21 January, 2007

சிறார் படைச்சேர்ப்பில் துணை இராணுவக்குழுவினருடன் அரசு:

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் சிறார்களை தமது படையில் சேர்ப்பதனை ஊக்கிவிப்பதன் மூலம் சிறிலங்கா அரசு சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக அமெரிக்கா நியூயோர்க்கை தளமாகக்கொண்டு இயங்கும் கியூமன் றைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் அமைப்பு சிறிலங்கா அரசை சாடியுள்ளது. இந்த அமைப்பு தனது 100 பக்கங்களை கொண்ட அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை (24.01.07) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்படும் சிறார்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்பவர்கள். அந்தப் பகுதிகளில் மிக அதிகளவில் இராணுவ மற்றும் காவல்துறையினரின் சோதனை நிலைகள், முகாம்கள் என்பன உள்ளன. அரசின் உதவிகள் இல்லாது எந்த ஆயுதக்குழுக்களும் இவ்வளவு பெரும் தொகையான சிறார்களை கடத்தி நன்கு வடிவமைக்கப்பட்ட முகாம்களில் பயிற்சிகளை கொடுக்க முடியாது. சிறிலங்கா அரசு இது தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. கடந்த வருடத்தில் மட்டும் 200 சிறார்கள் கருணா குழுவினரால் கிழக்கில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டதை விட மூன்று மடங்குகள் அதிகம் எனக் கூறப்படுகின்றது. இணைந்த குற்றம்- கருணா குழுவின் கடத்தல் மற்றும் சிறார் படைச்சேர்ப்பில் அரசின் மறைமுக ஆதரவு என்னும் தலைப்பிலான இந்த அறிக்கையில் வடக்கு - கிழக்கில் பாதிக்கப்பட்ட பெற்றோரினதும், சிறார்களினதும் விரிவான நேர்காணல்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருபது வருடப் போரில் விடுதலைப் புலிகளும் சிறார்களை படையில் சேர்த்துள்ளனர். ஆனால் தற்போது சிறிலங்கா அரசு தனது துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினருடன் சேர்ந்து சிறார் படைச்சேர்ப்பை மேற்கொள்கின்றது. கடந்த வருடங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் சிறிலங்காப் படைகள் கருணா குழுவினருடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டு வருவது தெரியவந்துள்ளது. சிறிலங்காவின் 23 ஆவது படைப்பிரிவின் கீழ் உள்ள வெலிகந்தைக்கு மேற்காக 10 கி.மீ தூரத்தில் 4 தொடக்கம் 5 முகாம்களை கருணா குழுவினர் அமைத்துள்ளனர். இந்த 23 ஆவது படைப்பிரிவுக்கு பிரிக்கேடியர் தயா ரட்னாயக்க கட்டளைத் தளபதியாக பணியாற்றி வருகின்றார். கடத்தப்படும் நூற்றுக்கணக்கான சிறார்களை அரசின் அனுமதியின்றி படையினரின் பெருமளவான சோதனைச் சாவடிகளும், முகாம்களும் உள்ள பகுதியால் கருணா குழுவினரால் கொண்டு செல்ல முடியாது. இதனை அரசும் கருணா குழுவினரும் மறுத்து வந்தாலும் அங்கு வாழும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அரச படைகளுடன் கருணா குழுவினர் இணைந்து செயற்படுவதை தாம் அவதானித்ததாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறைப் பகுதியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர். கருணா குழுவினர் படையினருடன் இணைந்து அவர்களின் சோதனைச் சாவடியில் நின்று தமது அடையாள அட்டைகளை பரிசோதனை செய்வதுடன் அரச கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அரசு எவ்வாறு நடத்துகின்றது என கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் நாள் நாம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் எழுதி அனுப்பியிருந்தோம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் வரை அரச செயலகம் அதற்குரிய பதிலை அனுப்பவில்லை. கருணா குழுவினரும் விடுதலைப்புலிகளும் சிறார்களை படையில் சேர்ப்பதனை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளை கேட்டுள்ளோம். மேலும் கருணா குழுவினர் மூலம் சிறிலாங்கா அரசு மேற்கொள்ளும் கடத்தல்களையும், சிறார் படைச்சேர்ப்பையும் நிறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

17 January, 2007

புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து இருகட்சிகளும் விலக வேண்டாம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் வில வேண்டாம் என இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து சுதந்திர கட்சிகும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விலகும் என எதிர்வு கூறப்பட்டிரந்தது. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் ஒப்பந்தம் கிழத்தெறியப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதார பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் சுதந்திர கட்சியுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன இதேவேளை சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தமானது இனப்பிரச்சினை தீர்விற்கான அடிப்படை என்றும் அதனை செயலற்றதாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இந்த இரு நாடுகளும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆரசாங்கத்தை பலப்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதை விடுத்து இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமையளித்து செயல்படுமாறும் இந்தநாடுள் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளன. எனினும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணித்து நாட்டை நிர்வகிக்க முடியாது என்றும் அரசாங்கத்தை பலமுள்ளதாக மாற்றினால் மட்டுமே எந்த விதமான நடவடிக்கையினையும் முன்னெடுக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச தனக்கு நெருங்கிவர்களிடம் தெரிவித்துள்ளார் இதன் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாக ஆகிய நாடுகளின் எதிர்பார்பிற்கு முரணான வகையில் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தி தனது அரசாங்கத்தை பலப்படுத்தும் முயற்ச்சகளை மகிந்த ராஜபக்ச திட்டமிட்டவாறு தொடர்வார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளத நன்றி>பதிவு.

09 September, 2006

வைகோவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு.

கேள்வி: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு எப்படி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்? பதில்: காலப்போக்கில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். கேள்வி: இடையில் இந்தியா தீர்வுத்திட்டம் ஒன்று கொடுத்ததாக வெளியான தகவல்; குறித்து? பதில்: இறுதியில் நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தத்தீர்வு அமையும் என நினைக்கிறோம். அப்படி இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதைத் தவிர இவ்விடயம் குறித்து விசேடமாக மேற்கொண்டு கூறுவதற்கு ஒன்றுமில்லை. கேள்வி: தமிழக முதல்வர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் உட்பட மற்றைய தமிழகத் தலைவர்களைச் சந்திக்கப் போகிறீர்களா? பதில்: இரண்டொரு நாட்களில் தமிழகத் தலைவர்கள் அனைவரையும் சந்திப்போம். அதேநேரம் முதல்வரை சந்திக்க நீங்கள் நேரம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க சம்பந்தன் மறுத்துவிட்டார். தமிழகத்தில் உள்ள இதர அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரையும் தாம் இரண்டொரு நாட்களில் சந்திப்பு பேசவிருப்பதாகவும் அவர் கூறினார். அனுராவுக்கு வைகோ கண்டனம் இதேவேளை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சி அலுவலக வாயில் வரை வந்து வழியனுப்பி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் முடிந்தவுடன் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடக்கலாம். சிங்கள அரசின் இனவெறியும் தமிழர்களுக்கு எதிரான அராஜக மனப்பான்மையும் சிறிலங்கா அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் வாக்குமூலத்தில் வெளிப்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் நிருபாமா ராவ் தனது இராஜிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் செயற்பட்டுள்ளார். அதற்காக அவரைக் குறை கூறிய விதம் கண்டனத்துக்குரிய என்றார். வைகோவுடனான சந்திப்பில் மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி சந்திப்பது என்றும் அதைத் தொடர்ந்து அன்று மாலையோ அல்லது 9 ஆம் திகதி காலையிலோ இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவது என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அத்திட்டத்தின் படி தமிழக முதல்வரைச் சந்திக்க இயலவில்லை என்றும் தெரிகிறது. தமிழக முதல்வரைச் சந்திக்க முன் அனுமதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாறுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் வைகோ மூலமாக பிரதமரைச் சந்திக்கும் அவர்களது திட்டம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் அதிருப்தி அடைந்ததாகவம் இதன் விளைவாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தள்ளிப்போட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி மதியம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடிவு எடுத்திருப்பதாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. வைகோ பிரதமரின் தனிச்செயலாளருடன் பேசி இச்சந்திப்புக்கு அனுமதி பெற்றுவிட்டதாகவும் 8 ஆம் திகதி மாலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் சந்திப்பார் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் மாகராஸ்டிரா குண்டு வெடிப்புச் சம்பவம் மற்றும் கியூபா பயணம் குறித்த கடைசி நிமிட ஏற்பாடுகள் தொடர்பிலும் பிரதமருடனான சந்திப்பு கைகழுவப்பட்டதாககத் தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரைவில் தாம் தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழக முதல்வரைச் சந்திப்பது உறுதி என்றும் கூறியுள்ளார். தமிழகத் தலைவர்களைச் சந்தித்த பிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடில்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தேசிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஆதாரம்: வீரகேசரி.

04 September, 2006

"தரகு" வேலைக்கு முஸ்லீம்கள்.

ஐ.தே.கவுக்கும் அரசுக்கும் இடையே "தரகு" வேலை பார்க்க ஹக்கீமுக்கு இந்தியா அறிவுரை . சிறிலங்கா அரசாங்கத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இந்தியா அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவை கடந்த சனிக்கிழமை ஹக்கீம் சந்தித்துப் பேசிய போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் ஏற்கனவே 10 முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதால் மற்றொரு முஸ்லிம் அமைச்சர் தேவைப்படவில்லை என்று ஹக்கீம் பதிலளித்துள்ளார். மேலும் ஹக்கீமின் அண்மைய புதுடில்லி பயணத்தின் போது தென்னிந்திய முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்தும் நிருபமா ராவிடம் இச்சந்திப்பில் விளக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

03 September, 2006

பருத்தித்துறை கடற்சமரில் நடந்தது என்ன?-இக்பால் அத்தாஸ.

பருத்தித்துறை கடற்சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 80 போராளிகள் உயிரிழந்ததாக சிறிலங்கா அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்படுவது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் வார ஏட்டில் கடற்சமர் குறித்து எழுதிய கட்டுரையில் இதனை இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை கடற்சமர் குறித்து அக்கட்டுரையில் இக்பால் அத்தாஸ் மேலும் கூறியதாவது: - சிறிலங்கா கடற்படை மீது அல்லது கடற்படைக் கப்பல் மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு அது தவறிவிட்டதா? - திருகோணமலையிலிருந்து வடக்கு கிழக்கு கடற்பிரதேசம் வழியாகத்தான் இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கான விநியோகப்பாதை அமைந்துள்ளது வெளிப்படையான ஒன்று. அப்படியான நிலையில் இந்த விநியோகப்பாதையை விடுதலைப் புலிகள் எந்த விலை கொடுத்தேனும் சீர்குலைக்க நினைத்தால் யாழ். குடாநாட்டில் உள்ள 40 ஆயிரம் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் நிலை என்ன? - கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் நடத்திய கடற்சமர் ஒரு திசை திருப்பும் நடவடிக்கையா? ஆயுதங்களை நடுக்கடலில் இறக்கினரா? - சிறிலங்கா கடற்படையினரது எதிர்தாக்குதல் வலிமையை சோதிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையா அது? - விடுதலைப் புலிகளின் படகுகள் யாழ். குடாவில் ஏதேனும் ஒரு பகுதியில் போராளிகளை தாக்குதல் நடவடிக்கைக்காக இறக்கிவிட்டனவா? என்று அதில் இக்பால் அத்தாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நன்றி>புதினம்.

பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை -சிறீலங்கா

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். நாராயணனுடனான பசில் ராஜபக்ஸவின் சந்திப்பு மிகவும் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் இடம்பெற்றதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்தவையென தான் கருதும் குறிப்பிட்ட சில விடயங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெளிவுபடுத்த விரும்பியதாக டில்லியிலும் கொழும்பிலுமுள்ள தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஐ.ஏ.என்.எஸ். செய்தி வெளியிட்டிருக்கிறது. இலங்கைக்கான முன்னாள் பாகிஸ்தானியத் தூதுவர் பசீர் வலி முகமத் கடந்த ஆகஸ்ட் 14 இல் கொழும்பில் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியிருந்தார். அதன் பின்னர் கொழும்புக்கும் இஸ்லாமாபாத்திற்கும் இடையிலான இராணுவ ரீதியிலான பிணைப்புகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. அதேசமயம் வட, கிழக்கில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின்போது விமானப் படையின் ஜெற் விமானங்களில் பாகிஸ்தான் விமானிகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதில் உண்மை இல்லையென ராஜபக்ஸ கூறியுள்ளார். அத்துடன், சம்பூரைக் கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமெனவும் ஏனெனில், அந்தப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது இலங்கையின் பாரிய கடற்படைத்தளமான திருமலைத் தளத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார். இராணுவ வரைபடத்தைக்காட்டி விளக்கமளித்துள்ள ராஜபக்ஸ, சம்பூரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கொழும்புக்கு மிக முக்கியமானதென்றும் விபரித்திருக்கிறார். இந்த நடவடிக்கை பூர்த்தியடைந்தால் புலிகள் விரும்பினால் அவர்களுடன் பேசுவதற்கு இலங்கை தயாரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பூர் பிராந்தியத்தில் உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில் பசில் ராஜபக்ஸவின் டில்லிப் பயணம் இடம்பெற்றிருக்கிறது. இந்த மோதல்களில் இரு தரப்பிற்கும் பாரிய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் பிரதானமாக தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2005 டிசம்பர் தொடக்கம் ஜூலை 2006 வரை 169 பாதுகாப்புப் படையினரை புலிகள் கொன்றுள்ளதாகவும் பாரிய மோதல்கள் வெடித்தபின் புலிகளுக்கு எதிரான மோதலில் 100 படையினர் வரை இறந்துள்ளதாகவும் ராஜபகஸ சுட்டிக்காட்டியுள்ளார். பகிரங்க யுத்தத்திலும் பார்க்க முன்னர் புலிகள் கையாண்ட முறைமையினால் இரண்டு, மூன்று, நான்கு என்று படைவீரர்களின் இறப்பு அதிகளவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கொழும்புக்கு இந்தியா மற்றும் ஏனைய நாடுகளினால் கூறப்பட்டதென்றும் ஆனால், இதே ஆலோசனை புலிகளுக்கு ஒருபோதும் சொல்லப்படவில்லையெனவும் ராஜபக்ஸ புகார் தெரிவித்திருக்கிறார். தற்போதைய மோதலானது முழு அளவிலான யுத்தத்துக்கு வழிவகுத்துவிடும் ஆபத்து இருப்பது குறித்து பசில் ராஜபக்ஸவும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் முக்கியஸ்தராக இருக்கும் மற்றொரு சகோதரரான கோத்தபாய ராஜபக்ஸவும் மிகத்தெளிவாக இருக்கின்றனரென்று இந்திய அதிகாரிகள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சம்பூரில் தமது கட்டுப்பாட்டை இழக்கும்போது விடுதலைப் புலிகள் திரும்பத் தாக்கும் சாத்தியம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருதுவதாக தென்படுகிறது. பசில் ராஜபக்ஸ தெரிவித்தவற்றை பொறுமையாக கேட்டு அறிந்து கொண்ட இந்திய அதிகாரிகள், அதேசமயம் யுத்தத்தின் மூலம் இலங்கை மோதலுக்கு இறுதித் தீர்வொன்றை ஒருபோதுமே காணமுடியாதென்பதை மிகப்பண்பட்ட முறையில் அவருக்கு கூறியுள்ளனர். அத்துடன், சம்பூரை கைப்பற்றுவதால் இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மோதல் மேலும் அதிகரிக்கும் என்றே சர்வதேச சமூகமும் அதிகளவு கவலை கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக கொழும்பு கூறும் நியாயத்தை விடுதலைப் புலிகள் போலியான, ஏமாற்று நடவடிக்கையென வர்ணித்துள்ளனர். ஜூலையில் இலங்கை இராணுவம் தாக்குதலை ஆரம்பித்த பின் தாங்கள் சம்பூர் தளத்திலிருந்து திருமலைத் தளத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். நன்றி>புதினம்.

02 September, 2006

புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடங்கியது

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியது சிறிலங்கா அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மற்றும் கொழும்பில் உள்ள வங்கிகளுக்கு புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சென்ற போதுதான் வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட விடயம் தெரியவந்தது. சிறிலங்காவின் மத்திய வங்கியின் உத்தரவின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழக நிர்வாக இயக்குநர லோறன்ஸ் திலகர் இதனை உறுதி செய்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரை பணத்தை பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லோறன்ஸ் திலகர் கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு வங்கிக் கணக்குகள் முடக்கம் குறித்த எதுவித முன் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் லோறன்ஸ் திலகர் கூறினார். இத்தகைய நடவடிக்கையால் தற்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான பணிகளும் ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் பாதிக்கப்படும் என்றும் லோறன்ஸ் திலகர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 20 மில்லியன் தொகை இருருந்துள்ளது. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் வங்கிகளுக்குச் சென்று அரசாங்கத்தின் உத்தரவு குறித்தும் தங்களது காசோலைகளை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சனவரி மாதம் சிறிலங்கா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்ற போது இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் புனர்வாழ்வுக் கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் காப்ரலிடம் விளக்கம் கேட்க தமிழர் புனர்வாழ்வுக் கழக சட்ட ஆலோசகர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். நன்றி>புதினம்.

வைகோ பேசியது சரியா தவறா?- க.சுப்பு

புலிகளை தீவிரவாதிகள் என்கிற காங்கிரஸ் கட்சி தீவிரவாத அமைப்புக்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா? தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியது சரியா? தவறா? என்ற தலைப்பில்" குமுதம் (06.09.06) இதழில் (பக் 20-24) வரை தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இந்திய அமைச்சருமான ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சியின் ஆலோசகர் க. சுப்பு ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் க. சுப்பு கூறியுள்ளதாவது: அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ வெளிப்படுத்திய உணர்வில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தமிழர்கள் கண்மூடித்தனமாக அடக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இலங்கை அரசிடமிருந்து எந்தப் பொறுப்பான நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஆனால் அங்கு வாழ்கிற கடைசித்தமிழன் வரை கொன்று குவிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் தாண்டவமாடுகிறது. இந்தக் கொடுமைகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் வைகோ உள்பட எம் போன்றவர்களின் கருத்து. இதில் என்ன தவறு? இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஒரே ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள்தான் என்பது வைகோவின் கருத்து. எனவே அதற்கு தார்மீக ஆதரவு தருகிறார். விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பினர் என்கின்றனர் காங்கிரஸ்காரர்கள். ஆனால் அசாமிலும் நாகாலாந்திலும் இருந்த தீவிரவாத அமைப்புகளுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லையா? இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினால், இந்தியாவில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுகிறார்கள் என்கிறார்கள். கைது செய்துவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். எதிரிகளைக் கொல்ல ஏ.கே. 47 துப்பாக்கியையும் ஏந்துவோம் என்று ஒருவர் பேசினால் உடனே ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு அவர் சுட்டுத் தள்ளப் போகிறார் என்பது அர்த்தம் அல்ல. நமக்குள் இருக்கும் உணர்வுகளுக்கு வலிமை சேர்க்கும் வார்த்தைகளாகத்தான் அதை எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய தீவிரவாதத்தை தூக்கிப் பிடிப்பதாகக் கருதக் கூடாது. பகுத்தறிவுப் பிரச்சாரம் தமிழகத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது பாரதிதாசன் பாடினார், சீரங்க நாதரையும தில்லை நடராஜனையும பீரங்கி வைத்து பிளந்தெறிவது எந்தக் காலம்? இந்த வரிகளை கருணாநிதி உள்பட எல்லோரும் அன்று தெருத்தெருவாகச் சொல்லி அலைந்தார்கள், யாரும் பாரதிதாசனைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவது தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும் என்றார் க. சுப்பு. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அமைச்சர் ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் முதல் தரக் குடிமக்களாகக் கருதப்பட வெண்டும்- சிங்கள மக்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்றும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே ஒழிய யாரையும் மிரட்டுகிற பாணியிலோ, சவால் விடும் பாணியிலோ பேசுவது பிரச்சனையைத் திரிக்க உதவாது என்பதே மக்கள் கருத்து கூறியுள்ளார். மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பிலான காங்கிரஸ் கட்சியின் விமர்சன நிலைப்பாட்டையும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்.

01 September, 2006

சிறிதுநேரத்தில் சென்னையில் ஆரம்பம்.

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்தும் இனப்படுகொலையைக் கண்டித்து சென்னையில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பில் ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ம.தி.மு.க. சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு கண்டனப் பேரணி சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து புறப்படுகிறது. தொடர்ந்து அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியை சென்று சேரும். அங்கு பேரணியின் நிறைவில் வைகோ பேசுகிறார். இந்த கண்டன பேரணியில் அவைத்தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ந.இராமச்சந்திரன், நாசரேத்துரை, மல்லை சி.இ.சத்யா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னணியினரும், கழக தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

நோர்வேக்கு, சிறீலங்கா எச்சரிக்கை.

சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராக செயற்பட வந்த நோர்வே இலங்கையின் உள்விவகாரங்களில அத்துமீறி தலையீடு செய்யத் தலைப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருக்கும் அரசாங்கம் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எச்சரித்துள்ளது. விலகிச் செல்லும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன், நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌர் ஆகியோர் தமது பணிகளை மறந்து அரசாங்கத்தின்மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், தேசிய பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகள் குறித்து கடும் விசனத்தை வெளிப்படுத்தினர். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; "அண்மைக்காலமாக நோர்வே அதன் போக்கை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையாளராகவே நாம் அந்த நாட்டை அழைத்திருந்தோம். தென்னிலங்கையில் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் நோர்வேயின் அனுசரணையை தொடர இடமளித்தது. இன்று நோர்வே எல்லை மீறிச் செயற்படத் தொடங்கியுள்ளது. இறைமை கொண்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் தோரணையில் அதிகாரம் செலுத்த நோர்வே முயற்சித்து வருகின்றது. இதேவேளை, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் வூல்ப் ஹென்றிக்சன் தமது பதவியிலிருந்து விலகிச் செல்லும் நேரத்தில் அரசு மீது சேறு பூசி விட்டுச் செல்லும் முயற்சியொன்றில் ஈடுபட்டிருக்கின்றார். மூதூரில் மனிதாபிமானப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலைகளுக்கு அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இப்படுகொலைகள் தொடர்பாக மரண விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இன்னமும் முடிவடையாத சூழ்நிலையில் எத்தகைய ஆதாரத்தை வைத்துக் கொண்டு அரசு மீது பழிசுமத்துவதற்கு ஹென்றிக்சன் முன்வந்தார் எனக் கேட்கின்றோம். அவரின் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்று முழுதாக நிராகரிக்கின்றது. ஹென்றிக்சன் மிக மோசமான விதத்திலும் பொறுப்பற்ற ரீதியிலும் நடந்து கொண்டிருப்பதாகவே நாம் காண்கின்றோம். இராணுவத் தளபதி மீதான படுகொலை முயற்சி, மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்க படுகொலை, வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் படுகொலை செய்யப்பட்டமை, கெப்பிற்றிகொல்லாவ படுகொலைகள் என்பவை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு இரு மாதங்கள் காலமெடுத்தன. ஆனால், நிவாரணப் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை தொடர்பாக விசாரணை ஆரம்பித்து 20 நாட்கள் கூட நிறைவடையவில்லை. முழுமையான விபரங்கள் எதனையும் அறிந்து கொள்ளாமல் அரசு மீது இப்படியானதொரு பழியைச் சுமத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாவிலாறு சம்பவம், மூதூர், தோப்பூர் சம்பவங்கள் குறித்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கண்டுகொள்ளாமலிருப்பது வியப்புக்குரியதாகவே உள்ளது." அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது; "நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌரின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயம் பற்றிய தகவல் புதுமையான ஒன்றாகவே தெரிகிறது. ஜனாதிபதி தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டே லண்டன் சென்றுள்ளார். நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர் உட்பட அரச உயர்மட்டத்தினரைச் சந்திப்பார். இதனை நாம் மறுக்கவில்லை. இது வழமையாக நடக்கக் கூடிய விடயமாகும். ஆனால், பிரிட்டிஷ் பிரதமரிடம் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தரக் கோரவிருப்பதாக தெரிவித்திருப்பதுதான் வியப்பானதாக உள்ளது. ஜனாதிபதி தமது லண்டன் விஜயம் பற்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. ஏனெனில், இது உத்தியோகபூர்வ விஜயமல்ல. அவரது தனிப்பட்ட பயணமே ஆகும். பௌர் சோதிடம் கூறுவதிலும் வல்லவர் என்பது இப்போது தான் தெரிகிறது. நோர்வே நடவடிக்கைகளில் இன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடருமானால், அரசாங்கம் காத்திரமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். இது குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவது குறித்து ஆராயப்பட்டு வரகின்றது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த விடயங்கள் குறித்து முடிவொன்று எடுக்கப்படலாம். நன்றி>புதினம்.

கீழ்த்தரமான இராஜதந்திரத்தை மேற்கொள்ளுகிறது இந்தியா.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கீழ்த்தரமான இராஜதந்திர செயற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது: தற்போதைய சமரில் நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய யாழ். முற்றுகையின் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமது இராணுவத்தினரை மீட்கவோ யுத்த நிறுத்தத்தை உருவாக்கவோ முன்வரவில்லை. சிறிலங்கா நட்பு சக்திகளோடு இராணுவ உறவை முன்னெடுத்து பயங்கரவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்றார் அவர். ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது: தற்போது யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. இவ்வளவு கீழ்த்தரமான இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்வது ஆச்சரியமளிக்கிறது. பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கேட்டுக்கொள்வது எமக்கு ஆச்சரியமளிக்கிறது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை குறித்து ஊக்கப்படுத்துகின்றன. அப்படியான வலுவுடன் விடுதலைப் புலிகள் இருப்பார்களேயானால் மாவிலாறு மோதலுக்குப் பின்னர் ஒரு இஞ்ச் நிலத்தை கூட அவர்களால் ஏன் பிடிக்க முடியவில்லை.? மூதூர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவம்தான் காரணம் என்று பணி விலகிச் சென்று உள்ள இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. கண்காணிப்புக் குழுவினரது செயற்பாடுகள் மீது நாம் சந்தேகம் கொள்கிறோம். யுத்த நிறுத்த கண்காணிப்பு குறித்து அடிப்படையை அவர்கள் அறிந்துதான் இத்தகைய கருத்துகளை வெளியிடுகிறர்களா? அவர்களது அனுபவமற்ற தொழிற்முறையானது இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றார் அத்துரலிய ரத்ன தேரர். நன்றி>புதினம்.

31 August, 2006

சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி.

மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியிருப்பதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறது. மூதூர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையிலே அப்பகுதியில் எவரையும் அனுமதிக்கவில்லை. மூதூர் படுகொலைக்கு இராணுவம்தான் பொறுப்பு என்று அவர் கூறவேண்டியதில்லை. அவருடன் இது தொடர்பில் உரையாட வேண்டியதுள்ளது என்று சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். தற்போது லண்டனில் உள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச மங்கள சமரவீர, சிறிலங்கா காவல்துறையினரது விசாரணை, தடவியல் சோதனை முடிவுகள் வெளிவராத நிலையில் இராணுவத்தினர் மீது கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. இதற்காக உல்ப் ஹென்றிக்சன் பொய்யர் என்று சொல்லமாட்டேன். அது பொறுப்பற்ற அறிக்கை. இசைக்கு அப்பால் ஒருவர் பாடுகிறார் என்பதற்காக பாடலை மோசம் என்று கூறமாட்டோம். அதுபோல்தான் கண்காணிப்புக் குழுவும். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு மீது நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். தற்போதைய நிலைமைகளில் கண்காணிப்புக் குழுவினரது பங்கு காத்திரமானது. இச்சூழ்நிலையில் கண்காணிப்புக் குழுவினர் பக்கச்சார்பற்று சுயாதீனமான முறையில் செயற்பட வேண்டும் என்றார். நீதித்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது எமக்கு இடையூறு செய்துள்ளது. நீதித்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏன் அவசரமாக இந்த முடிவுக்கு கண்காணிப்புக் குழுவினர் வந்தனர் என்று சமதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தெரிவித்துள்ளார். அரசாங்கப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், இத்தகைய முடிவுகளை வெளியிட கண்காணிப்புக் குழுத் தலைவர் தகுதியற்றவர். படுகொலைச் சம்பவம் நடந்த பிரதேசமானது ஓகஸ்ட் 2 முதல் 5 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. படுகொலையானது 3 ஆம் நாள் இரவு அல்லது 4 ஆம் நாள் காலை நடைபெற்றிருக்கக்கூடும் என்றார். கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையை நிராகரிப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் திணைக்களம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி>புதினம்

இலங்கைக்கு ஜக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை.

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்து நிவாரணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தப் போவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு நேற்று புதன்கிழமை குற்றம்சாட்டியது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கண்டனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் கிளிண்டனின் செயலாளரும் ஆழிப்பேரலைக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியுமான எரிக் சுவர்ட்ஸ் கொழும்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று புதன்கிழமையன்று கூறியதாவது: ஆழிப்பேரலை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளை மீறிய செயல் இது. இந்தப் படுகொலையை சகித்துக் கொள்ள முடியாது. தற்போது மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் பாரிய ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நிவாரணப் பணியாளர்கள் சுதந்திரமாக இயங்கவும் அதே நேரத்தில் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரச்சனைக்குரிய பகுதிகளில் நிவாரணப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நூறுமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர். ஐ.நா. அவசரகால நிவாரணப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜேன் ஈகெலண்ட் கூறியதாவது: மூதூர் அரச சார்பற்ற பணியாளர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை அரசாங்கம் தண்டிக்காதவரை எமது பணிகளை இடை நிறுத்த நேரிடும். பாரிய மனித உரிமை மீறலான இச்சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரது அறிக்கையானது அச்சத்தை அதிகரித்துள்ளது. பிரச்சனைக்குரிய பகுதிகளில் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வோர் நிலை நிச்சயமற்றதாக உள்ளது என்றார். நன்றி>புதினம்.

30 August, 2006

தமிழ்நாடுமாநிலம் எமக்கு எதிராக உள்ளது-மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரோனி பிளேயருடன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பேச்சுக்கள் நடத்துவதாக நோர்வே வானொலியான (என்.ஆர்.கே.பி1) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரை மேற்கோள்காட்டி நோர்வே வானொலி இச்செய்தியைத் தெரிவித்துள்ளது. ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி ஒலிபரப்பிய செய்தி விவரம்: இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண நோர்வே மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் கொள்கையாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் இருந்திருந்தால் சிறிலங்கா ஊடகங்களை நாளாந்த அடிப்படையில் அணுகிக் கொண்டிருப்போம். ஆனால் நாங்கள் இருதரப்பினரையும் சமதரப்பாக பாவிக்கிறோம். இருதரப்பும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தரப்பினர். இருவரையும் சமதரப்பாகத்தான் எங்களால் பாவிக்க முடியும். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி சர்வதேச அளவில் தனிமைப்படுத்தக் கோரும் கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது எமது அணுகுமுறையிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது என்று ஹன்சன் பௌயர் கூறியதாக நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. மேலும், தனது அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் எதிராக உள்ள நிலையில் இனப்பிரச்சனையில் தனது அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்தியா செயற்படுவதற்காக இங்கிலாந்தின் உதவியை மகிந்த ராஜபக்ச கோரியதாகவும் நோர்வே வானொலி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் வன்முறைக்கு எதிராக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன என்றும் நோர்வே வானொலியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நன்றி>புதினம்.

17 பேர் படுகொலைக்கு சிறிலங்கா இராணுவமே காரணம்:

மூதூரில் பிரான்சைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு சிறிலங்கா இராணுவத்தினரே காரணம் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இப்படுகொலை தொடர்பில் இன்று புதன்கிழமை கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ளவை: இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பணி விலகிச் செல்லும் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சன், "இது படுகொலைச் சம்பவம்' என்றும் "உலக அளவில் மனிதாபிமான பணியாளர்களைப் படுகொலை செய்துள்ள மிக மோசமான செயல்" என்றும் கூறியுள்ளதாக அசோசியேற்றற் பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இந்த சம்பவங்களில் சிறிலங்கா இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் பின்னணியில் இருப்பதாக எமது விசாரணைகளில் தெரியவில்லை" என்று கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 17 பணியாளர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணைகளைச சிறிலங்கா அரச அதிகாரிகள் தடுக்க முனைந்தனர் என்றும் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் அனைவருமே இராணுவத்தினர் மீதே குற்றம்சாட்டி வருகின்றனர் என்றும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "பால்கன் நாடுகளில் இத்தகைய சம்பவங்களை சந்தித்த அனுபவம் உள்ளது" என்றும் இரு வாரங்களுக்கு முன்னதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் உல்ப் ஹென்றிக்சன் கூறியுள்ளார். "மூதூர் பிரதேசம் முழுமைக்கும் எம்மைப் பார்வையிட இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. ஆனால் ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ஏன்? பாதுகாப்புக் காரணங்களா? இல்லை. வேறு சில காரணங்கள்" என்றும் உல்ப் ஹென்றிக்சன் குற்றம்சாட்டியுள்ளார். நன்ரி>புதினம்.

இந்தியாவின் அழைப்பை நிராகரித்தது இலங்கை.

மோதலை நிறுத்தும்படி கோரும் இந்தியாவின் அழைப்பு நிராகரிப்பு? சம்பூரைக் கைப்பற்றிய பின்னரே அரசு ஓயுமாம் தற்போதைய மோதல்களை உடனடியாக நிறுத்தும்படி இந்தியாவும் மற்றும் அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் விடுத்த அழைப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது எனவும் திருகோணமலைத் துறைமுகத்தின் பாது காப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சம்பூர்ப் பகுதியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்த பின்னரே ஓய்வது என்பதில் இலங்கை அரசு உறுதியாக இருக் கிறது எனவும் புதுடில்லியில் வெளியான செய்திகள் தெரிவித்தன. இலங்கையில் தற்போதைய மோதல் களைத் தொடர்வதால் நீண்ட காலத்தில் ஏற் படக்கூடிய பின்னடைவுகள் தொடர்பாக இந்தி யாவும், அமெரிக்காவும் தத்தமது கவலையை நேரடியாகவும், வேறு வழிகளிலும் சம்பந் தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவித்துவிட் டன. இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அத்தகவல் தெரி விக்கப்பட்டுவிட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைகளைப் புறக் கணித்துவிட்டுத் திருகோணமலைக்கு அருகே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சம்பூர்ப் பிரதேசத்தைக் கைப்பற்றும் தாக்குதல் நட வடிக்கை ஒன்றைக் கடந்த திங்களன்று முனைப்புடன் ஆரம்பித்து விட்டது இலங்கை. புலிகள் சம்பூரில் நிலை கொண்டிருப்பது தமது திருகோணமலைத் துறைமுகத்துக்கு ஆபத்தானது என்றும் ஆகவே, அதைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் எடுக்கும் இராணுவ நடவடிக்கையை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று சர்வதேச சமூகம் கருதக் கூடாது என்றும் இலங்கை அரசுத் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சாரப்பட புதுடில்லி செய்தி வட் டாரங்கள் நேற்றுத் தகவல்களை வெளியிட் டன. இணைப்பு : newstamilnet.com Wednesday, 30 Aug 2006 USA

மீண்டும் எம்ஜிஆர்சிலைக்கு தார்பூசி கை உடைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாசையூரில் சிறிலங்கா இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இருந்த எம்ஜிஆர் சிலை நேற்று தார்பூசி கை உடைக்கப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை, குருநகர் ஆகிய இடங்களைத் தொடர்ந்து பாசையூரிலும் இந்த காட்டுமிராண்டிச் செயலை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலைகள் சேதப்படுத்துவது குறித்து தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி>புதினம்.

29 August, 2006

ஜெயலலிதா கடும் சீற்றம்.

எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற செயல். இதற்கு தமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். நன்றி>புதினம்

பிரபாகரனின் நிழலைக்கூட தொடஇயலாது-வைரமுத்து.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நிழலைத் தொடக்கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு படுகொலையைக் கண்டித்து சென்னையில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்ற முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் வைரமுத்து ஆற்றிய கண்டன உரை: ஈழத்தின் செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரத்தில் கண்ணீரஞ்சலி செலுத்துவதற்காகவும் சிங்கள வெறித்தனத்துக்கு நம்முடைய கண்டனத்தைத் தெரிவிக்கவும் தமிழர் பேரவை தலைவர் சுப.வீ. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் உள்ள பிஞ்சுக் கால்களைப் பார்த்தால்- இந்தப் படத்தில் சுரைக்காய்களைப் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிஞ்சுப் பிணங்களைப் பார்த்தால்- இவர்கள் போராளிகளுக்காக பயிற்சி பெற்றவர்கள் என்று சொல்லுகிற பொய் உடைகிறது என்பது நாட்டுக்கு விளங்கும். நண்பர்களே! மூன்று வேண்டுகோளோடு இங்கு வந்திருக்கிறேன முதல் வேண்டுகோள்- தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு: கும்பகோணத்தில் நடந்தது தமிழ்நாடு சகித்துக் கொள்ள முடியாத துயரம்- பள்ளிப் பிள்ளைகளின் மரணம். அந்தப் பள்ளிப் பிள்ளைகளின் மரணத்துக்கு தமிழ்நாடே எழுந்து நின்று அழுதது. இந்த செஞ்சோலைப் பிஞ்சுகளின் துயரம் அந்த அளவுக்கு வருத்தியிருக்கிறதா? இல்லையா? என்பதை நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். விபத்துக்கு அழக்கூடிய தமிழன்- ந கொலைக்கு அழமாட்டாயா? என்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி கேட்க வேண்டும். இந்த துயரத்தில் நாம் பங்குகொள்ள வேண்டும். கடைசித் தமிழன் உள்ளவரைக்கும் அங்கு அந்தப் போராட்டம் ஓயவேப் போவதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுகிறேன். சிங்கள இராணுவம் நேற்று ஒப்புக் கொண்டிருக்கிறது- போரால் இந்தப் பிரச்சனையை தீர்த்துவிட முடியாது- போர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை- விடுதலைப் புலிகளை நாங்கள் வெல்ல முடியாது என்று ஒட்டுமொத்தமாக சிங்கள அரசு பதிவு செய்திருக்கிறது. பிரபாகரனின் நிழலைத் தொடக் கூட சிங்கள இராணுவத்துக்கு இயலாது என்பதுதான் உண்மை. சிங்கள அரசுக்கு ஒரு வார்த்தை- யுத்தம் செய்கிறீர்களே- உங்கள் யுத்தத்தில் உணர்ச்சி இருக்கிறதா? தமிழன தன் நிலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- இனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக- தன் உரிமைகளைப் பேணிக் கொள்வதற்காக- தன் பூர்வீக நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக- உணர்ச்சியோடு போராடுகிறான். ஒரு முயலை ஒரு சிங்கம் துரத்திச் செல்கிறது. சிங்கத்தின் வேகம் அதிகமா? முயலின் வேகம் அதிகமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது சிங்கத்தின் வேகம்தான் அதிகமாக இருக்கும் என்று தப்பான தகவல் தரப்பட்டது. சிங்கம் உணவுக்காக ஓடுகிறது. முயல் உயிரைக் காக்க ஓடுகிறது. முயலின் வேகம்தான் சிங்கத்தின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். அதுபோல்தான் சிங்களவர்கள் கூலிக்கு மாரடிக்கிறார்கள்- நம் தமிழர்கள் இனமானம் காக்கப் போராடுகிறார்கள். இந்த உணர்ச்சிகள் இருக்கும் வரை அவர்களை வெல்லவே முடியாது. இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள்- இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்திய இறையாண்மைக்கு நாங்கள் என்றும் பங்கம் விளைவிப்பவர்கள் அல்ல. சட்டப்பேரவையில் முதல்வர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் ஒன்றே போதும் அவரது நெஞ்சின் வலி என்ன என்று. அவரால் இந்திய இறையாண்மைக்குட்பட்டு என்ன வகையில் தன் வலியை- கருத்தை வெளிப்படுத்த முடியும்- ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதை அவர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசே! நீ சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கினால் அங்கு தமிழினம் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும். தமிழர்களுக்கு அதுவிரோதம். ஒருவேளை இந்திய அரசு ஆயுதம் வழங்காததால் பாகிஸ்தானிடம் சிங்கள அரசு ஆயுதம் வாங்கிக் கொண்டால் அது தமிழனுக்கு மட்டும் ஆபத்து அல்ல- இந்தியாவுக்கே அது ஆபத்து என்பதை மறந்துவிடக் கூடாது. சிங்களர்கள் சூழ்ச்சிக்காரர்கள். வங்காள விரிகுடாவில் ஒரு கையை நீட்டி இந்தியாவிடம் உதவி கேட்கிறார்கள். அரபிக் கடலில் ஒரு கையை நீட்டி பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறார்கள். இந்திய அரசே! தெளிவாக இரு! பாகிஸ்தான் ஆயுதம் உள்ளே போகாமல் தடுத்து விடு- தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆயுதம் வழங்கும் எண்ணத்தையே நிறுத்திவிடு. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தால் பிரச்சனைகள் தீரும் என்று போலிக் கனவு காண நாம் தயாராக இல்லை. இது ஒரு அடையாளம். இலங்கைத் தமிழன் அங்கே பாதிக்கப்பட்டால் இங்கேயிருக்கிற தமிழன் சந்தோசத்துடன் விழித்திருக்கிற முடியாது. அவன் மகிழ்ச்சியோடு ஓய்வு கொள்ள முடியாது. அந்த இரத்தம் இங்கே துடிக்கும். அங்கே தசை விழுந்தால் இங்கே இருதயம் துடிக்கும் என்ற உணர்ச்சியை வெளிப்படுத்த இந்த உண்ணாநிலை என்றார் வைரமுத்து. நன்றி>புதினம்.

தமிழக அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி சாடல்.

யுத்தம் தீர்வாகாது: இந்திய வெளியுறவுச் செயலரின் கருத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு இலங்கை இனப்பிரச்சனைக்கு யுத்தம் தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்று தமிழக அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளருமான ஆற்காடு நா.வீராசாமி சாடியுள்ளார். முல்லைத்தீவு செஞ்சோலை படுகொலையைக் கண்டித்து சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தமிழர் பேரவையின் சார்பில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு மின்துறை அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமி இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 23 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் அகதிகளாக இங்கு வருகிறார்கள். சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். வேதனை என்னவென்றால் செஞ்சோலையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று இலங்கை அதிகாரி கூறியுள்ளார். அங்கு போராளிகளின் பயிற்சித் தளம்தான் இருந்தது என்று உண்மைக்குப் புறம்பாக கூறிய செய்தியும் இங்கு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. செஞ்சோலை சம்பவத்தைக் கேள்விப்பட்ட உடன் கலைஞர் மிகவும் வேதனையடைந்தார். உடனே இந்திய அரசைத் தொடர்பு கொண்டு அதற்கு கண்டனம் தெரிவிக்கும்படியும் தமிழர்களை அழிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். செஞ்சோலைக் குழந்தைகள் படுகொலைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. சபையும் கண்டனம் தெரிவித்து அதன் பிரதிநிதியை அனுப்பி அறிக்கை தருமாறும் கேட்டது. அமெரிக்காவும் தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளது. ஆனால் இன்னும் குண்டுகளை வீசி குழந்தைகளை அழித்து வருகிறார்கள். அதனால் அங்கிருந்து அகதிகளாக தமிழர்கள் இங்கு வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை நன்றாகப் பராமரித்து வருகிறது. அவர்களின் வேதனைக் கண்டு நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அங்கிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு வேண்டும். சண்டை தீர்வாகாது என்று இந்திய வெளியுறவுச் செயலர் சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து. தற்போது இலங்கையில் தமிழ் மக்கள்- பசியால் பட்டினியால் மருந்தில்லாமல் மிகவும் துன்பப்படுகிறார்கள். அங்கு தமிழினமே அழியும் நிலையில் உள்ளது என்று கலைஞரிடத்தில் அங்கிருந்து வந்த சகோதரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே ஒருமுறை தி.மு.க.சார்பில் உணவுப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பிய போது அந்நாட்டரசு மறுத்துவிட்டது. இந்திய அரசின் நடவடிக்கைகள் ஆறுதல் தருவதாக இல்லை. இந்திய அரசு தலையிட்டு போரை நிறுத்தி போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்ற வேண்டும். தனி ஈழம் கிடைப்பதற்குள் அங்குள்ள தமிழர்களே இருக்கமாட்டார்களோ- தமிழினமே அழிந்துவிடுமோ என்கிற அச்சம் இருக்கிறது. எனவே இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஆற்க்காடு வீராசாமி. நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் கொன்றுவிட்டு அதற்கு சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் கோழைத்தனமானது. ஈழத் தமிழர்கள் விடியலையும் சுதந்திரக் காற்றையும் விரைவில் சுவாசிப்பார்கள் என்றார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது: கும்பகோணம் தீ விபத்தில் மாணவிகள் எரிந்தபோது தமிழ்நாடே எழுந்து அழுதது. செஞ்சோலையில் மாணவிகள் கொல்லப்பட்டபோது அப்படி நிகழ்ந்ததா என்பதை நம் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும். விபத்துக்கு அழுகின்ற தமிழன் கொலைக்கு அழமாட்டானா? விடுதலைப் புலிகளை வெல்லவே முடியாது என்று சிங்கள இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமே! நாங்கள் இந்தியாவின் இறைமைக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திலே இறைமைக்கு உட்பட்டு கண்டனத் தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றியுள்ளார் என்பது அவரது வலியை வெளிப்படுத்துகிறது. இந்திய அரசே! சிங்களவருக்கு ஆயுதம் கொடுப்பது தமிழருக்கு விரோதம். இந்தியா ஆயுதம் கொடுக்காதபோது பாகிஸ்தானிடம் சிங்களவர் ஆயுதம் வாங்குவது இந்திய இறைமைக்கு விரோதம். சிங்களவன் சூழ்ச்சிக்காரன். வங்களா விரிகுடாவிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். அரபிக் கடலிலும் கையை நீட்டி ஆயுதம் கேட்கிறான். சிங்கள இராணுவத்தால் பிரபாகரனின் நிழலைக் கூட தொட முடியாது. அன்னை சோனியா காந்தி அவர்களே! நீங்கள் தியாகத்தின் உருவம். எங்கள் தமிழ் மண்ணில் உங்கள் கணவரை இழந்தீர்கள். நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள், மானம் எல்லாம் எரிக்கப்பட்டது. நீங்கள் உங்கள் கணவரை இழந்தீர்கள். ஆனால் நீங்கள் தியாகத்தின் உருவம். ஏன் தெரியுமா? உங்கள் மாமியாரை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தவரை மன்னித்து அந்த சீக்கிய இனப் பிரமுகரையே இந்திய பிரதமராக்கினீர்களே அதற்குத்தான் நீங்கள் தியாகத்தின் உருவம். பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்ததற்காக அல்ல. அந்த சீக்கிய இனத்தின் மீது காட்டிய கருணையை எங்கள் தமிழினத்தின் மீது காட்டக் கூடாதா? என்றார் வைரமுத்து. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் மு.நாகநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கவிஞர்கள் அறிவுமதி, பொன்.செல்வகணபதி, மு.மேத்தா, இயக்குநர்கள் சீமான், செல்வபாரதி, குகநாதன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணி பொருளாளர் கயல் தினகரன், மாநில தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், தி.மு.கவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உசேன், ஜெ.அன்பழகன், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் சி.ஆர்.பாஸ்கரன், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள், தியாகராய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பெருந்தொகையான எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைக்கிறார். இதனிடையே அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க 8 ஆவது மாநில மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கத்துக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு செஞ்சோலைப் பகுதியில் ஆதரவற்ற சிறுமிகள் மீது குண்டுகளை வீசி 55 மாணவிகளைக் கொன்றும் மேலும் 195 மாணவிகளைப் படுகாயத்திற்குள்ளாக்கிய இலங்கை இராணுவத்தினரைக் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்நாடு தலித் பெண்கள் இயக்க நிர்வாகி பெர்னார்ட் பாத்திமா, தமிழ்நாடு அன்னையர் முன்னணி தலைவர் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காந்தி நகரில் நேற்று திங்கட்கிழமை அப்பகுதி பொதுமக்களால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரியூட்டி அழிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு அக்கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். நன்றி>புதினம்.