில் சில நிமிடங்களை மட்டும் "முண்டத்தை' மட்டும் ஒளிபரப் பிய அந்த நிறுவனம் அதை முழுமையாக ஒளிபரப்புமானால் அது நிச்சயம் ஈழத் தமிழர்களின் அவல நிலை குறித்து இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் நெஞ்சை ஆழமாகச் சென்று தைக்கும் தொடும் என்ற நம்பிக்கை தமிழர் தரப்புக்கு உண்டு. மதியுரைஞர் பாலாவின் கருத்தை எடுத்தெறியும் விதத்தில் அந்தச் செவ்வியை ஒட்டி கருத்து வெளியிட்ட இந்திய வெளி விவகார அமைச்சர் ஆனந்த் சர்மாவின் பதில்கள் குறித்து அழு வதா, சிரிப்பதா என்பது தெரியாமல் சஞ்சலப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள். ""இந்தியாவைப் பொறுத்தவரை அது இலங்கையில் அமைதி, ஸ்திரம், ஐக்கியம் ஆகியவற்றையே விரும்புகின்றது.'' என்று வலியுறுத்திக் கோரிய இந்திய இணை அமைச்சரிடம் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டது. ""இலங்கைப் பிரச்சினை இவ்வளவு மோசமான வடிவம் எடுக்க முன்னர் ஆரம்பத்தில் புலிகளுக்கு இந்தியாவே பயிற்சியளித் தது என்ற சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை பாலசிங்கமும் மீண்டும் சுட்டிக்காட்டியிருக்கின்றாரே?'' என்ற கேள்விக்கு இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அளித்த பதில் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளும், ஆச்சரியத்துக்குள் ளும் மூழ்கடித்தது. முதலாவதாக ""இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் யார்? அவர் புலி களின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா என்பது எங்களுக்குத் தெரியாது.'' என்று இந்தியத் தரப்பில், அதுவும் வெளிவிவ காரத்துக்குப் பொறுப்பான இணை அமைச்சர் பதவியிலிருக் கும் ஒருவர் கூறியிருப்பது வியப்புக் குரியது. அன்ரன் பாலசிங்கம் புலிகளின் தத்துவாசிரியர். மதியுரை ஞர், பேச்சாளர். அமைதி முயற்சிகளுக்கான புலிகளின் பேச்சுக் குழுவின் தலைவர். இந்தியா உட்பட சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் புலிகளின் சார்பில் பல மட்டங்களில் தொடர்பு கொண்டு பங்காற்றியவர். தலைவர் பிரபாகரன் முன்பாகப் பத் திரிகையாளர்கள் திரண்டிருந்த சமயம் தலைவரையும் வைத் துக்கொண்டு ""தலைவர் பிரபாகரன் கூறினாலும் நான் கூறி னாலும் ஒன்றுதான்'' எனத் தலைவரின் குரலாகப் பகிரங்கமாக ஒலித்தவர்; ஒலிப்பவர். அவரைப் பார்த்து ""அவர் யார்? புலிகளின் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியா அவர் என்பது தெரியாது.'' என இந்திய அமைச் சர் கூறுவது அவரது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில் கேலிக் கூத்தானது. எண்பதுகளின் நடுப்பகுதியில் புலிகள் உட்பட அனைத்து ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கும், போராளிகள் அமைப்புகளுக் கும் இந்தியா தனது மண்ணில் ஆயுதப் பயிற்சி கொடுத்துத் தூண்டி விட்டது என்பது சர்வதேசம் அறிந்த பரகசியம். அந்தப் பயிற்சி வழங்கப்பட்ட காலத்திலேயே புலிகளின் மதியுரைஞ ராகவும், பேச்சாளராகவும் இருந்தவர் பாலசிங்கம். அவர் யார் என்று இப்போது கேட்கும் இணை அமைச்சர் ஆனந்த் சர்மா அப்போது இந்திய அரசியலிலேயே ஒரு பிரமுகராக இருந் திருப்பாரோ என்பது தெரியவில்லை. அந்தக் கேள்வியில் கேட்கப்பட்டது போல ஈழத் தமிழ்ப் போரா ளிகளுக்குப் பயிற்சி கொடுத்துத் தூண்டிவிட்டு இலங்கைத் தீவு, இரத்தத் தீவாக மாறுவதற்குக் காரணமாக இருந்த மூல சக்திகளில் இந்தியாவும் ஒன்று. அந்தப் பொறுப்பை அப்படியே பொய் என்று மறுத்திருக் கிறார் இந்திய அமைச்சர் ஆனந்த் சர்மா. இந்தியா ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களும், பயிற் சியும் வழங்கியது சரியா, தவறா என்பது வேறு விடயம். ஆனால், அப்படிச் செய்துவிட்டு, அதை மறந்து, இப்போது மறுத்து, ""இலங்கையில் அமைதி,ஸ்திரம், ஐக்கியம் ஆகிய வற்றையே இந்தியா விரும்புகின்றது.'' என்று உருத்திராட்சப் பூனை போல இந்தியத் தரப்பு பேச முடியுமானால் ""கடந்த காலத்தை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் புதிய போக் கில் நல்லுறுவு பேண ஈழத் தமிழர்களும், புலிகளும் விரும்புகின்றார்கள்'' என்று புலிகளின் பிரதிநிதி கூறுவதில் தவறே தும் இல்லை. அப்படி எதிர்பார்ப்பது நியாயமானதும் கூட. நன்றி>உதயன்.

    27 June, 2006

    கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட புலிகள் தயார்.

    ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள் பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் அனுதாப உணர்வு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. "தனிப்பட்ட நலன்கள் அடிப்படையில் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கும் திமுக அரசுக்கும் உறவுகள் நெருக்கமாக இருக்காது. ஆனால் மக்கள் நலனை வலுவாகக் கட்டியெழுப்பப்படும் போது நிச்சயமாக நாங்கள் நட்புக்கரம் நீட்டுவோம்" என்று தெரிவித்தார். அமைதிப் பேச்சை நடத்த இந்தியா செல்லவும் தயார் என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டத்தைப் பற்றிக் கேட்டபோது இந்தியா விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருக்கும் பட்சத்தில் நாங்கள் அங்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால் நிலைமைகள் மாறும் வாய்ப்புள்ளது என்றார் அவர். "சிங்கள அரசுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். தங்களது அடிப்படை உரிமைக்காகப் போராடும் தமிழர்களின் கோரிக்கையைத் தார்மீக ரீதியாக இந்தியா ஆதரிக்க முடியாது என்று சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இந்தியா உதவியுள்ளது. குறிப்பாக பங்ளாதேஷ் போராட்டத்தை ஆதரித்து உதவியும் உள்ளது. "இலங்கை அரசாங்கம் இந்தியாவின் ஆதரவை வைத்துக்கொண்டுதான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போல சிங்களப் பத்திரிகைகள் அறிக்கைகளை விடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்பதையும் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கம் எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏற்று அங்கீகரிப்பதுடன் எங்களுக்கு அதன் தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டிக்க வேண்டும். இதுவே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் தமிழ் மக்களின் விருப்பமுமாகும். இலங்கை அரசாங்கத்தின் நயவஞ்சகச் செயலை இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நாள் வந்தே தீரும். ஈழத் தமிழ் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல வழி பிறக்கும் என்று சு.ப.தமிழ்ச்செல்வன் உறுதியோடு தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு.